சென்னை: “போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய ராணுவத்துக்கு ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய பேரணி, போர் நினைவுச் சின்னத்தில் நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில், பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள், சர்வ மத பிரதிநிதிகள், அமைச்சர்கள், திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழக காவல் துறையின் ஆயுதப்படை, சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.