பட மூலாதாரம், @Shafiqu37245746
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 8 மாதங்கள் ஆகின்றன. இந்த 8 மாதங்களில், பல்வேறு காலக்கட்டத்தில் அங்கே வாழும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக இந்தியா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனஸை தாய்லாந்தில் சந்தித்தார். அப்போது வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வங்கதேசம் மறுத்துவிட்டது.
ஆனால் தற்போது வங்கதேசம், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த பின்னணியில் வங்கதேசம் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, “இந்த வன்முறையில் வங்கதேசத்தின் தலையீடு இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அது உண்மையாக இருப்பின், இதற்கு மத்திய அரசே பொறுப்பு. ஏன் என்றால் எல்லை பாதுகாப்புப்படைதான் (பி.எஸ்.எஃப்) எல்லையோரத்தில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது,” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் வங்கதேசத்தின் பெயர் அடிபட்ட நிலையில், இதற்கு பதில் அளித்துள்ளது அந்த நாடு.
வங்கதேச இடைக்கால அரசின் செய்தித்துறை செயலாளர் ஷஃபிகுல் ஆலம், “முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற வன்முறைக்கு வங்கதேசத்தை காரணம் காட்டும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன். மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது எங்கள் நாடு. மேலும் இந்தியா மற்றும் வங்கதேச அரசு கூட்டாக இணைந்து சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பதில் என்ன?
ஷஃபிகுல் ஆலமின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அன்று விளக்கம் அளித்துள்ளது.
“மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வங்கதேசம் தெரிவித்த கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். வங்கதேச சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு எதிராக தொடர்ச்சியாக இந்தியா குரல் எழுப்பி வருகிறது.
தற்போது அதே போன்ற கருத்துகளை வேண்டுமென்றே வங்கதேசம் இந்த விவகாரத்தில் தெரிவித்துள்ளது. தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு பதிலாக, வங்கதேசம் அந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும்,” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசமும் பாகிஸ்தானும் நெருக்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளன.
பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளர் அம்னா பலோச் வங்கதேசத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் முகமது யூனஸை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். அவரிடம் இரு நாட்டு உறவையும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார் யூனஸ்.
இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த சாத்தியமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று அம்னா பலோச் தெரிவித்தார்.
ஏப்ரல் மாத இறுதியில் பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷ்க் தார் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் பலோச் தெரிவித்துள்ளார்.
அவருடைய வருகை இவ்விரு நாட்டு உறவை மேலும் மேம்படுத்தும் என்றும் பலோச் கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த முகமது யூனஸ், அனைத்து அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேசமும் இஸ்லாமிய அரசியலும்
மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. மொழி அடிப்படையில் அந்த நாட்டில் இருந்து வங்கதேசம் பிரிந்து வந்தது. வங்கதேச சுதந்திரத்தின் அஸ்திவாரம் வங்க தேசியவாதமாகும். ஆனால் அந்த தேசியவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல.
வங்கதேசம் பிரிந்து வந்த போது, பாகிஸ்தான் மத அடிப்படையில் உருவானது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பினார்கள். அனைத்தும் மத அடிப்படையில் அமைய வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தாக்கம் நிலவியது. அந்த சூழலில், மத அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முடிவு தவறாக பார்க்கப்பட்டது. மேலும் வங்க மொழி பேசுபவர்கள் என்ற அடையாளம் இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து வேறுபட்டது என்று மக்கள் கூறினார்கள்.
வங்கதேசம் உருவான போது, வங்க தேசியவாதம் மற்றும் மதசார்பற்ற குடியரசாக அந்த நாடு உருவானது. வங்கதேசம் மதச்சார்பின்மை நாடாக இருக்க வேண்டுமென ஷேக் முஜிபூர் ரஹ்மான் முடிவு செய்தார்.
பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்ததால் ஏற்பட்ட விளைவுகளின் அனுபவத்தின் வாயிலாக இந்த முடிவு எட்டப்பட்டது. தீவிர இஸ்லாமியக் குழுக்களுக்கு தடையும் அறிவிக்கப்பட்டது. ஏன் என்றால் அந்த குழுக்கள் பாகிஸ்தான் சார்பு கொண்டதாக கருதப்பட்டது.
ஆனால் அந்த மதசார்பினை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1975-ஆம் ஆண்டு வங்கதேசத்தை நிறுவிய ஷேக் முஜிபூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டார். ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியது. இது வங்கதேசத்தின் மதசார்பின்மைக்கு அடியாக மாறியது.
பட மூலாதாரம், Getty Images
ராணுவ சர்வாதிகாரி ஜியா உர் ரஹ்மான், 1977-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அரசமைப்புச் சட்டத்தில் இருந்து மதசார்பின்மை என்ற பதத்தை நீக்கினார். மேலும் இஸ்லாமியக் கட்சிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
1988-ஆம் ஆண்டு ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷாத், வங்கதேசத்தின் ஆட்சி மதமாக இஸ்லாத்தை அறிவித்தார்.
2009-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் கட்சி ஆட்சியை கைப்பற்றிய பிறகு, மதசார்பின்மை என்ற பதம் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படும் என்று உறுதி அளித்தது. அதன்படி 2011-ஆம் ஆண்டு மதசார்பின்மை சேர்க்கப்பட்டது. இருப்பினும் இஸ்லாம் ஆட்சி மதமாக தொடர்ந்தது.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 2-ன் படி வங்கதேசத்தின் ஆட்சி மதமாக இஸ்லாம் இருக்கிறது. அதே நேரத்தில் பிரிவு 12, வங்கதேசம் ஒரு மதசார்பற்ற நாடு என்றும் அனைத்து பிரிவினருக்கும் சம உரிமைகள் உள்ளது என்றும் கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, வங்கதேசம் அதன் வங்க தேசியவாதத்தில் இருந்து விலகி மீண்டும் இஸ்லாமிய தேசியவாதம் நோக்கி நகருகிறதா என்ற கேள்வி எழுந்தது.
மதசார்பின்மையை நீக்க பரிந்துரை
இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனஸ் சில சீர்திருத்த குழுக்களை அமைத்துள்ளார். அதில் ஒன்று அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவாகும். அந்த குழுவானது வங்கதேச அரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பின்மையை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு