பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தாரேகுஜமான் ஷிமுல்
- பதவி, பிபிசி நியூஸ் பாங்களா, டாக்கா
-
வங்கதேசம் சுதந்திரம் அடைந்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் இந்திரா காந்தி டாக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் அதுவாகும்.
வங்கதேசத்தில் இந்திரா காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்துக்கு வந்திருந்தார். இந்தப் பயணத்தை ஒட்டி ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது இந்திரா காந்தி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1972 மே 19 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் ‘இந்தியா-வங்கதேச மைத்ரி (நட்பு) ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்டது. 25 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போது அரசியல் வட்டாரங்களில் பல விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
வங்கதேசத்தின் அன்றைய எதிர்கட்சிகள் இதை ‘அடிமை ஒப்பந்தம்’ என்று தொடர்ந்து அழைத்தன.
சர்ச்சை ஏற்படும் அளவுக்கு அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது? அந்த அம்சங்கள் என்ன என்று இப்போது நாம் பார்க்கலாம்.
ஒப்பந்தத்தின் பின்னணி
பட மூலாதாரம், THE DAILY IT FAQ
1972 இல் டாக்கா மண்ணில் இந்திரா காந்தி காலடி எடுத்து வைப்பதற்கு ஒரு வருடம் முன்பு அப்போதைய பாகிஸ்தான் ராணுவ அரசு, ‘ஆபரேஷன் சர்ச் லைட்’ என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் இங்கு பெரிய அளவில் படுகொலைகளை நடத்தியது.
மார்ச் 25 ஆம் தேதி நடந்த படுகொலைகளுக்கு பிறகு வங்கதேசம் ஒருதரப்பாக தனது சுதந்திரத்தை அறிவித்தது.
அதன் பிறகு ஒரு ரத்தக்களரி தொடங்கியது. அந்தப் போரின்போது வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக ஆனார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு அந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளித்தது. கொரில்லா போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் ஆயுதங்கள் வாங்குவதற்கும் உதவியது.
பின்னாளில் இந்தியா நேரடியாக இந்தப் போரில் களமிறங்கிய காலமும் வந்தது. முக்தி வாஹினி மற்றும் மித்ர வாஹினியின் கூட்டுத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் 1971 டிசம்பர் 16 ஆம் தேதியன்று டாக்காவில் சரணடைந்தனர். அதே நாளில் உலக வரைபடத்தில் சுதந்திர வங்கதேசம் பிறந்தது.
ஒன்பது மாத கால விடுதலைப் போரின் போது இந்திரா காந்தி வங்கதேசத்துக்கு ஆதரவாக நின்று உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவரை தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று இந்திரா காந்தி 1972 மார்ச் 17 ஆம் தேதி டாக்கா சென்றடைந்தார். அவர் பயணித்த ‘ராஜ்ஹன்ஸ்’ என்ற சிறப்பு விமானம் அன்று காலை 10.30 மணியளவில் தேஜ்காவ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய அவரை ஷேக் முஜிபுர் வரவேற்றார். அன்று அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் ஷேக் முஜிபுரின் பிறந்தநாளும் கூட. எனவே விடுமுறைக்கான காரணம் குறித்து பலரது மனதில் குழப்பம் எழுந்தது.
இதையடுத்து இந்திரா காந்தியின் டாக்கா வருகையை முன்னிட்டே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று வங்கதேச அரசின் அப்போதைய தலைவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
1972 மார்ச் 17 ஆம் தேதி ‘தி டெய்லி இத்தெஃபாக்’ நாளிதழ் தனது முதல் பக்க செய்தியில் ஷேக் முஜிபுர் கூறியதை மேற்கோள் காட்டி “எதிர்காலத்தில் எனது பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை இருக்காது. இந்த நாள் ‘கடின உழைப்பு மற்றும் அதிக நலனுக்கான அர்ப்பணிப்பு’ நாளாக கொண்டாடப்படும்,” என்று குறிப்பிட்டது.
இரவு உணவின் போது உரை
பட மூலாதாரம், THE DAILY IT FAQ
இந்திரா காந்தி, தேஜ்காவ் விமான நிலையத்திலிருந்து வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டரில் நேரடியாக ‘பங் பவனை’ அடைந்தார். அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது மெஹபூப் தாலுக்தார், பங் பவனில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் வங்கதேசத்தின் தேர்தல் ஆணையராகவும் ஆனார்.
இந்திரா காந்தியின் வருகைக்காக அன்றைய தினம் பங் பவன் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததாக ‘பங் பவனில் ஐந்து ஆண்டுகள்’ என்ற புத்தகத்தில் தாலுக்தார் குறிப்பிட்டுள்ளார்.
“கட்டடத்தின் உட்புற அலங்காரத்திற்காக திருமதி. பசந்த் சௌத்ரி கொல்கத்தாவிலிருந்து பிரத்யேகமாக அழைக்கப்பட்டார். பசந்த் சௌத்ரி ஒரு பிரபல திரைப்பட நடிகரும் நாடகக் கலைஞரும் ஆவார். அவருடைய மனைவி ஒரு பிரபலமான இண்டீரியர் டெக்கரேட்டர். அந்தப் பெண்மணி பங் பவனை சிறந்த முறையில் அலங்கரிக்க இரவும் பகலும் உழைத்தார்,” என்று அவர் எழுதியுள்ளார்.
இந்திரா காந்தி தனது பயணத்தின் முதல் நாள் மாலை டாக்காவில் உள்ள சுஹ்ரவர்தி உத்யானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மைதானத்தின் ஒரு ஓரத்தில் படகு வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மெஹபூப் தாலுக்தார் தனது புத்தகத்தில், “அந்த மேடைக்கு இந்திரா காந்தி மேடை என்று பெயரிடப்பட்டது” என்று எழுதியுள்ளார்.
இந்தியப் பிரதமர் தனது பயணத்தின் இரண்டாவது நாளில் குடிமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமின்றி பங் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
“இந்தியா – வங்கதேசம் இடையே நிலவும் நட்புறவை கெடுக்க சில உள் மற்றும் வெளி சக்திகள் முயற்சிக்கும்,” என்று அப்போது பேசிய இந்திய பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த நாள் அவர் ஆற்றிய உரையை குறிப்பிட்டு, ‘தி டெய்லி இத்தெஃபாக்’ தனது அறிக்கையில், “இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு படிப்படியாக வலுவடைந்து வெற்றிபெறும் என்று இந்திரா காந்தி முழு நம்பிக்கை தெரிவித்தார்” என்று கூறியிருந்தது.
நட்பு ஒப்பந்தத்தில் கையொப்பம்
பட மூலாதாரம், Getty Images
சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் அதாவது மார்ச் 18 அன்று நட்பு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று இந்த சுற்றுப்பயணத்தின் போது வங்கதேசத்தின் சார்பாக இந்திரா காந்தியின் நெறிமுறைத் தலைவராக இருந்த ஃபரூக் செளத்ரி குறிப்பிடுகிறார்.
‘இந்திரா காந்தியின் வருகையின் இரண்டாவது நாளில் ஷிதாலக்ஷ்யா நதியில் படகு பயணத்தின் போது ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் நிலத்தில் அல்ல, தண்ணீரில் செய்துகொள்ளப்பட்டது,’ என்று பிபிசி பங்களாவுடனான உரையாடலில் செளத்ரி கூறியிருந்தார்.
‘ஷிதாலக்ஷ்யா நதியில் படகு சவாரி நடந்தது. ஆனால் அப்போது இரு தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் அடுத்த நாள் அதாவது மார்ச் 19 ஆம் தேதி கையெழுத்தானது,” என்று தி டெய்லி இத்தெஃபாக்’ நாளிதழில், ‘முஜிபுருக்கும் இந்திராவுக்கும் இடையே நடந்த வெற்றிகரமான பேச்சு வார்த்தை’ என்ற தலைப்பில் வெளியான செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
‘தி டெய்லி இத்தெஃபாக்’ மார்ச் 20 ஆம் தேதியன்று தனது முதல் பக்கத்தில் “நட்பு ஒத்துழைப்பு அமைதி” என்ற தலைப்பில் தனது முக்கிய செய்தியை வெளியிட்டது.
அதில், “இந்திரா காந்தியின் பயணத்தின் முடிவில் அவர் டாக்காவிலிருந்து புறப்படுவதற்கு முன் இரு தலைவர்களும் பங் பவனில் 12 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த ஒப்பந்தத்தில் இருந்தது என்ன?
பட மூலாதாரம், THE DAILY IT FAQ
‘இந்தியா-வங்கதேச நட்பு ஒப்பந்தம்’ என்ற பெயரிலான அந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 12 அம்சங்கள் இருந்தன. இரு நாடுகளும் பரஸ்பரம் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும். ஒன்று மற்றதன் உள்விவகாரங்களில் தலையிடாது.
இருதரப்பும், ஒன்று மற்றொன்றுக்கு எதிரான ராணுவக் கூட்டணியில் சேராது. ஒன்று மற்றதை தாக்காது. அடுத்தவரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த வேலைக்கும் தனது நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காது போன்ற அமசங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இது தவிர அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்களும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்தன.
இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் 1971 ஆம் ஆண்டின் இந்திய-சோவியத் உடன்படிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டு ஒப்பந்தங்களும் ஒரே மாதிரியானவை என்று பல வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், சோவியத் யூனியனுடனான ஒப்பந்தத்தின் காலம் 20 ஆண்டுகள். அதேநேரம் வங்கதேசத்துடனான ஒப்பந்தத்தின் காலம் 25 ஆண்டுகள்.
இந்த ஒப்பந்தத்தில் புதிய ‘விஷயம்’ எதுவும் இல்லை. இது இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் நகல் என்று 2011 இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஃபரூக் செளத்ரி கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் வங்கதேசத்தில் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை அப்படியே வைத்திருப்பதற்கான ஒரு சிறந்த நடவடிக்கை இந்த ஒப்பந்தம் என்று செளத்ரி கருதினார்.
“இது எங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நாங்கள் நினைத்தோம். பாகிஸ்தானின் நோக்கம் என்னவென்று அதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. எனவே ஒரு நாட்டுடன் சமத்துவத்தின் அடிப்படையில் எங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அப்படியே வைத்துக்கொண்டு அதை மேலும் வலுப்படுத்தினோம்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அருந்ததி கோஷ் அப்போது டாக்காவில் இந்தியதூதரகத்தில் முதன்மை செயலராக இருந்தார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ‘முக்கியமான விஷயம்’ என்று அவர் கருதுகிறார்.
2011 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், “நமக்கு எந்தவிதமான புதிய நட்பு தேவையோ அது நமக்குள் இருக்கும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு சான்று என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், THE DAILY IT FAQ
இந்திரா காந்தியின் டாக்கா பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஷேக் முஜிபுரின் முதல் இந்திய சுற்றுப்பயணத்தின் போதே இது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது என்று பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
சுதந்திர வங்கதேசத்தின் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1972 பிப்ரவரி முதல் வாரத்தில் இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா வந்தார். அவரை சந்திப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் இருந்து அங்கு சென்றிருந்தார்.
கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. அந்த நேரத்தில் ஷேக் முஜிபுர், இந்திரா காந்தியை வங்கதேசத்திற்கு வருமாறு அழைத்தார். அதே பயணத்தின் போது ஷேக் முஜிபுர் வங்கதேசத்தில் இருந்து இந்திய துருப்புகளை திரும்பப் பெறுவது குறித்தும் வலியுறுத்தினார்.
ஃபரூக் சௌத்ரி தனது சுயசரிதையான ‘ஜீவனர் பாலுகாபெலயா’வில், “பங்கபந்து முஜிபுர் தனது இரண்டு நாள் பயணத்தின்போது, வங்கதேசத்தில் இருந்து இந்தியப் படைகளை திரும்பப் பெறும் விவகாரத்தில் தீவிரமாக இருந்தார்” என்று எழுதியுள்ளார்.
அந்த பயணத்தின் இரண்டாவது நாளில் ஷேக் முஜிபுர், இந்திரா காந்தியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘1972 மார்ச் 25 க்குள் இந்தியப் படைகளை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை முடிவடையும்’ என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்தில் இருந்து இந்திய வீரர்கள் திரும்பிவிட்டனர்.
‘அடிமை ஒப்பந்தம்’
பட மூலாதாரம், Getty Images
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்று பரூக் செளத்ரி குறிப்பிடுகிறார். ஆனால் அது கையெழுத்தான பிறகு பல விமர்சனங்கள் எழுந்தன.
சில அரசியல் கட்சிகளும், அவற்றின் ஊதுகுழல் என்று சொல்லப்படும் சில நாளிதழ்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து விமர்சனங்களை எழுப்பின.
மௌலானா அப்துல் ஹமீத் கான் பசானியின் செய்தித்தாள் ‘ஹக் கதா’, ஃபிர்தௌஸ் அகமது குரேஷியின் தலையங்கத்துடன் வெளியான ‘தேஷ் பங்களா’ மற்றும் ‘தி டெய்லி கனோகண்டோ’ போன்ற செய்தித்தாள்கள் இதில் அடங்கும்.
இந்த செய்தித்தாள்கள், இந்திரா-முஜிபுர் ஒப்பந்தத்தை ‘அடிமை ஒப்பந்தம்’ என்று விவரித்தன.
மூத்த பத்திரிகையாளர் அபேத் கான் அப்போது ‘தி டெய்லி இத்தெஃபாக்’ நாளிதழில் பணியாற்றி வந்தார். 2022 இல் பிபிசி பங்களாவுடனான உரையாடலில் அவர், “விமர்சனத்தில் ஒரே ஒரு அம்சம் இருந்தது. ஷேக் முஜிபுர் வங்கதேசத்தை இந்தியாவிடம் குத்தகைக்கு ஒப்படைத்துள்ளார் என்பதே இந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் என்று அவர்கள் கருதினர்” என்று கூறியிருந்தார்.
வங்கதேசத்தின் அன்றைய எதிர்கட்சிகள் முஜிபுர் எதிர்ப்பு மற்றும் ஒப்பந்த எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டன. இதை ‘அடிமை ஒப்பந்தம்’ என்று தொடர்ந்து அழைத்தன.
அரசியல் கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க மட்டுமே இவ்வாறு செய்தன என்று எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான மொகினுதின் அகமது குறிப்பிட்டார்.
இந்திரா-முஜிபுர் ஒப்பந்தம், 1971 ஆகஸ்ட் மாதம் கையெழுத்திடப்பட்ட இந்திய-சோவியத் ஒப்பந்தத்தின் நகல். ஆனால் இதற்கு இந்தியாவில் எந்த எதிர்ப்பும் இல்லை என்று அகமது தெரிவித்தார்.
“வங்கதேசத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் இங்கு அரசு என்ன செய்தாலும் சிலர் எப்போதுமே அதை எதிர்ப்பார்கள்” என்று அவர் கூறினார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் வேலை நிறுத்தம் நடத்தியதாக அப்போது ‘தி டெய்லி கனோகண்டோ’ நாளிதழில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய அகமதுக்கு, நினைவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் ‘ஒவ்வொரு விஷயத்திற்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தன.
“எதிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சிலர் இதை எதிர்த்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவர்களும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை,” என்று அகமது பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.
இது ஒரு ‘தீங்கற்ற’, ஆனால் ‘தேவையான’ ஒப்பந்தம் என்று ஃபரூக் செளத்ரி கருதுகிறார்.
“1972 உடன் ஒப்பிடும் போது 1997 இல் உலகம் முற்றிலும் மாறிவிட்டது. அப்போது சோவியத் யூனியன் இல்லை. அது ரஷ்யாவாக மாறிவிட்டது. கடந்த காலம் அதை பொருத்தமற்றதாக்கிவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் மரணத்தை நான் கண்கூடாகப் பார்த்தேன். முதல் விஷயம் இது தேவையில்லாதது. அது இயற்கை மரணம் எய்தட்டும்,” என்று சௌத்ரி 2011 இல் பிபிசி பங்களாவிடம் கூறினார்.
“இந்த ஒப்பந்தத்தின் புதுப்பிப்பு தொடர்பாக அச்சம் கொண்டிருந்தவர்களின் அச்சம் தவறு என்று நிரூபணமாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் காலத்தின் தேவை என்று நான் நினைக்கிறேன். அந்த ஒப்பந்தம் எங்கள் தைரியத்தை அதிகரித்தது மற்றும் எங்கள் வலிமையை அதிகரித்தது. இது நமது இறையாண்மையை பலப்படுத்தியது. இது உளவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
எவ்வளவு பலன் கிடைத்தது?
பட மூலாதாரம், Getty Images
இந்தியா-வங்கதேச நட்பு ஒப்பந்தம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது, அது உண்மையில் ஏதேனும் பலனை அளித்ததா இல்லையா என்பதே கேள்வி.
“உண்மை என்னவென்றால், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமல்படுத்த எந்த தரப்பும் கோரவில்லை அல்லது அதை செயல்படுத்த யாரும் முன்வரவில்லை,” என்று முன்னாள் தூதர் ஹுமாயுன் கபீர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.
“அந்த ஒப்பந்தத்தின் பொதுவான பகுதி கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்று 2015ஆம் ஆண்டு வெளியான தனது சுயசரிதையான ‘விபுல பிருத்வி’யில் டாக்டர் அனிசுஜ்மான் எழுதியுள்ளார்.
1975 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாததில் பெரும் பங்கு வகித்ததாக டாக்காவில் உள்ள இந்திய ஹைகமிஷனில் முதன்மை செயலராக இருந்த அருந்ததி கோஷ் கருதுகிறார்.
“ஷேக் முஜிபுரின் படுகொலைக்குப் பிறகு பல தவறான புரிதல்கள் எழுந்தன. எந்த நோக்கத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கோஷ் கூறினார்.
“நான் இருந்த வரை நட்பு இருந்தது. ஆனால் நமது தரப்பிலிருந்து பல தவறான புரிதல்கள் எழுந்தன,” என்று பிபிசி பங்களாவிடம் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் 1997 மார்ச் 19 இல் காலாவதியான போது வங்கதேசத்தில் அவாமி லீக் அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால் இந்தியாவோ அல்லது வங்கதேசமோ அதன் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு