குவைத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பினார்.
இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோதி, இரு நாடுகளும் தற்போது மூலோபாய பங்காளிகளாக மாறிவிட்டதாக கூறினார்.
நரேந்திர மோதியின் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று சொல்வதற்கு முக்கிய காரணம், இந்திய பிரதமர் ஒருவர் குவைத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது 43 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கு முன், 1981-இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
இந்திய பிரதமர் மோதியின் குவைத் பயணம் அரபு நாடுகளின் ஊடகங்களிலும் அதிக கவனம் பெற்றுள்ளது.
குவைத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 43 லட்சம். அதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர். குவைத்தில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்திய பிரதமர் மோதியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
திங்க் டேங்க் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் மூலோபாய ஆய்வுகள் திட்டத்தின் துணை இயக்குநர் கபீர் தனேஜா, இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு இனி மேம்படும் என்று செளதி அரேபிய ஆங்கில நாளிதழான அரப் நியூஸிடம் கூறினார்.
“பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை அதிகரிக்கும். இது தவிர, பார்மா (மருந்துகள்) துறையில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். 2023 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்தது” என்று கபீர் தனேஜா கூறினார்.
குவைத் ஊடகங்கள் கருத்து
இந்திய பிரதமர் மோதியின் வருகை குறித்து குவைத் டைம்ஸ் நாளிதழில் ‘குவைத் தேசியக் குழுவின் செயல்திட்டம் 2030’ இன் தலைவர் டாக்டர் காலித் ஏ. மெஹ்தி கட்டுரை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில், டாக்டர் மெஹ்தி, “2023-2024ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 10.479 பில்லியன் டாலராக இருந்தது. குவைத்துக்கு இந்தியாவின் ஏற்றுமதி 2.1 பில்லியன் டாலராக இருந்தது, அது ஆண்டுதோறும் 34.78 சதவீதம் அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டில், குவைத்திலிருந்து 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வணிகம் மட்டுமின்றி மேலும் பலத் துறைகளில் விரிவடைந்துள்ளன. குவைத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டு மக்களில் இந்தியர்களில் எண்ணிக்கை அதிகம். குவைத்தில் தொழில் துறை மட்டுமின்றி, நிதித் துறையைச் சேர்ந்த ஏராளமான இந்திய வல்லுநர்கள் உள்ளனர்.” என்று எழுதியுள்ளார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. குவைத் குடும்பங்கள் மற்றும் வணிகர்களுக்கு கல்வி, வணிகத்திற்காக இந்தியா மிகவும் பிடித்த நாடாக இருந்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டில் குவைத் மக்களுக்கு மும்பை ஒரு முக்கியமான வணிக மையமாக இருந்தது. குவைத் மக்கள் மும்பையில் நீண்ட காலமாக வீடுகள் மற்றும் நிறுவனங்களைக் கொண்டுள்ளனர்.”
“மும்பையின் முகமது அலி தெருவில் குவைத் நாட்டினரின் கடைகள் மற்றும் அலுவலகங்கள் நிறைந்துள்ளன. ‘முகமது அலி ஸ்ட்ரீட்’ என்னும் குவைத் படம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. குவைத்தின் முக்கிய பிரமுகர்களின் பிறப்பிடமாகவும் இந்தியா இருந்து வருகிறது. குவைத் தற்போது `வளைகுடா ஒத்துழைப்பு சபை’ என அழைக்கப்படும் ஜிசிசியின் (Gulf Cooperation Council) தலைமை பொறுப்பில் இருக்கும் சமயத்தில் மோதியின் பயணம் திட்டமிடப்பட்டிருந்ததால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.” என்றும் டாக்டர் மெஹ்தி கூறுகிறார்.
