பட மூலாதாரம், Getty Images
ஏப்ரல் 16, 1853.
நாட்டில் முதன் முறையாக பயணிகள் ரயில் ஓடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.
அன்றில் இருந்து இன்று வரை 172 ஆண்டுகள் கடந்துவிட்டன.
2025-ஆம் ஆண்டில் இன்று சராசரியாக தினமும் 2 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
இது ஒரு நீண்ட பயணம் தான் அல்லவா?
ஆனால் இப்போது ரயில்வே பயணங்களைப் பற்றி இல்லாமல், ரயில்வேயில் உள்ள வேலை வாய்ப்புகளைக் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
‘தேசத்தின் உயிர்நாடி’ என்பது இந்திய ரயில்வேயின் வாசகம்.
அதே சமயம், ரயில்வே துறையை ‘வேலைவாய்ப்பின் உயிர் நாடி’ என்றும் அழைக்கலாம்.
காரணம், இந்தியாவில் அதிக அரசு வேலைகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ரயில்வே உள்ளது.
ரயில்வேயில் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
ரயில்வேயில் ஒவ்வோர் ஆண்டும் எத்தனை வேலைவாய்ப்பு உருவாகிறது?
பட மூலாதாரம், Getty Images
- டிக்கெட் கலெக்டர்
- பயிற்சி பெறுவபவர்
- உதவி லோகோ பைலட்
- ரயில்வே காவலர் (ஆர்பிஎஃப்)
இவற்றைத் தவிர ரயில்வேயில் பல்வேறு பணியிடங்கள் உள்ளன. அவற்றுக்கான காலியிடங்கள் குறித்து அடிக்கடி அறிவிப்புகள் வெளியாகின்றன. இந்த வேலைகள் வெவ்வேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இந்திய ரயில்வே துறையில் வேலை பெற முயற்சிப்பவர்கள், ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியம் (RRB) அல்லது ரயில்வே ஆள் சேர்ப்பு செல் (RRC) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சில பதவிகளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதும் அவசியம்.
ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் ரயில்வேயில் ஒரு நம்பிக்கைக்குரிய பணியைத் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம்.
தற்போது, ரயில்வேயில் சுமார் 12 லட்சம் முதல் 13 லட்சம் நிரந்தர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 2014 முதல் 2024 வரை ரயில்வே 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை ரயில்வே, பணியில் நியமித்துள்ளது. அதற்கு முன்பு, 2004 முதல் 2014 வரை 4.11 லட்சம் பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைத்தது.
தற்போது சுமார் 2.74 லட்சம் குரூப் சி பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக உள்ளன.
குரூப் சி என்பது மேற்பார்வை, தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத செயல்பாட்டு பணியிடங்களை குறிக்கிறது.
இதில் ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்), இளநிலை பொறியாளர், எழுத்தர் போன்ற பதவிகள் அடங்கும்.
ரயில்வே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மண்டலங்களில் பல சிறு பிரிவுகளும் உள்ளன.
இந்த மண்டலங்களில் தொழில்நுட்பம், நிர்வாகம், மருத்துவம், செயல்பாடு மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போன்ற துறைகளில் ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது.
ரயில்வே வேலைவாய்ப்புகள்
பட மூலாதாரம், Getty Images
ரயில்வேயில் குரூப் ஏ, பி, சி மற்றும் டி வேலைகள் வெவ்வேறு கல்வித் தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் கிடைக்கின்றன.
குரூப் ஏ: யுபிஎஸ்சி தேர்வு மூலம் (இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை, கணக்கு சேவை, பொறியாளர் சேவை போன்றவை) பெறும் பணி வாய்ப்பு.
குரூப் பி : குரூப் சியிலிருந்து பதவி உயர்வு பெற்றவர்கள் இந்தப் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
குரூப் சி: ஆர்ஆர்பி தேர்விலிருந்து (எ.கா: டிக்கெட் கலெக்டர், எழுத்தர், லோகோ பைலட்) தேர்ச்சி பெற்றவர்கள்.
குரூப் டி: ஆர்.ஆர்.சி தேர்விலிருந்து (10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கான பதவிகள்) தேர்ச்சி பெற்றவர்கள்.
பெரும்பாலானவர்கள் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி வாய்ப்புகள்:
- இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர்
- கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர்
- வணிக மற்றும் டிக்கெட் கிளர்க்
- இளநிலை நேர காப்பாளர்
- டிக்கெட் கலெக்டர் (TC)
- ரயில்வே காவலர் (RPF)
- நிலைய மேலாளர் ( தொழில்நுட்பம் அல்லாத பதவிகள்)
- சரக்கு காப்பாளர்
- உங்களுக்கு அறிவியல் பின்னணி இருந்தால், உதவி லோகோ பைலட் (ALP) மற்றும் டெக்னீஷியன் போன்ற பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு (ITI) செல்லும் மாணவர்களுக்கு, ரயில்வே ஒரு நல்ல தேர்வாகும்.
சம்பள விவரம்
பட மூலாதாரம், Getty Images
ரயில்வே வேலைவாய்ப்பு நிரந்தர மாத ஊதியத்துடன் கூடுதலாக பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது.
- ஆரம்ப சம்பளம்: மாதம் ₹25,000 முதல் ₹45,000 வரை
- வருடாந்திர சம்பளம்: ₹3.5 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை
அத்துடன்,
- இலவச அல்லது தள்ளுபடி விலைவில் ரயில் பாஸ்கள்
- ரயில்வே குடியிருப்புகளில் தங்குமிடம்
- மருத்துவ வசதிகள்
- ஓய்வூதியம்
தகுதிகள்
பட மூலாதாரம், Getty Images
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (சில பதவிகளுக்கு ஐடிஐ அல்லது பட்டப்படிப்பு தேவை).
குறைந்தபட்ச மதிப்பெண்: 50% அல்லது அதற்கு மேல்.
வயது வரம்பு: பொதுவாக 18 முதல் 30 வயது வரை (SC/ST/OBC/PwD பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
ரயில்வே ஆள் சேர்ப்பு எவ்வாறு நடக்கிறது என்பதற்கான எளிய கால வரிசை:
- முதலில் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் (RRB/RRC வலைத்தளம்)
- கணினி அடிப்படையிலான தேர்வு முறை(CBT) – பொது அறிவியல், கணிதம், பகுத்தாய்வு செய்யும் திறன், அறிவியல், நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.
- திறன் தேர்வு / உடல் திறன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
- மருத்துவப் பரிசோதனை
இந்தச் செயல்முறைகளை முடித்த பிறகு, ஒரு தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி?
வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் ஆர்ஆர்பியின் (RRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகின்றன.
- கட்டணம்: ₹500 (CBT-1க்கு பிறகு ₹400 திரும்பத் தரப்படும்).
- தேவையான ஆவணங்கள்: கல்விச் சான்றிதழ், அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் பிற ஆவணங்கள்.
- முழு விண்ணப்ப செயல்முறையையும் ஆன்லைன் வாயிலாகவே செய்யலாம்.
ரயில்வேயில் பதவி உயர்வு எப்படி?
ரயில்வே துறையில் உள்ள மிகப்பெரிய நன்மையாக பதவி உயர்வையும் நிலைத்தன்மையையும் குறிப்பிடலாம். எழுத்தர் முதல் நிலைய மேலாளர் வரை பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒருவர் ஏஎல்பி லோகோ பைலட் நிலையில் இருந்து சீனியர் லோகோ பைலட்டாக பதவி உயர்வு பெறலாம்.
அதேபோல் ஒருவர் ரயில்வே காவலர் பதவியில் இருந்து ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) வரையிலும் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது.
மனதில் கொள்ள வேண்டியவை
பட மூலாதாரம், Getty Images
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியரான ஜீத் ராணா, இந்தத் தேர்வில் கலந்துகொள்ள முடிவு செய்யும் ஒவ்வொரு மாணவரும், கடந்த ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளை முன்கூட்டியே பயிற்சி செய்து பார்ப்பது மிக முக்கியம் என்று கூறுகிறார்.
இதன் மூலம் பொதுவாக என்ன வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு ஐடியா உங்களுக்குக் கிடைக்கும்.
மாணவர்கள் பாடத்திட்டத்தை படித்து முடித்துவிட்டு, ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாக பயிற்சி செய்ய வேண்டும், குறிப்பாக கணிதத்தை நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.
தேர்வுக்கு முன்பு ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 100 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
அப்படி செய்தால் தேர்வின் போது அவசரப்படாமல், நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் அலைபேசியை எடுத்துத் தேடத் தொடங்குங்கள். ரயில்வே பணிவாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.