சென்னை: ‘இந்து தமிழ் திசை’ 2025 தீபாவளி மலரை, நடிகர் சிவகுமார் சென்னையில் நேற்று வெளியிட்டார்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘தீபாவளி மலர்’ 2013-ம் ஆண்டு முதல் வெளியாகிவருகிறது. 2025 தீபாவளி மலர் 276 பக்கங்களுடன் அனைத்து வயதினரும் படிக்கும் வகையிலான பல்வேறு சிறப்பு படைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மலரில் இடம் பெற்றுள்ள தமிழ் சினிமாவின் கானக்குயில் பி.சுசீலாவின் ஈடற்ற இசைப் பங்களிப்பு, நூற்றாண்டு கண்ட திரை ஆளுமைகளான ஆர்.எஸ்.மனோகர், எம்.பி.சீனிவாசன், கலை கங்காஆகியோரின் தனித்தன்மைகள், சிறப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளதை நடிகர் சிவகுமார் பாராட்டினார்.
இந்த தீபாவளி மலரில் நடிகர் சிவகார்த்திகேயன், ‘ராட்சசன்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார், ஸ்டாண்ட் அப் காமெடியில் தனி முத்திரை பதித்துவரும் அலெக்சாண்டர் பாபு, தமிழ்நாட்டின் நவீன ஓவிய அடையாளமாக மாறிவிட்ட ஓவியர் மருது, உலகெங்கும் தன் எழுத்தால் அறியப்படும் எழுத்தாளர் பாமா ஆகியோரின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. நாடக ஆளுமை அ.மங்கை, தனது 40 ஆண்டு கால நாடக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பஞ்ச ரங்கத் தலங்கள், பஞ்சகிருஷ்ணர் தலங்கள், பிரபலஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் அபிராமி அந்தாதிப் பாடல்கள் ஆகியவை ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சாய் அபயங்கர் முதல் ‘பொட்டல முட்டாயே’ புகழ் சுப்லாஷினி வரையிலான 10 இளம் சுயாதீன இசைக் கலைஞர்கள் குறித்தகட்டுரைகள், பிரபல சினிமா காட்சிகளை மையமாகக் கொண்ட நகைச்சுவை படக்கதைகள் ஆகியவை இடம்பெற்றுள் ளன.
எழுத்தாளர்கள் பாவண்ணன், பாரததேவி, ஏக்நாத், சவிதா, மலர்வதி ஆகியோர் எழுதியுள்ள சிறுகதைகள்; பிரபல எழுத்தாளர்கள் உதயசங்கர், கமலாலயன், நிவேதிதா லூயிஸ், ஜிஎஸ்எஸ், மாத்தளை சோமு, டாக்டர் வி.விக்ரம்குமார், பாரதி திலகர் உள்ளிட்டோர் எழுதியுள்ள கட்டுரைகளுடன் மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
276 பக்கங்கள் கொண்ட இந்த தீபாவளி மலரின் விலை ரூ.175. இணையதளம் மூலம் வாங்குவதற்கு: https://www.htamil.org/1387260