பட மூலாதாரம், Getty Images
“இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்.”
ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார்.
ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த பிறகும் நடந்த விஷயங்கள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது.
ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க முன்னேறினர். ஆனால், அதற்குள் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிவிட்டனர். டாஸின் போதும் சூர்யகுமார் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இடையே சடங்குபூர்வமான “கை குலுக்கல்” நடக்கவில்லை.
போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் ஆகாவுக்குப் பதிலாகப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கலந்து கொண்டார். “ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், எதிரணி அவ்வாறு செய்யாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது” என்று கூறினார் அவர்.
ஹெசன் மேலும் கூறுகையில், “நாங்கள் கை குலுக்க முன்னேறினோம், ஆனால் அதற்குள் அவர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டனர். இது ஏமாற்றமளிக்கும் முடிவு. நாங்கள் எங்கள் ஆட்டத்தால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம், ஆனால் கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம்.”
ரெஃப்ரியை குறிவைக்கும் பாகிஸ்தான்
பட மூலாதாரம், Reuters
இந்த சர்ச்சையை மேலும் வளர்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இப்போது போட்டி ரெஃப்ரி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது.
பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, எக்ஸ் தளத்தில், “ஐசிசி நடத்தை விதி மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி விதிகளை மீறிய போட்டி ரெஃப்ரி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது” என்று எழுதினார்.
“எனக்கு நம் நாட்டின் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இல்லை” என்று நக்வி மேலும் எழுதினார்.
டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்க வேண்டாம் என்று போட்டி ரெஃப்ரி ஆண்டி பைக்ரோஃப்ட் கூறியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் போட்டி ரெஃப்ரி தரப்பில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று இந்திய அணியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதும், போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதும் நீண்ட கால பாரம்பரியமாகும். கோவிட் காலகட்டத்தில் இது சிறிது காலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அது தவிர இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
கை குலுக்காதது குறித்து இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட பெரியவை” என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதற்கிடையில், இந்தியக் கேப்டனோ அல்லது அணியோ கை குலுக்காததன் மூலம் எந்த விதியையும் மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம், ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்குவது ஒரு “நல்லெண்ண சைகை” மட்டுமே என்று கூறினார்.
” நீங்கள் விதிகளைப் படித்தால், எதிரணியுடன் கை குலுக்குவது குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு உலகில் காணப்படும் ஒரு நல்லெண்ண சைகை, ஒரு பாரம்பரியம், ஆனால் இது ஒரு சட்டம் அல்ல” என்றார் அந்த மூத்த அதிகாரி.
“சட்டம் இல்லாதபோது, எதிரணியுடன், குறிப்பாக, மோசமான உறவுகளின் வரலாறு கொண்ட ஒரு எதிரணியுடன் கை குலுக்க இந்திய அணிக்கு எந்தக் கட்டாயமும் இல்லை,” என அவர் மேலும் கூறினார்.
எம்.சி.சி விதிமுறைகள் என்ன சொல்கின்றன?
பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் எந்த நாட்டில் விளையாடப்பட்டாலும், எந்த நாடுகள் விளையாடினாலும், சில விதிகளின்படிதான் விளையாடப்படும். அந்த விதிகளைத் தீர்மானிப்பது எம்சிசி ஆகும். எம்சிசி என்றால் மெரிலெபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) ஆகும்.
இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கிளப். லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளர் இந்த கிளம் ஆகும். இதுவே கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கி பாதுகாக்கிறது
அந்த கிளப்பின் வலைத்தளத்தில் தேடியபோது, கை குலுக்குதல் அல்லது கை கொடுப்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் இல்லை. ஆனால், அதன் முன்னுரையின் (preamble) கீழ் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- மரியாதை, கிரிக்கெட்டின் உணர்வில் மையமாக உள்ளது.
- உங்கள் கேப்டனின் அதிகாரம், எதிரணி மற்றும் நடுவருக்கு மரியாதை கொடுங்கள்.
- நேர்மையாக விளையாடுங்கள்.
- உங்கள் நடத்தையின் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும்.
- சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.
- எதிரணிக்கு வெற்றி கிடைக்கும்போது வாழ்த்துங்கள், உங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுங்கள்.
- போட்டி முடிந்த பிறகு, முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு