
”இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்”
”எமது நாடு… எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா” என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது.
தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது ராஜீய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
‘ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை’
இது ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
”29ம் தேதி இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30ம் தேதி மற்றுமொரு படகில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 29ம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கடற்படைக்கு நாங்கள் அறிவித்து, படகொன்றை விரைவில் அனுப்பி அவர்களை காலிக்கு அழைத்து வந்தோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்”
”இது இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு அல்லது இந்தியாவின் வேறு தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்” என்கிறார் ரத்ன கமகே.

”அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர் போலீஸ் தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்” என்கிறார் ரத்ன கமகே.
எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
”எனினும், இது வெளிநாடொன்றுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், ராஜீய ரீதியில் இதற்கு தீர்வு காண வேண்டும்” என அவர் கூறுகின்றார்.

நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் என்ன சொல்கின்றார்?
இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் காலி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது.
வெல்லமன்கரய மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற சிலாபம் – தொடுவாவ பிரதேசத்தின் ‘தினிதி துவ’ பெயரை கொண்ட இரண்டு படகுகள் மற்றும் ‘சந்துன் புதா’ ஆகிய மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
‘தினிதி துவ 1’ மற்றும் ‘தினிதி துவ 2’ ஆகிய இரண்டு படகுகளில் சென்றவர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தொழில் செய்து, மீண்டும் வெண்ணப்புவ நோக்கி வருகைத் தந்துகொண்டிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்துடன், தியேகோ கார்சியா தீவுக்கு அருகில் வைத்து ஜனவரி மாதம் 30ம் தேதி சந்துன் புதா படகில் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில் இந்திய கடற்படையினருடன் சிங்கள மொழியை பேசிய இரண்டு நபர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் இந்திய கடற்படைக்கு மொழிபெயர்ப்பு உதவிகளை செய்துள்ள நிலையில், அவர்கள் கறுப்பு நிறத்திலான கடற்படை சீருடையை அணிந்திருந்ததாக தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள், இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர்.
இந்திய கடற்படையினர் என கூறப்படும் தரப்பினர் இலங்கை மீனவர்களின் படகுகளை சோதனை செய்துள்ளதுடன், போதைப்பொருள் இருக்கின்றதா என வினவியுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
“இரான் படகு, போதைப்பொருள் குறித்து கேட்டார்கள்”
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
தொடுவாவ, மாரவில, குடா மடுவெல்ல, மாதம்பே, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 18 பேரே இந்த மூன்று படகுகளில் பயணித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம், மீனவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான மீனவரான சுரங்க நிசல், பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
தம்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் செய்மதி தொலைபேசி, இரான் படகு மற்றும் போதைப்பொருள் தொடர்பிலேயே வினவி, தாக்குதல் நடாத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
”சிறிய ரக படகொன்றில் ஐவர் வருகைத் தந்தார்கள். படகை சோதனை செய்து, தாக்குதலை நடாத்தினார்கள். சேட்டிலைட் தொலைபேசி, இரான் படகு, போதைப்பொருள் தொடர்பில் வினவினார்கள். நாங்கள் தெரியாது என கூறிய போதிலும், அவர்கள் தாக்குதலையே நடத்தினார்கள்.” என்கிறார் சுரங்க நிசல்.
அதன்பின்னர், தன்னை கப்பலுக்கு அழைத்து சென்று மீண்டும் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
”இந்த மூன்று பேரையும், படகையும் பணயக்கைதிகளாக எடுக்குமாறு ஒருவர் வந்து கூறினார். நீ என்ன கூறுகின்றாய் என கேட்டார். ‘அவர்களை கொலை செய்தாலும், என்னை கொலை செய்தாலும் என்னால் இதை மாத்திரமே கூற முடியும்’ என நான் கூறினேன். ‘எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒன்றையும் கொண்டு வரவும் இல்லை. ஒன்றும் கிடைக்கவும் இல்லை.’ என கூறினேன்”
”அதிலிருந்த சிங்களவர்கள் இருவர் என்னிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தினார்கள். சிங்களவர்களும் எம்மீது தாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்”
”எம்மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்தில், ‘என்னால் கூறுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை’ என்று கூறினேன். அதன்பின்னர் ‘இவர்களிடம் ஒன்றும் இல்லை’ என கூறி விடுவித்தார்கள்”
தாக்குதலை நடத்திய கப்பலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமா என தாக்குதலுக்கு இலக்கான மீனவரிடம் வினவிய போது, ”கப்பலில் 55 என்ற இலக்கம் இருந்தது. ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. எனக்கு நினைவில்லை” என குறிப்பிட்டார்.
”அதில் இந்தியர்கள் இருந்தார்கள் என்பதை நூறு வீதம் உறுதியாக என்னால் கூற முடியும். இந்தியாவின் கப்பல் என என்னால் கூற முடியும். அதில் தமிழர்களும் இருந்தார்கள். தலையில் துண்டை கட்டிய பஞ்சாபியர்களும் இருந்தார்கள். ஹிந்தி மொழியிலும் கதைத்தார்கள். தமிழ் மொழியிலும் கதைத்தார்கள். சிங்களவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இரண்டு சிங்களர்களுமே என்னிடம் விசாரணை செய்தார்கள். இரண்டு சிங்களவர்களும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். கொண்டு வந்ததை கூறுமாறு சொல்லி தாக்கினார்கள். இல்லையென்றால் நிச்சயமாக கொலை செய்வோம் என அச்சுறுத்தினார்கள்”
இந்த கப்பலில் 75 முதல் 100 பேர் வரை இருந்தார்கள் என சுரங்க கூறுகின்றார்.

இலங்கை கடற்படை கூறுவது என்ன?
கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய, மருத்துவ நடவடிக்கைகளுக்காக இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சம்பத் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு கடற்படையினர் ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார்.
”இலங்கையின் தெற்கு பகுதிக்கு சென்றே இவர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் கூறும் இடம், தாக்குதல் நடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து கடற்படையினர் உறுதிப்படுத்திய பின்னரே கூற முடியும்.”
”ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடலோர காவல்படை என கூறுகின்றனர். இன்னுமொரு தருணத்தில் இந்திய கடற்படை என கூறுகின்றார்கள்.”
”நாங்கள் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைக்கு ஆதரவை வழங்குவோம். அந்த இடத்தில் யார் இருந்தார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்திய பின்னரே எங்களால் அதனை கூற முடியும்” என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
பட மூலாதாரம், Getty Images
கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில்
இந்த விடயம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளது.
இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை பிரிவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வினவப்படுகின்றதே தவிர, அரசாங்கத்தினால் உரிய முறையில் இதுவரை தம்மிடம் அறிவிக்கப்படவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு