• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

இந்திய விண்வெளி தினம்: இஸ்ரோ கடந்த 55 ஆண்டுகளில் படைத்த சாதனைகள் என்ன? ஓர் அலசல்

Byadmin

Aug 23, 2025


இஸ்ரோ, இந்தியா

பட மூலாதாரம், ISRO

சந்திரயான்-3-திட்டத்தின் கீழ் விக்ரம் என்ற தரையிறங்கி கலமும், பிரக்யான் என்ற உலாவியும் வெற்றிகரமாக மென்தரையிறங்கியதை நினைவுகூரும் விதமாக, ஆகஸ்ட் 23-ஆம் தேதியை இந்திய அரசு தேசிய விண்வெளி நாளாக கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தியாவின் தேசிய விண்வெளி நாளான இந்நாளில், 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)

புதிதாக சுதந்திரம் பெற்ற தம் நாட்டின் ஒளிமிகு எதிர்காலத்திற்கும் நல்வாழ்வுக்கும் அறிவியலும் தொழில்நுட்பமும் மிக முக்கியமானவை என இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கருதினார். அதன் தொடர்ச்சியாக, அந்த காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னணியில் வளர்ந்துவரும் நிலையில் இருந்த அணுசக்தி துறை, விண்வெளித் துறை முதலான எல்லா அறிவியல் வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்.

ஹோமி பாபாவின் தூண்டுதலாலும், நேருவின் ஆதரவாலும், ‘விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளித் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடுகள்’ இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிக அத்தியாவசியம் எனக் கருதப்பட்டு, இதற்கென சிறப்பு அமைப்பு ஒன்று விக்ரம் சாராபாய் நிறுவிய ஆமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம் (பிஆர்எல்) நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இந்த நிறுவனம் அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதன் தொடர்ச்சியாக 1962-ஆம் ஆண்டில், நேருவின் ஆதரவோடு விக்ரம் சாராபாய் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை (இன்காஸ்பார்) நிறுவினார்.

இஸ்ரோ நிறுவப்படுவதற்கு முன்னோடியாக இருந்த இக்குழு, இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிக்கு அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இந்த விண்வெளி அமைப்பின் மேலாண்மையில் அதே ஆண்டு, திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தும்பா பூமத்திய ரேகை ஏவூர்தி ஏவு நிலையம் (டெர்ல்ஸ்) கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1963 நவம்பர் 21-ஆம் தேதி, இந்த ஏவுதளத்திலிருந்து முதல் ஏவூர்தி ஏவப்பட்டது.

By admin