0
இந்திய பணிப்பெண் ஒருவருக்கு, அபுதாபியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிலும் அப்பெண்ணின் தகவல் வேண்டுமென்று அவரின் குடும்பம் டில்லி உயர்நீதிமன்றத்திடம் மனு போட்ட பிறகுதான் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அபுதாபியில் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஷாஸாடி கான் என்ற இந்திய பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15ஆம் திகதி இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி, BBC செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் பராமரித்து வந்த ஆண் குழந்தையை மூச்சுத்திணறச் செய்து கான் கொன்றதாக நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்படாததால், அந்தத் தகவலை மருத்துவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், கான் குற்றமற்றவர் என்றும் அந்த 4 மாதக் குழந்தை தவறான தடுப்பூசியால் மரணமுற்றதாகவும் கானின் குடும்பத்தார் கூறுகின்றனர்.
வழக்கு விசாரணையில் தம்மைத் தற்காத்துக்கொள்ள கானுக்குப் போதிய வாய்ப்புகள் தரப்படவில்லை என்றும் குடும்பம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கான் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அபுதாபியிலுள்ள இந்தியக் குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளில் 54 இந்தியர்கள் மரண தண்டனைக்குக் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அவர்களில் 29 பேர் பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.