மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் 2300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில், தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இருதரப்பிலும் மாறி, மாறி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தது. இதன் காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மலைக்கு செல்லும் இரு வழியிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்தனர். இதற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் காவல்துறையில் மனு கொடுத்தனர். ஆனாலும், திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நடப்பதாலும், போராட்டத்துக்கு அனுமதி கோரிய இடத்தில் மக்கள் அதிகளவில் கூடினால் பக்தர்களுக்கு இடையூறு மற்றும் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீஸ் அனுமதியை மறுத்துவிட்டது. உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மதுரையில் 144 தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யபட்டது. திருப்பரங்குன்றம் பகுதியில் மெயின்ரோடு நுழைவு பகுதி., சன்னதி தெரு, மலையைச் சுற்றிலும் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. கோயில் பகுதிக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
இந்த போராட்டம் எதிரொலியாக பக்தர்களும் அதிகளவில் வரவில்லை. மலைக்கு செல்லும் வழிகளும் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள கடைகள், ஓட்டல்கள் அடைக்கபட்டுள்ளன. இதன் காரணமாக கோயில் பகுதி, சன்னதி தெருக்கள் உள்ளிட்ட திருப்பரங்குன்றமே வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்தளவு பக்தர்கள் மட்டும் வந்தனர். இதனிடையே கோயிலுக்கு அருகில் திடீரென கொடியுடன் வந்து கோஷமிட்ட இந்து அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் தீவிர பாதுகாப்பால் திருப்பரங்குன்றம் பகுதிக்குள் போராட்டகாரர்கள் நுழைய முடியவில்லை.
வெளியூர்களில் இருந்து வருவோரை தடுக்க மாவட்டம், நகர எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் திவிரப்படுத்தியதால் யாரும் மதுரை நகரக்குள் வரமுடியவில்லை. மேலும், போராட்டத்தை முன்னெடுத்த இந்து முன்னணி போன்ற சில இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பாஜகவினர் முன் எச்சரிக்கையாக நேற்று இரவே கைது செய்யபட்டனர். சிலர் வீட்டு சிறையிலும் வைக்கபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட சில இந்து அமைப்பினரையும் ஆங்காங்கே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் மதுரை நகர காவல்துறை விதித்த அனுமதி மறுப்பை ரத்து செய்தும், மாவட்ட நிர்வாகம் விதித்த 144 தடை உத்தரவை ரத்து செய்தும் போராட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என, கலாநிதி உள்ளிட்ட இருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்குகள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகின்றன. ஒருவேளை இதில் அமைதி கிடைத்தால் மாலையில் ஒரு மணிநேரம் போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது என இந்து அமைப்பினர் கூறுகின்றனர்.