பட மூலாதாரம், BBC/Getty
-
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
-
“அப்போது நான் 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து ஊரில் நடந்த ஓவியப் போட்டிக்கு பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றார்கள். அதில் நான் வெற்றி பெற்றேன்.”
“ஆனால், ‘காலனியை சேர்ந்த மாணவியின் ஓவியத்தை’ தேர்வு செய்த நடுவர்களை சில ஆசிரியர்கள் கடிந்துகொண்டார்கள். பிறகு என்னைப் புறக்கணித்துவிட்டு, அவர்களது ஊரைச் சேர்ந்த வேறு மாணவிக்குப் பரிசு வழங்கினார்கள்.”
திருநெல்வேலியை சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான தர்ஷினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்தப் புறக்கணிப்புக்குப் பிறகு ஓவியம் வரைவதையும் போட்டிகளில் பங்கெடுப்பதையும் மொத்தமாக நிறுத்திவிட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“சாதிய மனப்பான்மை ஒரு சமூக மனநோய். அது இப்படிப் பல திறமைகளை குழிதோண்டிப் புதைத்துள்ளது. அந்த மனநிலையுடன் இருப்போருக்கு உளவியல் சிகிச்சை மிகவும் அத்தியாவசியமானது.”
சர்வதேச மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான முனைவர் சூரஜ் யெங்டேவின் வார்த்தகைகள் இவை.
இந்திய சமூகத்திலுள்ள சாதிய கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் தரம் எனப் பல பரிமாணங்களில் ஏற்படுத்தும் சீர்கேடுகள் அதிகம் விவாதிக்கப்படுகின்றன.
ஆனால் உளவியல்ரீதியாக, “ஆபத்தான வகையில் சாதி தாக்கம் செலுத்தி வருகிறது. அதுகுறித்துப் பேசப்படுவது மிகக் குறைவே” என்கிறார் சூரஜ் யெங்டே.
சாதி வன்முறைகள்: இந்தியாவில் நிகழும் தொடர்கதை
திருநெல்வேலி, கடலூர் என தமிழ்நாட்டின் இரு வேறு பகுதிகளில் சமீபத்தில் சாதியின் பெயரால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்தியாவில் ஆணவக் கொலைகள் மட்டுமின்றி சாதிய ரீதியிலான வன்முறைத் தாக்குதல்களும் தொடர் கதையாகவே இருப்பதை தேசிய குற்ற ஆவணக் காப்பக பதிவேடுகள் உணர்த்துகின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி, 2020 முதல் 2022 வரையிலான மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் 1,366 சாதி மோதல்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 75 சாதி மோதல்கள் பதிவாகியுள்ளன. அதில், 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் அந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 158,773 வழக்குகள், பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பதிவாகியுள்ளன. அதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 41,228 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 4,412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்படியாக, ஆணவக் கொலைகள், சாதிய வன்முறைகள் தொடங்கி, தினசரி வாழ்வில் சத்தமின்றிக் கடைபிடிக்கப்படும் பாரபட்சமான பழக்க வழக்கங்கள் வரை அனைத்துமே தலித் மக்களை உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கிறது.
‘மன உளைச்சலில்தான் இருக்கிறோம், அதற்கு என்ன செய்வது?’
சாதிய வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளால் ஏற்படும் மனநல பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 16 நடுத்தர வயதுப் பெண்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
அவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே தாங்கள் பல ஆண்டுகளாகக் கடும் மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அதே வேளையில், “சாதிய பாகுபாடுகளை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே பல தலைமுறைகளாகப் பார்த்து வந்ததால், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளும் தங்கள் ‘விதி’ (Fate) என்றே நம்புவதாக” பலரும் தெரிவித்தனர்.
ஆனால், ஒரு சிலர் அதன் விளைவுகளை அனுபவித்த போதிலும், அதற்கு எங்கு, எப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது என்று அறியாமல் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தில் 80 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவிலில், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரிகள் தலையீட்டைத் தொடர்ந்து தலித் மக்கள் கோவில் நுழைவை மேற்கொண்டனர்.
அதை விரும்பாத பிற சாதியினர், தங்கள் பகுதியில் தனிக் கோவில் ஒன்றைக் கட்டிக் கொண்டனர். “அது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்றும், “அந்த அளவுக்கு சாதி மீதான வெறிபிடித்த மனநிலை தனது கிராமத்தில் நிலவி வருவதாகவும்” தலித் சமூகத்தைச் சேர்ந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தார்.
