இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.
லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இப்போது சாம்பியனும் ஆகியிருக்கிறது.
மிகமுக்கியமான இந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்தது இந்திய அணி. இந்த வெற்றியைப் பெற முக்கியமான கட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றவேண்டியிருந்தது, பெரும் எழுச்சியைக் காணவேண்டியிருந்தது, உறுதியாகப் போராடவேண்டியிருந்தது. இந்த அணி அவை அனைத்தையுமே செய்திருக்கிறது.
இறுதிப் போட்டியில் நல்ல தொடக்கம்
நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஓப்பனர்கள் ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவருமே இந்த இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்கினார்கள். 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது இந்த ஜோடி.
மரிசான் காப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி மந்தனா எதிர்கொண்டார். வழக்கமாக அவருடன் ஓப்பனராகக் களமிறங்கிய பிரதிகா ராவல் தான் முதல் பந்தை எதிர்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கூட ஷஃபாலி தான் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், இந்தப் போட்டியில் அது மாறியிருந்தது.
இறுதிப் போட்டிக்கு முன் பிபிசி தமிழிடம் பேசிய சென்டர் ஆஃப் எக்சலன்ஸைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், “மரிசான் காப் வீசும் இன்ஸ்விங்கர்கள் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். உள்ளே வரும் பந்துகள் வழக்கமாக வலது கை பேட்டர்களுக்கு சிக்கல் விளைவிக்கும். அதிலிருந்து ஷஃபாலியைக் காப்பதற்காக ஸ்மிரிதி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல் ஓவரில் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் அதை மெய்டனும் ஆக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்மிரிதி – ஷஃபாலி இணை முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது
ஸ்மிரிதி அவ்வளவு பாதுகாப்பாக இன்னிங்ஸைத் தொடங்க, தன் வழக்கமான பாணியில் இன்னிங்ஸை ஆரம்பித்தார் ஷஃபாலி. அயபோங்கா ககா வீசிய முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டி தன் ரன் கணக்கைத் தொடங்கினார்.
நான்காவது ஓவருக்குப் பிறகு இவர்கள் இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் ரன்ரேட் ஆறுக்கும் அதிகமாகவே இருந்துவந்தது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தடுமாற, 18வது ஓவரிலேயே ஆறாவது பௌலரைப் பயன்படுத்தினார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட்.
அப்படி ஆறாவது பௌலராக பந்துவீசிய டிரையான் தான் அந்த அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருந்தாலும், மிகப் பெரிய இறுதிப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது இந்த தொடக்க ஜோடி.
இரண்டாவது போட்டியிலேயே தாக்கம் ஏற்படுத்திய ஷஃபாலி
வழக்கமாக அதிக பந்துகளை தூக்கி அடிக்கும் ஷஃபாலி வெர்மா, இந்த அதிமுக்கிய இறுதிப் போட்டியில் சற்றே கூடுதல் கவனத்துடன் விளையாடினார். நிறைய பந்துகளை தரையோடு அடிக்கவே பார்த்தார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சாளர் யார் என்று பார்த்துத்தான் தன் அணுகுமுறையையும் தேர்வு செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மிக இளம் வயதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியது ஷஃபாலி தான்
போட்டிக்கு முன்பு பேசியிருந்த ஆர்த்தி சங்கரன், மரிசான் காப் தவிர்த்து இடது கை ஸ்பின்னர் மலாபாவை கவனமாக எதிர்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார். ஷஃபாலி அப்படி கவனமாக ஆடியது போலத்தான் இருந்தது. மலாபா தனக்கு வீசிய 17 பந்துகளில் ஒன்றை மட்டுமே பௌண்டரி ஆக்கினார் ஷஃபாலி. அதுவும் முதல் பவர்பிளேயில் வீசப்பட்ட பந்தில். அதன்பிறகு அவர் பௌண்டரி அடிக்க நினைக்கக்கூட இல்லை. மலாபாவை கவனமாகத்தான் அவர் எதிர்கொண்டிருந்தார்.
அதேசமயம் அவருக்கு நல்ல ‘விட்த்’ (width) கிடைக்கும் பந்துகளைத் தண்டிக்கவும் அவர் தவறவில்லை. நன்கு கணித்து திட்டமிட்டு அவர் இந்த இன்னிங்ஸை கட்டமைத்தார்.
49 பந்துகளில் அரைசதம் அடித்த ஷஃபாலி, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்கள் (78 பந்துகள்) அடித்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
தீப்தியின் மற்றுமொரு அரைசதம்
ஷஃபாலி அவுட்டாகி சரியாக 11 பந்துகள் கழித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24 ரன்கள்) வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சற்று பொறுமையாக ஆடத் தொடங்கினார். அதனால் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 28வது ஓவர் முடிவில் 5.92 ஆக இருந்த ரன்ரேட், 32வது ஓவர் முடிவில் 5.46 என்றானது. ஆனால் இது மோசமடையாமல் பார்த்துக்கொண்டார் தீப்தி ஷர்மா.
மரிசான் காப் வீசிய 33வது ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தன்னுடைய ரன் வேகத்தைக் கூட்டினார் அவர். அதனால் இந்திய அணியின் ரன்ரேட் மறுபடியும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டான பிறகும் கூட தீப்தி சீரான வேகத்தில் ரன் சேர்த்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியின் ரன்ரேட் பாதிக்காத வகையில் ஆடினார் தீப்தி ஷர்மா
53 பந்துகளில் அரைசதம் அடித்த தீப்தி ஷர்மா, 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.
இடையே ரிச்சா கோஷ் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா ககா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ரன் அவுட் மூலம் கிடைத்த முதல் விக்கெட்
299 என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் இருவரும் நிதானமாகவே இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 18 ரன்களே எடுத்திருந்தது. அதன்பிறகு இருவருமே வேகமெடுக்கத் தொடங்கினார்கள்.
8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 50 ரன்களைக் கடந்தது. இது பெரிய பார்ட்னர்ஷிப்பாக உருவெடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், பிரிட்ஸ் ரன் அவுட் ஆனார். மிட் ஆன் திசைக்கு அவர் அடித்துவிட்டு ஓட, அங்கு நின்றிருந்த அமஞ்சோத் கவுர் டைரக்ட் ஹிட் அடித்து அவரை அவுட்டாக்கினார். அதுமட்டுமல்லாமல், நேராக எதிர் முனைக்கு ஓடாமல், கோணலாக பிரிட்ஸ் ஓடியதும் ரன் அவுட்டுக்குக் காரணமாக அமைந்தது. 17.7 மீட்டர் தூரத்தில் கிரீஸை அவர் அடைந்திருக்கலாம். ஆனால் கோணலாக ஓடியதால் 19 மீட்டர் ஓடியும் அவரால் கிரீஸுக்குள் வர முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமஞ்சோத் செய்த ரன் அவுட் இந்தியாவின் விக்கெட் தேடலுக்கான முதல் பதிலாக அமைந்தது
பிரிட்ஸின் மோசமான ரன் அவுட், அமஞ்சோத்தின் சிறந்த ஃபீல்டிங் இரண்டும் சேர்ந்து இந்தியாவின் முதல் விக்கெட்டுக்கான தேடலுக்குப் பதில் கொடுத்தன.
ஆனால், அமஞ்சோத்தின் நல்ல ஃபீல்டிங் மட்டுமல்லாமல், அதே ஓவரில் ஜெமிமா செய்த நல்ல ஃபீல்டிங்குமே இந்த விக்கெட்டுக்கு வழிவகுத்தது. அதற்கு முந்தைய பந்தை கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தார் பிரிட்ஸ். ஆனால், அதை ஜெமிமா சிறப்பாகத் தடுத்துவிட அவரால் ரன் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அடுத்த பந்திலேயே அவர் அந்த ஒற்றை ரன்னைத் தேட அந்த விக்கெட் கிடைத்தது. “ஜெமிமா அந்த சிங்கிளைத் தடுத்தது இந்த விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது” என வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கூறினார்.
அந்த விக்கெட்டுக்குப் பிறகு மிக விரைவாக இரண்டாவது விக்கெட்டும் கிடைத்தது. ஃபீல்டிங்கில் 2 கேட்ச்களைத் தவறவிட்டிருந்த பாஷ், பேட்டிங்கிலும் தடுமாறினார். 6 பந்துகள் சந்தித்தது ரன் ஏதும் எடுக்காமல் ஶ்ரீ சரணியின் பந்துவீச்சில் வெளியேறினார்.
