பட மூலாதாரம், Getty Images
கடந்த சில தினங்களாக இந்திய பங்கு சந்தை மற்றும் அதுதொடர்பாக எழும் பொருளாதார கேள்விகள், சாமானியர்கள் மத்தியில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
ஒருபுறம், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம், டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆர்வம் ஆகியவை குறித்து பேசப்படுகின்றது.
மற்றொருபுறம், விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் கடன் தவணைகள், வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பங்குச் சந்தையில் நீடிக்கும் கொந்தளிப்பு ஆகியவை குறித்து பேசப்படுகின்றன.
பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பது அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறது. ஆனால், இந்த பொருளாதார மாற்றங்கள் எப்படி நம்முடைய தனிநபர் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான் சாமானியர்களுக்கு உள்ள கேள்வியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன? பங்குச் சந்தை வீழ்ச்சி நீண்ட காலத்துக்கு நீடிக்குமா?
சர்வதேச சந்தையின் தாக்கத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதார கொள்கைகளால் மக்களை பாதுகாக்க முடியுமா?
வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது அரசின் கொள்கைகளுள் ஓர் அங்கமா? இந்திய பொருளாதாரம் சந்திக்கும் முக்கிய சவால்கள் என்னென்ன? இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சியால் சாமானியர்களுக்கு என்ன பிரச்னை?
பிபிசி இந்தி சேவையின் ‘தி லென்ஸ்’ எனும் வாராந்திர நிகழ்ச்சியில் இவை குறித்து கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடக இயக்குநர் முகேஷ் ஷர்மா விவாதித்தார்.
திட்ட ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டாக்டர் நரேந்திர ஜாதவ், தி மிண்ட் ஊடகத்தின் ஆலோசனை ஆசிரியர் பூஜா மேஹ்ரா, தி என் ஷோ நிகழ்ச்சியின் ஆசிரியர் நீரஜ் பாஹ்பாய் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம், Getty Images
இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி நிற்பதற்கு எவ்வித அறிகுறியும் இல்லை; பல ஆண்டுகள் கழித்து, பங்குச் சந்தை வீழ்ச்சி அதிக காலத்துக்கு நீடித்து வருகிறது.
பங்குச் சந்தையில் பல ஆயிரம், லட்சக்கணக்கில் லாபம் பார்ப்பது குறித்து சில மாதங்களுக்கு முன்பு பேசிய நிபுணர்கள் பலரும், தங்கள் கருத்தை மாற்றி வருகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் செப்டம்பர் 2024-ல் 86,000 புள்ளிகள் என்ற நிலையை அடைந்தது. இப்போது 74,000 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய பங்குச் சந்தையின் சமீபத்திய வீழ்ச்சி குறித்து பேசிய நீரஜ் பாஜ்பாய், “இந்தியாவை விட அமெரிக்காவில் முதலீடு செய்வதில் அதிக லாபம் ஈட்டுகின்றனர். அதனால் தான் இந்திய சந்தைகளில் இருந்து பணத்தை எடுத்து, வெளிநாட்டு சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.” என்றார்.
மேலும், “இந்தியா, சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து பணம் அமெரிக்காவுக்கு செல்கிறது. அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் எந்தவொரு ஆபத்தையும் சந்திக்காமல், 6-7% அதிகமாக லாபம் ஈட்டுகின்றனர் என்பதுதான் இதற்குக் காரணம்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய பங்குச் சந்தையின் சமீபத்திய வீழ்ச்சி குறித்து பேசிய பூஜா மேஹ்ரா, “எவ்வளவு காலத்துக்கு பங்குச் சந்தை வீழ்ச்சி நிலையிலேயே இருக்கும் என்பது பல காரணிகளை சார்ந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் உருவான நிச்சயமற்ற தன்மைதான் இதற்கு முக்கிய காரணம்” என்றார்.
“அமெரிக்க சந்தையில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர், ஏனெனில் அங்கு ஆபத்து குறைவு. தற்போதைய சூழலில் அமெரிக்க பொருளாதார நல்ல நிலையில் இருக்கிறது. எனவேதான், முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்” என்று அவர் கூறினார்.
டாக்டர் நரேந்திர ஜாதவ் கூறுகையில், “இந்திய பொருளாதாரத்தின் பலத்தை வைத்துப் பார்க்கும் போது, இந்த வீழ்ச்சி இன்னும் சிறிது காலம் தொடரும் என நம்புகிறேன். ஆனால், நீண்ட காலத்துக்கு இந்த வீழ்ச்சி தொடராது.” என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் வித்தியாசமான செய்திகளுடன் டொனால்ட் டிரம்ப் வருகிறார். அவருடைய கொள்கைகள் மற்றும் கருத்துகளில் தெளிவின்மை உள்ளது. மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா பெருமளவு இறக்குமதி செய்கிறது. மெக்சிகோ மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவில் விலைவாசி உயரும். மக்களுக்கான பிரச்னைகள் அதிகரிக்கும். இந்த பிரச்னைகளில் எப்போது தெளிவு பிறக்கிறதோ, அப்போது சந்தையில் நிலைத்தன்மை திரும்பும்.” என கூறினார்.
ஜாதவை பொருத்தவரையில், இந்திய பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் மற்றும் சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை சரியாகும் போது பங்குச் சந்தை மேம்படும்.
சாமானிய முதலீட்டாளர்களுக்கு என்ன பிரச்னை?
பட மூலாதாரம், Getty Images
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, சில முதலீடுகளின் மதிப்பு குறைந்துள்ளது, சில முதலீடுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் தொடர்ந்து விற்பனையாவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள், சென்செக்ஸ் வீழ்ச்சியால் கவலை கொண்டுள்ளனர்.
இந்த சமயத்தில் எஸ்.ஐ.பியை நிறுத்த வேண்டுமா அல்லது அதிலிருந்து அனைத்து பணத்தையும் திரும்பப் பெற வேண்டுமா என அவர்கள் புரியாமல் உள்ளனர்.
பங்குச் சந்தையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கும் போது நீரஜ் பாஜ்பாய் கூறுகையில், “பங்குச் சந்தையில் இருவிதமான மக்கள் உள்ளனர். ஒருதரப்பினர் டிரேடிங் செய்பவர்கள், மற்றொரு தரப்பினர் முதலீட்டாளர்கள். தற்போதைய பங்குச் சந்தை சூழல்களை பொருத்தவரையில் டிரேடிங் செய்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர். முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்” என்றார்.
“இது நிச்சயம் கவலைக்குரிய விஷயம். ஆனால், நீங்கள் நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எனவே, நீங்கள் நல்ல பங்கை தேர்ந்தெடுத்திருந்தால், பயத்தால் அதை விற்க வேண்டாம்.” என்றார்.
“எஸ்.ஐ.பி மூலமாக நீங்கள் முதலீடு செய்திருந்தாலோ அல்லது வேறு முறையில் முதலீடு செய்திருந்தாலோ கலக்கம் கொள்ளத் தேவையில்லை. சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும், உங்கள் பணமும் பாதியாகிவிடும்.” என்பது அவரது கருத்து.
“மூன்று விதமான சந்தைகள் உள்ளன. அவை, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பங்குகள். பெரிய பங்குகளில் முதலீடு செய்தவர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், நடுத்தர மற்றும் சிறிய பங்குகளில் முதலீடு செய்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார் பாஜ்பாய்.
“நீங்கள் சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் முதலீடு செய்திருந்தால், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு அப்படியே விட்டுவிடுவதற்கு தயாராக இருங்கள். அதேசமயம், பெரிய பங்குகளில் முதலீடு செய்தவர்கள் அந்த முதலீட்டை குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்” என்று முதலீட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.
சர்வதேச சந்தையில் நிலவும் சூழல் குறித்து பேசிய அவர், “2025-ஆம் ஆண்டு வரை லாபம் பெறுவது மிகவும் கடினமானதாக இருக்கும். உலகின் அனைத்து சந்தைகளும் அமெரிக்காவை மையப்படுத்தியே உள்ளன. அமெரிக்காவில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் வரை, உலகில் எந்த சந்தையும் நிலைத்தன்மையுடன் இயங்க முடியாது.” என கூறினார்.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க என்ன காரணம்?
பட மூலாதாரம், Getty Images
வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது இந்தியாவில் பற்றி எரியும் பிரச்னையாக உள்ளது. நாட்டின் இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் கவலையாக இது உருவெடுத்துள்ளது.
ஒவ்வொரு தேர்தல்களின் போதும் இதுகுறித்து குரல் எழுப்பப்படுகின்றது. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் அப்படியே அமைதியாகி விடுகிறது.
இப்படியான சூழலில், ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்தும், இத்தனை அரசுகள் மாறியும் இத்தகைய தீவிரமான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏன் காணப்படவில்லை?
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த பூஜா மேஹ்ரா, “கடந்த மாதம் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை, தேவைப்படும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று கூறுகிறது. இந்த சூழலை மேம்படுத்த என்ன மாதிரியான கொள்கைகள் வேண்டும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது” என்கிறார்.
“விலைவாசி உயரும் அதே வேகத்தில் மக்களின் வருமானம் உயரவில்லை என்பதும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவையான அனைத்து கொள்கைகளும் செயல்படுத்தப்பட்டாலே ஒழிய, இந்த பிரச்னை விரைவில் தீரும் என நான் நினைக்கவில்லை.” என்றார் அவர்.