தனது இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில், கோவில் நுழைவில் மட்டுமின்றி, பல்வேறு விதமான பாகுபாடுகளை, வன்முறைகளை எதிர்கொண்டுள்ளதாக சந்திரா கூறுகிறார். குழந்தைகளைக்கூட அவர்களின் சாதிப் பின்னணியை வைத்து அடையாளப்படுத்துவது உள்படப் பல்வேறு நடத்தைகள் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றை எதிர்கொள்வதால் தாம் பல ஆண்டுகளாகவே கடுமையான மன உளைச்சலை தினசரி அனுபவித்து வருவதாகவும் கூறினார்.
“மன உளைச்சலில்தான் இருக்கிறேன். என்ன செய்வது? அதற்குக்கூட சிகிச்சை உள்ளதா? அதை எங்கே பெறுவது?” என்பதுதான் சந்திராவின் கேள்வி. சந்திரா மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களில் பலரின் நிலை இதுதான் என்கிறார், தி ப்ளூ டான் எனப்படும் தலித் மக்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பின் நிறுவனர் திவ்யா கண்டுகுரி.
அவரது கூற்றுப்படி, இன்றளவும் கிராமப்புறங்களில் உள்ள குழாயடிக் கூடல்தான் பெண்களின் உளவியல் ஆதரவுக் குழு(Support Group).
“தண்ணீர் எடுப்பதற்காகக் குழாயடிகளில் கூடும்போது பெண்கள் புரணி பேசுவதாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், அவர்கள் அங்குதான் தங்கள் கணவரால் நிகழும் குடும்ப வன்முறையை, தனது குழந்தை பள்ளியில் எதிர்கொண்ட பாகுபாட்டை எனத் தமது பிரச்னைகளைப் புலம்பித் தீர்க்க முடிகிறது.”
அது தவிர்த்து, முறையான உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சை என்பது கிராமப்புற பெண்கள், குறிப்பாக தலித்துகள் மத்தியில் இன்னும் சென்று சேரவில்லை என்கிறார் திவ்யா.
அதிக மனநல பாதிப்புகளை அனுபவிக்கும் தலித் மக்கள்
பட மூலாதாரம், Getty Images
சமூகரீதியாக உள்ள பாகுபாடுகள் மக்களின் மனநலன் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணற்ற வடிவங்களில் இருப்பதாகக் கூறுகிறார், அமெரிக்காவின் ஹார்வர்ட் டி.ஹெச்.சான் பொது சுகாதாரப் பள்ளியின் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை துறை பேராசிரியர், முனைவர் விக்ரம் படேல்.
மேலும், இந்திய சமூகத்தில் நிலவும் சமத்துவமற்ற சூழல் காரணமாக அத்தகைய பாதிப்புகளை தலித் சமூகங்கள் அதிகம் அனுபவிப்பதாகவே தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு குழந்தை வளரக்கூடிய சமூக சூழல், அதன் வளர்ச்சி மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் பேராசிரியர் விக்ரம் படேல். அதுமட்டுமின்றி, இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் 100 பேரில் 3.9 பேர் மனச்சோர்வை எதிர்கொண்டு வருவதாகவும் அவரது ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை, “பட்டியல் பழங்குடிகளில் 71 சதவிகிதமும், பட்டியல் சாதி குடும்பங்களில் 49 சதவிகிதமும், வறுமைக் கோட்டிற்குக் கீழே, ஏழ்மை மற்றும் மோசமான ஏழ்மையில் இருப்பதாக” 2019-21ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 5வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு கூறுகிறது.
இதன் மூலம், மனச்சோர்வுக்கு ஆளாகும் மக்களில் அதிகமானோர் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சாதி அடிப்படையில் மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் பாதிப்புகள் குறித்த தெளிவான தரவுகள் கிடைக்கவில்லை.
மாணவர்களின் அடையாளத்தையே பறிக்கும் உளவியல் சிக்கல்கள்
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டப்பிரிவில் பயின்று வந்த இடதுசாரி மாணவர் தலைவரான கேரளாவை சேர்ந்த கே.எஸ்.ராம்தாஸ் தவறான நடத்தைக்காக இரு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த மே மாதம், உச்சநீதிமன்றம் அவரது இடைநீக்க காலத்தைக் குறைத்து, மீண்டும் கல்வி பயில அனுமதித்தது.
கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மீதான ஆதிக்க சாதி மனப்பான்மை மற்றும் பாகுபாடுகள் பெருமளவில் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவர்கள் கடும் மனச்சோர்வுக்கு ஆளாவது தொடர்கதை என்றும் பிபிசி தமிழிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
கல்வி நிறுவனங்களில் நிகழும் மாணவர் தற்கொலைகளுக்கு சாதி ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ராம்தாஸ், “அரசு மீது விமர்சனங்களை வைத்தமைக்காகவும், போராட்டங்களில் ஈடுபட்டமைக்காகவும் என் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த நேரத்தில், ஏற்கெனவே இட ஒதுக்கீட்டை விமர்சித்து வந்த சாதி இந்து மாணவர்களின் வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் ‘நான் ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கிறேன்?’ என்பன போன்ற வெறுப்பு நிறைந்த கருத்துகள் பகிரப்பட்டதை நான் கண்கூடாகப் பார்த்தேன்” என்கிறார் ராம்தாஸ்.
இந்த அனுபவங்கள் கடும் மனச்சோர்வை ஏற்படுத்தியதாகவும், அதற்கான உளவியல் சிகிச்சைகளை தானும் தனது குடும்பத்தினரும் இன்னமும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“போராட்டங்களில் மன உறுதியுடன் முன்வரிசையில் நிற்கும் என்னையே இவை இந்த அளவுக்கு பாதிக்கும்போது, கல்வி நிறுவனங்களில் மௌனமாக இத்தகைய பாகுபாடுகளை அனுபவித்து வரும் மாணவர்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்!” என்கிறார் ராம்தாஸ்.
ராம்தாஸ் மட்டுமின்றி, சென்னையில் செயல்படும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவரும் இதுகுறித்துப் பேசினார்.
“இன்றளவும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு சதவிகிதத்தைக் குறியீடாக வைத்து, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிப் பிரிவினரை அடையாளப்படுத்தும் உணர்வற்ற போக்கு தொடரவே செய்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இத்தகைய அணுகுமுறைகளும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அடிப்படையாக வைத்து நிகழும் பாகுபாடுகளும் மாணவர்களின் சுய அடையாளத்தையே பறிக்கிறது” என்கிறார் சூரஜ் யெங்டே.
அதுமட்டுமின்றி, சாதிப் பிரச்னையால் ஏற்படும் பாதிப்புகள் சிகிச்சை பெற்றவுடன் முடிந்துவிடுவது இல்லை என்றும் கூறுகிறார் அவர்.
அதாவது, “இன்றளவும் கிராமப்புறங்களில் குழந்தைகளை சாதியைக் கொண்டு அடையாளப்படுத்துவது தொடர்கிறது. இப்படியாக அனைத்து வடிவங்களில் நிகழும் பாகுபாடுகளுமே அன்றாடம் நிகழ்பவைதான்.
அதனால் பாதிக்கப்படும் ஒருவர் உளவியல் சிகிச்சை பெற்றாலும், அதன் பிறகு மீண்டும் அப்படியொரு சமூகத்திற்குள்தான் அவர் மீண்டும் நுழைகிறார். அப்போது அந்தப் பாகுபாடுகளையே மீண்டும் அனுபவிக்க வேண்டும். இதுவொரு சங்கிலித் தொடர்,” என்கிறார் அவர்.
சூரஜின் கூற்றுப்படி, அது உடைபட வேண்டுமெனில் சாதிய மனநிலை கொண்டவர்களுக்கு முதலில் உளவியல் சிகிச்சைகளை வழங்க வேண்டும்.
மனநல மருத்துவத்தில் சாதி புறக்கணிக்கப்படுவது ஏன்?
இப்படியாக சமூகத்தில் நிகழும் பல்வேறு சாதிப் பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள், முனைவர் விக்ரம் படேல் குறிப்பிட்டதைப் போல, மனச்சோர்வு(Depression), மனப் பதற்றம்(Anxiety), மன அழுத்தம் (Stress) உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அது குறிப்பாக, இளம் தலைமுறையினரின், சிறுவர்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதாகவும், அவர்களின் சுய அடையாளம் வடிவமைக்கப்படுவதில் எதிர்மறையாகத் தாக்கம் செலுத்துவதாகவும், இதனால் பலர் தங்களது சுய அடையாளத்தையே இழப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இவ்வளவு தீவிர பாதிப்புகளை சாதி ஏற்படுத்தினாலும், மனநல வல்லுநர்கள் அனைவருக்குமே சாதிய கட்டமைப்பு மற்றும் இந்தப் பிரச்னைகள் குறித்தான புரிதல் இருப்பதில்லை என்பதே திவ்யா கண்டுகுரியின் கருத்தாக உள்ளது.
அதை ஆமோதித்துப் பேசிய மனநல மருத்துவர் ராதிகா முருகேசன், சாதிய புரிதல் கொண்ட மனநல வல்லுநர்களின் பற்றாக்குறை அதிகளவில் இருப்பதாகக் கூறுகிறார்.
பெரியாரிய உளவியல் சிகிச்சை குறித்து நூல் எழுதியுள்ள இவர், “உளவியல் வல்லுநர்கள் மத்தியிலேயே சாதி குறித்துப் பேசினால், அதைத் தவிர்த்துவிட முயலும் நிலைதான் இங்கு நிலவுகிறது.
உளவியல் பாடத் திட்டம் மேற்கத்திய பின்னணியைக் கொண்டது என்றாலும், அதைத் தனிப்பட்ட முறையில் விரிவாக அணுகும் வகையில் மாற்றியமைக்க வேண்டியது அவசியம்,” என்றும் கூறுகிறார் மருத்துவர் ராதிகா.
ஏனெனில், “மனநல மருத்துவத்தில் சாதியத்தைப் புறக்கணிப்பது என்பது தலித் மக்கள் பல தலைமுறைகளாகச் சுமந்து வரும் உளவியல் வடுக்களை மொத்தமாக உணர்வற்ற முறையில் புறக்கணிப்பதற்குச் சமம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Handout
சாதிய பார்வைகொண்ட உளவியல் சிகிச்சை தேவை
மருத்துவர் ராதிகாவின் கருத்தை ஆமோதிக்கும் பிரீத்தி சண்முகப்ரியா, “மேற்கத்திய கல்வி முறையைப் பின்பற்றி வரும் உளவியல் துறையின் பாடத் திட்டங்களில் சாதிய சிகிச்சை முறை புறக்கணிக்கப்படுகிறது,” என்கிறார். இவர் தமிழ்நாட்டில் செயல்படும் மிளிர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.
சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளால் உருவாகும் சமூக–உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கான மனநல ஆதரவு மற்றும் சாதி மறுப்பு குறித்த உளவியல் கல்வியை இளைஞர்களுக்கு வழங்கும் நோக்குடன் தமிழ்நாட்டில் ‘மிளிர்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் நிறுவனர்களான மனநல செயல்முறை சிகிச்சையாளர் பிரீத்தி, அம்பேத்கரிய பெண்ணிய ஆய்வாளர் அஸ்வினி தேவி என இருவருமே, தாங்கள் எதிர்கொண்ட பாகுபாடுகள் மற்றும் அதன் மனநலத் தாக்கங்களுக்கு உரிய உளவியல் உதவி கிடைக்காததே, இந்த அமைப்பைத் தொடங்க வித்திட்டதாகக் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
“சாதி பலவிதங்களில் எங்களைப் பாதித்தது. ஒருவருடன் காதல் உறவு ஏற்படும்போதுகூட, சாதியைக் குறிப்பிட்டு அவர்களுக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதுதான் தலித் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சூழல்.
ஆனால், சாதி ஏற்படுத்தும் மனநலப் பிரச்னைகளை நுண்மையாகப் புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்கும் மனநல ஆலோசகர்கள் மிக மிகக் குறைவு. அதைச் சரியான முறையில் வழங்க வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தோம்,” என்கிறார் பிரீத்தி.
சிறுவயதில் ஆசிரியர்கள் காட்டிய சாதிப் பாகுபாட்டால் ஓவியம் வரைவதைக் கைவிட்ட தர்ஷினி அதற்குப் பிறகும் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார். அவற்றுக்கு மனநல ஆலோசனை பெற முயன்றபோதும் உணர்வற்ற அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகிறார்: “சமூகத்தில் ஒருவர் சாதிப் பாகுபாடுகளுடன் பார்க்கப்படுவதோ, நடத்தப்படுவதோ மாறவில்லை. அது நவீனமயப்பட்டுள்ளது.”
“இங்கு பெரும்பகுதி மக்கள் உயிர் வாழ உழைப்பதோடு, உரிமைகளுக்காகப் போராடுவதையும் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்துள்ளோம். அது ஏற்படுத்தும் வலியை, சாதி இந்து மனநிலையில் நிற்பவர்கள் புரிந்துகொள்ள அவர்களுக்குத்தான் முதலில் சிகிச்சை கொடுக்க வேண்டும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு