• Sun. Nov 17th, 2024

24×7 Live News

Apdin News

இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் | TamilNadu plays an important role in Indias textile production – Union Textiles Minister

Byadmin

Nov 17, 2024


சென்னை: இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். மாணவர்கள் வடிவமைத்த கைவினைப் பொருட்கள், ஆடைகளைப் பார்வையிட்டார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: இந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்கள் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் என்பது நமது நாட்டின் பெருமை.

ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜவுளித்துறை சார்பில், விஷன் நெக்ஸ்ட் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். ஆடை வடிவமைப்பு தொடர்பாக எதிர்கால தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சார்ந்து இருந்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறி இருக்கிறது. விஷன் நெக்ஸ்ட் எனும் திட்டத்தில், இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ஜவுளி தொழிலில் சந்தையின் மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் டாலராக உயரும். ஜவுளித்துறை உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, விவசாயிகள், உற்பத்தியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுபோல, தற்போது 4.6 கோடி பணியாளர்கள் ஜவுளி உற்பத்தி துறையில் பணியாற்றி வருகிறார்கள் இது, 2030-ம் ஆண்டில் 6 கோடியாக இருக்கும்.

விருதுநகரில் ஜவுளி பூங்கா: எந்த பாகுபாடுமின்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறோம். விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜவுளித் துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மேலும், இத்துறையில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. வங்கதேசத்தில் தற்போதைய அரசியல் சூழலால், இந்திய ஜவுளி துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.



By admin