பந்துவீச்சிலும் கைகொடுத்த ஷஃபாலி
இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் இடம்பிடிக்காத ஷஃபாலி வெர்மாவுக்கு, கடந்த சில நாள்கள் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பிரதிகா ராவல் காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தவர், ஆடிய இரண்டாவது போட்டியிலேயே 87 ரன்கள் எடுத்தார். ஆனால், பேட்டிங் மட்டுமல்லாமல் இந்த இறுதிப் போட்டியில் பந்துவீச்சிலும் இந்திய அணிக்குக் கைகொடுத்தார் ஷஃபாலி வெர்மா.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சிலும் அசத்தினார் ஷஃபாலி
அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான ஷஃபாலி வெர்மாவை பந்துவீச அழைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பந்திலேயே சுனே லீஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால், ஷெஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனையான மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.
பந்தின் வேகத்தை நன்கு கூட்டி குறைத்து தன் பந்துவீச்சில் வித்தியாசம் காட்டினார் ஷஃபாலி வெர்மா. இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு நின்று வந்ததால், அவர் வேகத்தைக் குறைத்தபோது தென்னாப்பிரிக்க பேட்டர்களால் அதை கணிப்பது கடினமாக இருந்தது.
போராடிய வோல்ஃபார்ட், ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தீப்தி
ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் உறுதியாகப் போராடினார். சீரான இடைவெளிகளில் பௌண்டரிகளை அவர் பௌண்டரிகள் அடித்துக்கொண்டே இருக்க தேவைப்படும் ரன் ரேட் ஓரளவு கட்டுக்குள்ளேயே இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அரையிறுதி, இறுதி என தொடர்ந்து இரு பெரிய போட்டிகளிலும் சதமடித்திருக்கிறார் வோல்ஃபார்ட்
45 பந்துகளில் அரைசதம் அடித்த வோல்ஃபார்ட், 96 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் அவர். என்னதான் சதம் அடித்தாலும், வெற்றியை இலக்காகக் கொண்டிருந்ததால் அவர் கொண்டாடவில்லை.
இந்தியா பேட்டிங்கில் எப்படி சற்று பின்தங்கியபோது தீப்தி முன்னாள் வந்து இந்திய ரன்ரேட்டை மறுபடியும் உயர்த்தினாரோ, அதேபோல் பந்துவீச்சிலும் அதைச் செய்தார் தீப்தி. 42வது ஓவர் வீசவந்த அவர், இந்தியாவின் கை மீண்டும் ஓங்குவதற்குக் காரணமாக அமைந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை வோல்ஃபார்ட் தூக்கி அடிக்க, தட்டுத் தடுமாறி அந்தப் பந்தைப் பிடித்தார் அமஞ்சோத் கவுர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார் தீப்தி ஷர்மா
ஆனால், தீப்தியின் விக்கெட் வேட்டை அதோடு முடிந்திருக்கவில்லை. மூன்று பந்துகள் கழித்து இன்னொரு முன்னணி வீராங்கனையான டிரையானையும் அவுட்டாக்கினார் அவர். அது தென்னாப்பிரிக்காவுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
லீக் சுற்றில் இந்தியாவுக்கு சவாலாக விளங்கிய நெடீன் டி கிளார்க் இந்தப் போட்டியிலும் போராடிப் பார்த்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜெமிமா தவறவிட்டது ஆட்டத்தை இன்னும் பரபரப்பாக்கியது. ஆனால், மறுபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்த நிலையில், ஒரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து அவரும் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனது.
87 ரன்கள் அடித்ததோடு இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷஃபாலி வெர்மா இந்தப் போட்டியின் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வென்றார். போட்டிக்குப் பின் பேசிய அவர், “என்னை கடவுள் ஏதோவொரு காரணத்துக்காகத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன். அது இன்று பிரதிபலித்துவிட்டது. இது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். என்னால் நிதானமாக இருக்க முடிந்தால், எல்லாமே செய்ய முடியும் என்று நம்பினேன்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் – தீப்தி ஷர்மா
இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ‘பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்’ விருது வென்றார். இந்த உலகக் கோப்பையில் 3 அரைசதங்கள் உள்பட தீப்தி 215 ரன்கள் எடுத்தார். மேலும், 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை தீப்தி தான்.