“என்னை பொருத்தவரை, வேலைவாய்ப்பின்மை தேர்தல்களில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கவில்லை. மற்ற பிரச்னைகளை பொருத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுகின்றன. எனவே, வேலைவாய்ப்பின்மை தொடர்பாக, இந்த நாட்டின் தலைவர்கள் மீது அதிக அழுத்தம் இல்லை” என அதிலுள்ள அரசியல் பார்வையை மேஹ்ரா விளக்கினார்.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது மற்றும் வேலைகளின் தரம் தொடர்பாக உள்ள பிரச்னைகள் குறித்துப் பேசிய நீரஜ் பாஜ்பாய், “கடந்த 25-30 ஆண்டு கால இந்திய வரலாற்றை உற்று நோக்கினால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கு மேல் தாண்ட முடியவில்லை.” என்றார்.
“சமீபத்திய தரவுகளின் படி, இந்திய பொருளாதாரம் 6-6.5% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. நமது பொருளாதாரம் மந்தமடையாமல், முன்பிருந்த விகிதத்திலேயே வளர்ந்து வருவதை கவனிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
“இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை இல்லை. மாறாக, இருக்கும் வேலைகளின் தரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. அதாவது, வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளுக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவதில்லை.” என்றார் அவர்.
உள்நாட்டு கடன் அதிகரித்து வருவது குறித்தும் பாஜ்பாய் கவலை தெரிவித்தார். “மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) ஒப்பிடுகையில், இந்தியாவின் உள்நாட்டு கடன் 29-30% ஆக இருந்தது. அது தற்போது 40% ஆக அதிகரித்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதுகாப்பற்ற கடன்களை பெறுகின்றனர். அதாவது, தொலைக்காட்சி, மொபைல் போன்றவற்றை வாங்க தனிநபர் கடன்களை பெறுகின்றனர். இது மிகவும் கவலை கொள்ளத்தக்க தீவிரமான பிரச்னை. தனிநபர் நுகர்வுக்காக நீங்கள் கடன் வாங்கினால், உங்களின் வருமானம் குறைகிறது என அர்த்தம்.” என்கிறார் அவர்.
“இன்றும் பொறியியல் முடித்தவர்கள் கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக ஆண்டுக்கு ரூ.3.5-4 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வேலைகளையே பெறுகின்றனர். இது, 15-20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைதான். இங்குதான் பிரச்னை உள்ளது” என்கிறார்.
இதிலுள்ள சவால்கள் குறித்து பேசிய அவர், “தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களால் எந்தவொரு அரசாங்கத்தாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே, சுகாதாரம் மற்றும் நிதித்துறையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பங்கு காரணமாக, அதிகளவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.” என கூறினார்.
“வேலைகளின் தரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதுதான் உலகளவில் உள்ள மிகப்பெரிய சவால். உலகளவில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் இந்த பிரச்னையை மக்கள் முன்பு முறையாக முன்வைத்ததாக நான் நினைக்கவில்லை” என தெரிவித்தார்.
நரேந்திர ஜாதவ் கூறுகையில், “வேலைவாய்ப்புகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. வேலைகளுக்கான ஆற்றல் வளமும் குறைவாக உள்ளது. கல்லூரிகளிலிருந்து பட்டதாரிகள் வெளியே வருவதில்லை என்பது இதன் அர்த்தம் இல்லை. அவர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால், அவர்களிடம் திறன் இல்லாததால், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது” என்றார்.
“இந்தியாவில் தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை என நினைக்கிறேன். குறிப்பாக, படித்தவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகளவில் உள்ளது.” என கூறினார்.
“உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக உள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி முறைசார் துறையில் மட்டுமே காணப்படுகிறது. முறைசாரா துறை, கோவிட்டுக்கு பின்பான நிலையிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை.”
வருமானம் மற்றும் தேவை இரண்டுக்கும் இடையேயான சமமற்ற நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், “வேலையில் உள்ளவர்களின் ஊதியம் எந்தளவுக்கு அதிகரித்திருக்க வேண்டுமோ, அந்தளவுக்கு அதிகரிக்கவில்லை.” என்கிறார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்துப் பேசிய அவர், “முதலீட்டாளர்கள் குறித்து நாம் பேசினால், அமெரிக்க சந்தையில் முதலீடு செய்பவர்கள் வரி சீர்திருத்தத்துக்குப் பின்பும் 7-8% வரை லாபம் பெறுவார்கள். இந்தியாவில் அவர்கள் வெறும் 5% லாபம் பெறும் போது, அவர்கள் ஏன் இந்திய சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும்? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது இந்தியா விதித்துள்ள மூலதன ஆதாய வரியை உடனடியாக நீக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு