பட மூலாதாரம், Getty Images
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
இந்த வெற்றிக்கு ரசிகர்கள், பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் அணியின் சக வீராங்கனைகளுக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நன்றி தெரிவித்தார்.
“ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்த வெற்றிக்கான பெருமை பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் சொந்தமானது” என்று அவர் கூறினார்.
இந்த போட்டியில், இந்திய அணி லீக் கட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ‘இது மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய மீள் வருகையாகும். ஏனென்றால் இந்தியா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அணிக்கு என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டபோது, ஹர்மன்ப்ரீத், “எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது. நாங்கள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றோம், ஆனால் இந்த அணிக்கு ஏதாவது சிறப்பு செய்யக்கூடிய திறன் உள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதற்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.” என்றார்.
“அவர்கள் நேர்மறையாக இருந்தனர், அடுத்து வரவிருந்த போட்டிகளில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இரவும் பகலும் உழைத்தனர். இந்த அணி இந்த வெற்றிக்கு தகுதியானது.” என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளது. இதற்கு முன்பு, இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, தோல்வியடைந்திருந்தது.