வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரணய் வர்மாவை நேரில் அழைத்து இந்தியா- வங்கதேச எல்லையில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) செயல்பாடுகள் குறித்த தனது ”கவலைகளை” வங்கதேசம் வெளிப்படுத்தியுள்ளது
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்னைக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இரு நாட்டு எல்லையில் உள்ள ஐந்து இடங்களில் இந்தியா வேலி அமைக்க முயற்சிப்பதாகவும், இது இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாகவும் வங்கதேசம் குற்றம்சாட்டிய சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
கடத்தல், குற்றச் செயல்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற செயல்கள் நடப்பதை தவிர்த்து எல்லைப் பகுதியை ஒரு குற்றமற்ற பகுதியாக மாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்று சந்திப்பிற்கு பிறகு பிரணாய் வர்மா கூறினார்.
“பாதுகாப்பு நோக்கங்களுக்காக எல்லையில் வேலி அமைப்பது குறித்து இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாக” அவர் விளக்கினார்.
”இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படைகளும் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
”இந்த பரஸ்பர புரிந்துணர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம். எல்லையில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக இருநாடுகளும் ஒன்றிணைந்த நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
பதற்றத்திற்கு என்ன காரணம்?
முன்னதாக, டாக்காவில் உள்ள உள்துறை அமைச்சக செயலகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, வங்கதேசம்-இந்தியா எல்லையில் உள்ள நிலைமை குறித்து தகவல் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகரும், ஓய்வுபெற்ற ராணுவ உயரதிகாரியுமான ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி, வங்கதேசம் தனது எல்லையில் யாருக்கும் இடம் கொடுக்காது என்று கூறியுள்ளார்.
வங்கதேச-இந்தியா எல்லையில் சுமார் 137 மீட்டர் பகுதிக்குள் பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்தின் கண்டிப்பான அணுகுமுறையின் காரணமாக, மூன்று மாவட்டங்களின் ஐந்து எல்லைகளில் நடந்துவந்த தங்களின் பணியை, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தின் மூன்று மாவட்ட இந்திய எல்லையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் முகாம் அமைப்பதற்கு , வங்கதேச எல்லைக் காவல்படையினர் (BGB) மறுப்பு தெரிவித்ததை அடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது
குறிப்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சில பகுதிகளில் கம்பி வேலி அமைக்கத் தொடங்கிய பிறகு, வங்கதேசத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எந்தப் பகுதியில் எல்லை தகராறு நிலவுகிறது?
மேற்கு வங்கத்தில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான எல்லை மிக நீளமானது. அண்டை நாடான வங்கதேசத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலை காரணமாக இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதாக அறியப்படுகின்றது.
சமீபகாலமாக எல்லையில் பல சம்பவங்கள் நடந்தன. இதன் காரணமாக, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும், வங்கதேச எல்லைக் காவல்படையினருக்கும் இடையே அமைதியின்மையும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
ஊடுருவலை நிறுத்தும் பிரச்னையாக இருந்தாலும் சரி அல்லது இந்திய எல்லையில் முள்வேலிகளை நிறுவுவதற்கான பிரச்னையாக இருந்தாலும் சரி, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை வீரர்கள் பலமுறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு எல்லை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனாலும் பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே, தற்போதுள்ள 4 ஆயிரத்து 156 கிமீ எல்லையில், சுமார் 3271 கிமீ தூரத்துக்கு இந்தியா வேலி அமைத்துள்ளது.
மொத்த எல்லைப் பகுதியின் நீளத்தில்,இன்னும் 885 கி.மீ எல்லையில் வேலி அமைக்க வேண்டியுள்ளது. மேலும் வங்கதேச எல்லைக் காவல்படை பல்வேறு பகுதிகளில் வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
மேலும், நான்கு பகுதிகளில் எல்லையில் இருந்து சுமார் 137 மீட்டர் பகுதிக்குள் நடைபெறும் இந்தியாவின் கட்டுமானப் பணிகளே வங்கதேசத்தின் ஆட்சேபனைக்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக, பிபிசி வங்காள சேவை கூறுகிறது
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி இவ்வாறு செய்யக்கூடாது என்று வங்கதேசம் கருதுகிறது.
வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே இதுவரை நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்த அவர், “வங்கதேசம்- இந்தியா கூட்டு எல்லை ஒப்பந்தம் 1975ன் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டிலிருந்து 137 மீட்டருக்குள் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு கட்டுமானத்தையும் செய்ய தடை உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, “அவர்கள் ஒப்புதல் இல்லாமல் இதைச் செய்ய முடியாது. அவர்கள் வேலையைத் தொடங்கினர், ஆனால் வங்கதேச எல்லைக் காவல் படையினரின் கடுமையான நிலைப்பாட்டின் காரணமாக அதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.”என்று அவர் விளக்கினார்.
ஷேக் ஹசீனா அரசாங்கம் இந்தியாவிற்கு விலக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஜஹாங்கீர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக செய்து கொண்ட ஒருதலைப்பட்ச ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
”இந்தியா இதைச் செய்திருக்கக் கூடாது” என கூறும் ஜஹாங்கீர் வங்கதேசத்தின் முந்தைய அரசு அதாவது ஷேக் ஹசீனாவின் அரசு இதற்கு இந்தியாவுக்கு அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மேலும் விளக்கிய அவர், “இதில் 160 இடங்களில் வேலி அமைக்கும் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 78 இடங்களில் பணிகள் நடைபெற உள்ளன. வங்கதேச எல்லைக் காவல் படை மற்றும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை இது குறித்து ஆலோசித்து, வங்கதேச எல்லைக் காவல் படை உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, அதன் பிறகு இந்தியா வேலையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.”என்றார்.
வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான 2010ம் ஆண்டின் உடன்படிக்கையின்படி, இரு நாடுகளுக்கு இடையேயான மூன்று பிக்ஹா வழித்தடங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும். ஆனால்,இந்திய அதிகாரிகள் தற்போது எல்லைக் கோட்டில் முட்கம்பி வேலி அமைக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாகோன் மற்றும் பட்னிதாலாவில் உள்ள மூன்று பிக்ஹா வழித்தடங்கள் உட்பட பல இடங்களில் இந்தியாவால் தொடங்கப்பட்ட பணிகள் வங்கதேச எல்லைக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன”என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் நடந்தது என்ன?
இந்தியத் தரப்பில் புதிய எல்லை நிர்வாக நடவடிக்கைகளில் முள்வேலி அமைத்தல், பல்வேறு மின்னணு சாதனங்களை நிறுவுதல், நவீன கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி கண்காணிப்பது ஆகியவை அடங்கும்.
இதனுடன், காவலர்களை எச்சரிக்க சில கருவிகளும் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இதற்கிடையில், எல்லைக் கோட்டிலிருந்து 137 மீட்டருக்குள் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கம்பி வேலிகளை நிறுவிய இடங்களுக்கு வங்கதேச எல்லைக் காவல்படை (பிஜிபி) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ஆறுகள் அல்லது பிற தடைகள் காரணமாக கம்பி வேலிகளை நிறுவுவது சாத்தியமில்லாத பகுதிகளில், அதிக சக்தி வாய்ந்த கேமராக்கள் கொண்ட சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வேலி அமைப்பதற்காக இந்தியா தங்கள் எல்லைக்குள் 100 மீட்டர் ஆழத்தில் மண்ணைத் தோண்டி வருவதாக, வங்கதேச எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
இதற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியா பணியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததில் இருந்து இந்தியா வங்கதேசம் இடையே பல்வேறு காரணங்களுக்காக பதற்றம் நிலவி வருகிறது.
குறிப்பாக வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான சிக்கல்கள் மற்றும் இஸ்கானுடன் தொடர்புடைய சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது ஆகிய விவகாரங்களில் பதற்றம் நிலவுவதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.