டாக்டர் ஏ.எஸ். ஹைலா அல்-மெகைமி குவைத் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராக உள்ளார். அவர் மோதியின் வருகை குறித்து குவைத் டைம்ஸில் எழுதியுள்ளார். அதில், “மோதி 2014-இல் இந்தியாவின் பிரதமரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு புதிய வடிவம் கொடுத்தார். பிரதமர் மோதி வளைகுடா நாடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (ஜிசிசி) இருந்த நாடுகளில், பிரதமர் மோதி சென்ற கடைசி நாடு குவைத். இதற்கு முன், அவர் ஜிசிசியின் உள்ள ஐந்து நாடுகளுக்குச் சென்றுள்ளார். வளைகுடாவுடன் இந்தியா வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. வளைகுடா உடனான இந்தியாவின் உறவு எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியவற்றைத் தாண்டி பாதுகாப்பு, முதலீடு மற்றும் அரசியல் ஆகியத் துறைகளிலும் விரிவடைந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் மோதியின் பிம்பம்
“வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மோதி அடிக்கடி தனிப்பட்ட முறையில் சந்திப்புகளை நடத்துகிறார். உதாரணமாக, 2015இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளருடன் ஒரு மோட்டார் சைக்கிள் சவாரியை மேற்கொண்டார். ஜிசிசி நாடுகளில் 90 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர். ஜிசிசி, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி. கோவிட் தொற்றுநோய் காலக்கட்டத்தின் போது, பிரதமர் மோதி இந்தியாவில் இருந்து ஒரு மருத்துவ குழு மற்றும் மருந்துப் பொருட்களை குவைத்துக்கு அனுப்பினார். இத்தகைய முயற்சிகள் பாரம்பரிய கூட்டாண்மைகளுக்கு அப்பாற்பட்டவை.” என்கிறார் டாக்டர் ஹைலா.
மற்றொரு குவைத் ஆங்கில நாளிதழான ‘டைம்ஸ் குவைத்’ இந்தியாவின் மொத்த உலக வர்த்தகத்தில் ஜிசிசி நாடுகளின் பங்கு 16 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.
குவைத் செய்தி நிறுவனமான குனாவுக்கு பிரதமர் மோதி அளித்த பேட்டியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை எடுத்துரைத்தார்.
குனா ஊடகத்தை சேர்ந்த பாத்மா அல்-சலேமிடம் பிரதமர் மோதி, “குவைத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே பண்டைய காலத்திலிருந்தே வர்த்தகம் இருந்து வருகிறது. ஃபைலாகா தீவின் கண்டுபிடிப்பு இருநாடுகளின் கூட்டண்மை கொண்ட கடந்த காலத்திற்கான சான்று. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, 1961 வரை, குவைத்தில் இந்திய ரூபாய் சட்டப்பூர்வ நாணயமாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதை இது காட்டுகிறது” என்றார்.
சர்வதேச விவகார நிபுணர் சி ராஜமோகன், மோதியின் குவைத் பயணத்திற்கு சற்று முன்னதாக இந்தியாவின் ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸில் இதுபற்றி எழுதினார்.
“ஆகஸ்ட் 1990 இல் இராக் தலைவர் சதாம் உசேன் குவைத்தை தாக்கிய போது, இந்தியாவில் ஒரு கூட்டணி அரசாங்கம் இருந்தது. சதாம் உசேனின் தாக்குதலை இந்தியா கண்டிக்கவில்லை. அதே சமயம் மத்திய கிழக்கு வரைபடத்தில் இருந்து இறையாண்மை கொண்ட நாடாக இருந்த குவைத்தை அழிக்க சதாம் உசேன் விரும்பினார் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்தியா அமைதி காத்தது”
“1979-இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை தாக்கிய போது இந்தியா அதை விமர்சிக்கவில்லை, 2022-இல் யுக்ரேனை ரஷ்யா தாக்கிய போது இந்தியா கண்டிக்கவில்லை. சதாம் உசேன், சோவியத் யூனியன் மற்றும் புதின் ஆகியோர் இந்தியாவின் நெருங்கிய பங்காளிகள். இந்தியா இந்த விவகாரங்களில் தன் நிலைப்பாட்டை சொல்வதை தவிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பல நாடுகள் தங்கள் கூட்டாளிகளை கோபப்படுத்த விரும்புவதில்லை” என்று ராஜமோகன் எழுதியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு
குவைத் மட்டுமின்றி, வளைகுடா ஒத்துழைப்பு சபையின் (ஜிசிசி) பல நாடுகள் மோதிக்கு உயரிய சிவிலியன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.
