பட மூலாதாரம், Chilukuri Paramathama
பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், மருத்துவர் ஒருவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன.
மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன.
ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்டது. அதில், “தெளிவான மருந்துச்சீட்டு என்பது ஒரு அடிப்படை உரிமை” என்றும் அது உயிரோடு இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமையலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த உத்தரவு, கையெழுத்துடன் தொடர்பில்லாத ஒரு வழக்கில் வந்தது.
அந்த வழக்கில், ஒருவர் தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பறித்ததாகவும், போலி நேர்காணல் நடத்தியதாகவும், பாலியல் சுரண்டல் செய்ததாகவும் அவருக்கு எதிராக ஒரு பெண் குற்றம் சாட்டினார். நீதிபதி ஜஸ்குர்பிரீத் சிங் பூரி, அந்த நபரின் ஜாமீன் மனுவை விசாரித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தங்களுக்கு ஒருமித்த உறவு இருந்ததாகவும், பணத் தகராறு காரணமாக இந்த வழக்குத் தொடரப்பட்டது என்றும் கூறினார்.
ஆனால், அந்தப் பெண்ணைப் பரிசோதித்த அரசு மருத்துவரின் மருத்துவ அறிக்கையைப் பார்த்தபோது, நீதிபதி பூரியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “ஒரு எழுத்து கூட தெளிவாக இல்லை. இது நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியது,” என்று அவர் உத்தரவில் குறிப்பிட்டார்.
பிபிசி, தீர்ப்பு நகலையும், அந்த அறிக்கையையும், மருத்துவரின் படிக்க முடியாத இரண்டு பக்க மருந்துச்சீட்டையும் பார்த்தது.
பட மூலாதாரம், Getty Images
‘மருந்தாளுநர்கள் தவிர வேறு யாராலும் படிக்க முடியவில்லை’
“இன்றைய காலத்தில் கணினிகளும் தொழில்நுட்பமும் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும்போது, அரசு மருத்துவர்கள் இன்னும் கையால் மருந்துச்சீட்டு எழுதுவது அதிர்ச்சியளிக்கிறது. இவற்றை மருந்தாளுநர்கள் தவிர வேறு யாராலும் படிக்க முடியவில்லை,” என்று நீதிபதி பூரி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
மருத்துவக் கல்லூரி பாடத்திட்டத்தில் கையெழுத்துப் பயிற்சியைச் சேர்க்கவும், இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் மருந்துச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவும் அரசை நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதுவரை, அனைத்து மருத்துவர்களும் பெரிய, தெளிவான எழுத்துகளில் மருந்துச்சீட்டு எழுத வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் திலீப் பானுஷாலி, 3,30,000 மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ள தங்கள் அமைப்பு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண உதவத் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
பெரிய நகரங்களில் மருத்துவர்கள் டிஜிட்டல் மருந்துச்சீட்டுக்கு மாறிவிட்டனர். ஆனால், கிராமங்களிலும் சிறு ஊர்களிலும் தெளிவான மருந்துச்சீட்டு பெறுவது கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்..
மேலும், “பல மருத்துவர்களின் கையெழுத்து மோசமாக இருப்பது உண்மைதான். காரணம், அவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்,” என்ற அவர், “அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நோயாளிகளும் மருந்தாளர்களும் எளிதில் படிக்கக்கூடிய வகையில் மருந்துச்சீட்டு எழுத வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். ஒரு நாளைக்கு 7 நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவரால் இது முடியும். ஆனால் 70 பேரைப் பார்க்க வேண்டியிருந்தால் அந்த மருத்துவருக்கு இது சாத்தியமில்லை,” என்றும் கூறினார்.
பட மூலாதாரம், Chilukuri Paramathama
‘பிழைகளை 50% வரை குறைக்கலாம்’
இந்திய நீதிமன்றங்கள் மருத்துவர்களின் சீரற்ற கையெழுத்தைக் கண்டிப்பது இதுவே முதல் முறை அல்ல.
முன்பு, ஒடிசா உயர் நீதிமன்றம் மருத்துவர்களின் “ஜிக்ஜாக் எழுத்து” பற்றி எச்சரித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் “படிக்க முடியாத மோசமான கையெழுத்து அறிக்கைகள்” குறித்து வருத்தம் தெரிவித்தது.
ஆனால், மருத்துவர்களின் கையெழுத்து மற்றவர்களை விட மோசமானது என்ற பொதுவான நம்பிக்கையை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை.
அவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும் என கூறுவது அழகுக்காகவோ அல்லது வசதிக்காகவோ அல்ல. மாறாக தெளிவில்லாத மருந்துச் சீட்டுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அது பெரிய ஆபத்தை, சில நேரம் உயிரிழப்பையே ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
1999-ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (IoM) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவில் ஆண்டுக்கு 44,000 தடுக்கக்கூடிய மரணங்கள் மருத்துவப் பிழைகளால் ஏற்படுவதாகவும் , அதில் 7,000 மரணங்கள் மோசமான கையெழுத்தால் நிகழ்வதாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில், ஸ்காட்லாந்தில் ஒரு பெண்ணுக்கு கண்ணில் ஏற்பட்ட வறட்சிக்கு மருந்து கொடுக்க வேண்டிய இடத்தில், தவறாக விறைப்புத் தளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் கிரீம் கொடுக்கப்பட்டதால், பாதிப்பு ஏற்பட்டது.
பிரிட்டன் சுகாதார அதிகாரிகள், “மருந்துப் பிழைகள் பெரிய தீங்கையும் மரணங்களையும் ஏற்படுத்துகின்றன” என்று ஒப்புக்கொண்டதுடன், மருத்துவமனைகளில் கணினி மருந்துச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தினால், பிழைகளை 50% வரை குறைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்தியாவில் மோசமான கையெழுத்தால் ஏற்பட்ட தீங்குகள் பற்றிய தெளிவான தரவுகள் இல்லை. ஆனால், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், மருந்துச்சீட்டுகளை தவறாகப் படித்ததால் உயிருக்கு ஆபத்தான சூழல்களும் பல மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Chilukuri Paramathama
நீரிழிவு நோய்க்கான மருந்து எடுத்தபின் வலிப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணின் சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது. அந்த மருந்தின் பெயர், அவருக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட வலிநிவாரணி மருந்தின் பெயரைப் போலவே இருந்தது.
தெலங்கானாவின் நல்கொண்டாவில் மருந்தகம் நடத்தி வரும் சிலுகுரி பரமாத்தமா, 2014-ல் நொய்டாவில் மூன்று வயது குழந்தை காய்ச்சலுக்கு தவறான ஊசி போடப்பட்டு இறந்த செய்தியைப் படித்த பிறகு, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்ததாக பிபிசியிடம் குறிப்பிட்டார்.
கையால் எழுதப்பட்ட மருந்துச்சீட்டுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற அவரது முயற்சி 2016-ல் பலனளித்தது. அப்போது, இந்திய மருத்துவக் கவுன்சில், “மருத்துவர்கள் மருந்துகளை பொதுவான பெயர்களில், தெளிவாகவும், முடிந்தால் பெரிய எழுத்துகளிலும் எழுத வேண்டும்” என்று உத்தரவிட்டது.
2020-ல், இந்திய சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே நாடாளுமன்றத்தில், “இந்த உத்தரவை மீறும் மருத்துவர்கள் மீது மாநில அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்” என்று கூறினார்.
ஆனால், பத்து ஆண்டுகள் கடந்த பிறகும், மோசமாக எழுதப்பட்ட மருந்துச்சீட்டுகள் மருந்தகங்களுக்கு வருவதாக சிலுகுரியும் மற்ற மருந்தாளர்களும் சொல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சிலுகுரி பெற்ற சில சீட்டுகளை அவரால் கூட படிக்க முடியவில்லை என்று பிபிசியிடம் காட்டினார்.
கொல்கத்தாவில் 28 கிளைகளுடன், தினமும் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கையாளும் தன்வந்தரி மருந்தகத்தின் தலைமை நிர்வாகி ரவீந்திர கண்டேல்வால் இதுகுறித்துப் பேசினார்.
“சில மருந்துச்சீட்டுகள் படிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன. நகரங்களில் அச்சிடப்பட்ட கணினி சீட்டுகள் அதிகமாகி விட்டன. ஆனால் புறநகர் மற்றும் கிராமங்களில் இன்னும் கையால் எழுதப்பட்ட மருந்துசீட்டுக்கள்தான் அதிகம் வருகின்றன,” என்றார் ரவீந்திர கண்டேல்வால்.
மேலும், அவரது ஊழியர்கள் அனுபவமிக்கவர்கள் என்பதால், பெரும்பாலான சீட்டுகளைப் புரிந்து சரியான மருந்து கொடுக்க முடிகிறது என்றும், “ஆனாலும், சில நேரங்களில் மருத்துவர்களை அழைத்து உறுதி செய்ய வேண்டியிருக்கிறது, ஏனென்றால் சரியான மருந்தை கொடுப்பது மிக முக்கியம்” என்றும் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.