சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை மாநிலச் செயலாளர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவார். 2015-ல் மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகும் தொடர்ந்து 2 முறை மாநிலச் செயலாளராக அவரே தேர்வு செய்யப்பட்டு, மொத்தம்
9 ஆண்டுகள் பணியாற்றினார்.
இந்நிலையில், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தற்போதைய மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 31 மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், 3 நிரந்தர அழைப்பாளர்கள் என மொத்தம் 34 பேர் ஒருமனதாக அவரை தேர்வு செய்தனர்.
அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள். இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசனுக்கு நன்றி. ஒடுக்கப்பட்டமக்களின் உயர்வுக்காக பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வீரபாண்டியன் கடந்த 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் துணை அமைப்பான தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ‘‘எங்கள் கட்சிக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அதிக இடங்களை பெறும் காலச்சூழலை நோக்கி நாங்களும் நகர்வோம்’’ என்று அவர் கூறினார்.