இந்துத்துவா பிம்பத்துடன், வளைகுடா நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதில் மோதி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது.
அபுதாபியின் முன்னாள் மேற்கத்திய தூதர் கார்னகி எண்டோவ்மென்ட் என்ற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஒருவர், மோதியின் யதார்த்த அரசியலின் மனநிலையும், வலிமையான தலைவராக அவரை அவர் முன்னிறுத்தி கொள்ளும் பாணியும் செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இளவரசரால் பாராட்டப்பட்டது என்றார்.
திங்க் டேங்க் கார்னகி எண்டோவ்மென்ட்டின் ஆகஸ்ட் 2019 அறிக்கையில், “அரபு நாடுகள் உடனான உறவை மேலும் மேம்படுத்த நரேந்திர மோதியின் அரசியல் பின்னணி தடையாக இருக்கும் என்று ஆரம்பத்தில் தோன்றியது. மோதி இந்து தேசியவாதத்தின் வலுவான ஆதரவாளர்.
அரசியல் இஸ்லாத்தை கையாள்வதில், மோதியின் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறை இரு நாட்டு தலைவர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போனது. பிப்ரவரி 2019 இல், டெல்லியில் நடந்த ஒரு விழாவில், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் நரேந்திர மோதியை `தனது பெரிய சகோதரர்’ என்று அழைத்தார்.
அரபு மன்னராட்சி நாடுகள் `அரசியல் இஸ்லாம்’ (Political Islam) விஷயத்தில் கண்டிப்பானவை. அதே சமயம் மோதியும் பாதுகாப்பு விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பேசி வருகிறார்.
மத்திய கிழக்கு நிபுணரும், ஓ.ஆர்.எஃப் (Observer Research Foundation ) இந்தியாவின் சிந்தனையாளருமான கபீர் தனேஜா, “2002 குஜராத் கலவரத்தின் போது, டெல்லியில் உள்ள வளைகுடா நாடுகளின் தூதரகங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. இருப்பினும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில்(OIC) பாகிஸ்தான் இந்த விவகாரங்களை எழுப்பியது. முதல் வளைகுடா போரில் இந்தியாவின் நிலைப்பாடு சதாம் உசேனுக்கு ஆதரவாக இருந்தது. 2014க்குப் பிறகு, வளைகுடா நாடுகள் உடனான உறவை மோதி மிகவும் பயனுள்ள முறையில் மாற்றியுள்ளார்.” என்று எழுதியுள்ளார்.
பிப்ரவரி 2019 இல், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்தார். புதுடெல்லி விமான நிலையத்திற்கு பட்டத்து இளவரசர் வந்தடைந்த போது, அவரை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோதி நெறிமுறைகளை மீறி விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது பட்டத்து இளவரசர் செளதி அரேபியாவின் தலைமை பொறுப்பைக் கூட ஏற்கவில்லை. ஆனால் மோதி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்த பயணத்தின் போது, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் செளதி இளவரசர் கூறியதாவது:
“நாங்கள் இருவரும் சகோதரர்கள். பிரதமர் மோதி எனது மூத்த சகோதரர். நான் அவருடைய இளைய சகோதரர். அவரின் செயல்பாடுகளை நான் பாராட்டுகிறேன். அரேபிய தீபகற்பத்துடனான இந்தியாவின் உறவு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. வரலாறு எழுதப்படுவதற்கு முன்பே அது ஆரம்பமானது. அரேபிய தீபகற்பத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு நம் மரபணுவில் உள்ளது.” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு