பட மூலாதாரம், Getty Images
மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு அண்மையில் நீதிமன்றம் தடை விதித்தது உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் பறவைகளை நேசிப்பவர்கள் ஆகியோர் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக மாறியுள்ளது.
பல தசாப்தங்களாக இருந்த ஒரு புறா உணவளிக்கும் இடமான “கபுதர்கானா” மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம், நூற்றுக்கணக்கானோர் காவல்துறையினருடன் இரண்டு முறை மோதினர். (கபுதர் என்பது இந்தியில் புறா என்று பொருள்படும்.)
சிலர் அந்த இடத்தை மறைத்திருந்த தார்ப்பாய் திரைகளை கிழித்தெறிந்ததுடன், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.
மற்றொரு போராட்டத்தில் சுமார் 15 பேர் காவல்துறையால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்னை மும்பைக்கு மட்டும் உரியதல்ல. வெனிஸில், வரலாற்று சதுக்கங்களில் புறாக்களுக்கு உணவளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன
நியூயார்க் மற்றும் லண்டனில் உணவளிக்கும் மண்டலங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மற்றும் தானே நகரங்கள் புறாக்களுக்கு உணவளிக்க அபராதங்களை விதித்துள்ளன. பொது இடங்களில் பறவைகளுக்கு உணவளிப்பதற்கு எதிராக ஒரு அறிவுறுத்தலை வெளியிடுவது குறித்து டெல்லி பரிசீலித்துவருகிறது.
புறாக்கள் இந்தியாவின் பண்பாட்டு பின்னணியில் நீண்ட காலமாக பின்னப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைகள், விலங்கு ஆர்வலர்களையும் மத உணர்வுடன் உணவளிப்பவர்களையும் கோபப்படுத்தியுள்ளன.
பால்கனிகளிலும் குளிரூட்டிகளிலும் புறாக்களை எளிதாக காணக் கூடிய மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களை பிரதிபலிக்க, திரைப்படங்கள் புறாக்களுக்கு தானிய உணவளிக்கும் காட்சிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றன.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
மும்பையின் சில கபுதர்கானாக்கள் மக்கள் தானியங்களை தானமாக வழங்கும் தொண்டு செய்யும் இடங்களாக உள்ளன என கூறப்படுகிறது.
மத உணர்வுகளும் இதில் உள்ளன. புறாக்களுக்கு உணவளிப்பதை புனித கடமையாக கருதும் ஜெயின் சமூகத்தினர் மும்பையில் தங்கள் எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்து வருகின்றனர்.
வேறு இடங்களிலும் அமைதி மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக காணப்படும் புறக்களுடன் பலரும் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
டெல்லியில் 40 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவளித்து வருவதாகவும், அவற்றை தனது குடும்பமாக கருதுவதாகவும் சையத் இஸ்மத் கூறுகிறார்.
“அவை அப்பாவியானவை. எல்லா உயிரினங்களிலும் மிகவும் அப்பாவியானவை. அவை கேட்பது கொஞ்சம் கருணை மட்டுமே,” என்று இஸ்மத் கூறினார்.
ஆனால் இந்த உணர்வுகள், புறாக்களின் எச்சங்களின் தாக்கத்திற்கு நீண்டகாலமாக உட்படுத்தப்படுவது நுரையீரல் மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும் என்று காட்டும் ஆய்வுகளுக்கு எதிராக உள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் புறாக்களின் எண்ணிக்கை பெருகியது இந்த அபாயத்தை உயர்த்தியுள்ளதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.
டெல்லியைச் சேர்ந்த பல்லுயிர் நிபுணர் ஃபையாஸ் குத்ஸர், உணவு எளிதாக கிடைப்பது பல நாடுகளில் புறாக்களின் அளவுக்கதிகமான அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது என்று கூறுகிறார்.
இந்தியாவில் சிட்டுக்குருவி போன்ற பறவைகள் குறைந்து, புறாக்கள் அவற்றின் இடத்தை பிடிப்பது இந்த சவாலை மேலும் சிக்கலாக்குகிறது என்கிறார் அவர்.
“எளிதான உணவு மற்றும் இயற்கை வேட்டையாடிகள் இல்லாததால், புறாக்கள் முன்பை விட வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. அவை மற்ற நகர பறவைகளை வெளியேற்றி, சூழலியல் இழப்பை உருவாக்குகின்றன,” என்று குத்ஸர் கூறினார்.
பட மூலாதாரம், LightRocket via Getty Images
2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பறவைகள் நிலை அறிக்கை, 2000-ஆம் ஆண்டு முதல் புறாக்களின் எண்ணிக்கை 150%க்கும் மேல் உயர்ந்துள்ளது என்று கூறுகிறது. இது எல்லா பறவைகளிலும் மிகப்பெரிய உயர்வு. இதனால் வீடுகளும் பொது இடங்களும் எச்சங்களால் நிரம்பியுள்ளன, ஒவ்வொரு புறாவும் ஆண்டுக்கு 15 கிலோ வரை எச்சங்களை உற்பத்தி செய்யலாம்.
இந்த எச்சங்களில் மனிதர்களுக்கு நிமோனியா, பூஞ்சை தொற்றுகள், மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் குறைந்தது ஏழு வகையான மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் உள்ளன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
டெல்லியைச் சேர்ந்த 75 வயது நிர்மல் கோஹ்லி, சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமத்தால் பாதிக்கப்பட்டார்
“இறுதியாக, ஒரு சி.டி ஸ்கேன் அவரது நுரையீரலின் ஒரு பகுதி சுருங்கியிருப்பதைக் காட்டியது,” என்று அவரது மகன் அமித் கோஹ்லி கூறுகிறார். “மருத்துவர்கள் இது புறாக்களின் எச்சங்களுக்கு உட்படுத்தப்பட்டது காரணமாக இருப்பதாக கூறினர்.”
கடந்த ஆண்டு, டெல்லியில் 11 வயது சிறுவன், நுரையீரலில் அழற்சியை ஏற்படுத்தும் ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோனிடிஸ் என்ற நோயால் இறந்தார். மருத்துவர்கள் இதற்கு நீண்டகாலம் புறாக்களின் எச்சங்கள் மற்றும் இறகுகளுக்கு அருகில் இருந்து சுவாசித்ததுதான் காரணம் என்று கூறினார்.
நுரையீரல் நிபுணர் ஆர்.எஸ். பால், பிபிசியிடம் இதுபோன்ற நிகழ்வுகள் பொதுவானவை என்று கூறினார்.
“நீங்கள் நேரடியாக புறாக்களுக்கு உணவளிக்காவிட்டாலும், சாளர படிகளிலும் பால்கனிகளிலும் உள்ள அவற்றின் எச்சங்கள் ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோனிடிஸை ஏற்படுத்தலாம்.
புறாக்களை தொடர்ந்து கையாளும் மக்களுக்கு பாக்டீரிய, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதையும் நாங்கள் காண்கிறோம்.” என்றார்.
இந்த கவலைகள்தான், மும்பை உள்ளாட்சி நிர்வாகம் புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை விதித்து உணவளிக்கும் மையங்களை இடிக்கும் நடவடிக்கையை தொடங்குவதற்கும் காரணமாக இருந்தன.
பட மூலாதாரம், Anshul Verma/BBC
இடிப்பு பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் பொது ஆரோக்கியம் “முதன்மையானது” என்று கூறி, புறாக்களுக்கு உணவளிக்கும் தடைக்கு எதிரான மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், சட்டவிரோத உணவளிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பறவைகள் மீதான அன்பு மக்களின் நலனுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று டெல்லி மேயர் ராஜா இக்பால் சிங், பிபிசியிடம் கூறினார்.
“உணவளிக்கும் இடங்கள் அடிக்கடி அழுக்காகி, துர்நாற்றம், தொற்றுகள் மற்றும் பூச்சிகளை ஏற்படுத்துகின்றன. உணவளிப்பதை குறைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், பல விலங்கு ஆர்வலர்கள் இதை ஏற்கவில்லை.
சுகாதாரம் பராமரிக்கப்படாவிட்டால் எல்லா விலங்குகளும் நோய்களை பரப்பலாம் என்று டெல்லியில் உணவளிக்கும் இடத்திற்கு தானியங்களை வழங்கும் முகமது யூனுஸ் வாதிடுகிறார்.
“கடந்த 15 ஆண்டுகளாக நான் புறாக்களால் சூழப்பட்டிருக்கிறேன். ஏதாவது நடந்திருக்க வேண்டுமானால், அது எனக்கும் நடந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.
உணவளிக்கும் தடையால் ஆயிரக்கணக்கான புறாக்கள் பசியால் இறக்கும் என்று மும்பையில், ஒரு ஜெயின் துறவி பிபிசி மராத்தியிடம் கூறினார்.
புறாக்களுக்கு உணவளிக்கும் தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் தெளிவு இல்லை என்று விலங்கு உரிமைகள் ஆர்வலர் மேகா உனியால் சுட்டிக்காட்டினார்.
இந்த முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில், ஒரு நடுநிலை தீர்வு காண முயற்சிகள் நடைபெறுகின்றன.
பீட்டா இந்தியா அமைப்பின் உஜ்வல் அக்ரைன், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் புறாக்களுக்கு உணவளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
“இது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடத்தை சுத்தம் செய்யவும், சுகாதாரத்தை பராமரிக்கவும் போதுமான நேரத்தை வழங்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பொது ஆரோக்கியம், உணர்ச்சி பிணைப்பு என இரண்டுக்குமே மதிப்பு வழங்கமுடியும்,” என்று அவர் கூறினார்.
மும்பை உயர் நீதிமன்றம், மாற்று வழிகளை பரிந்துரைக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட, இடைவெளி விடப்பட்ட உணவளிப்பு அனுமதிக்கப்படலாம் என்று மும்பை உள்ளாட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
சையத் இஸ்மத்தை பொறுத்தவரை பறவைகளுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையேயான உறவை மாற்றுக் கோணத்தில் சிந்திப்பதில்தான் தீர்வு இருக்கிறது.
“நாம் நமது நகரங்களை புறாக்களுடன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுடனும் எவ்வாறு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மறு சிந்தனை செய்ய வேண்டியதற்கான நேரமாக இது இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு