– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.
யாழ். நெடுந்தீவுப் பகுதிக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காகச் சென்றிருந்த சிறீதரன் எம்.பி., மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“நடைபெறவுள்ள குட்டித் தேர்தலில் குட்டி அரசு அமைப்பதற்கு ஆணையைத் தாருங்கள். அந்த ஆணையைப் பெற்று மீண்டும் நாம் ஆட்சியமைப்போம்.
இந்த நாட்டில் பல்வேறு அரசுகள் ஆட்சிப்பீடத்துக்கு வந்திருந்தாலும் அதில் எந்த அரசும் தமிழ் மக்களுக்கானதாக இருந்ததில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அந்த அரசுகள் எங்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்திருக்கின்றன.
அதே போன்று நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசும் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. அதிலும்
மாற்றம் எனக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசிடம் பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எமது மக்களிடத்தே இருக்கின்றன.
குறிப்பாக எங்களுக்கு எதிராக இப்போது யுத்தம் நடத்தவில்லை. ஆனால், மிக நூதனமாக இந்த மண்ணில் இருந்து அகற்றபட்டு வருகின்றோம்.
உதாரணத்துக்குச் சொல்வதாயின் எங்களுக்கு எதிராக மிகப் பெரிய படுகொலையை மஹிந்த அரசு இந்த மண்ணில் செய்திருந்தது. அதை மூடி மறைக்கும் செயற்பாட்டிலே இந்த அரசும் செயற்படுகின்றது.
குறிப்பாக குற்றம் நடக்கவில்லை என்றும், எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இவர்கள் சொல்கின்றனர். இதனை எமது மக்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
எமது மக்களுக்கு எதிராகப் படுகொலைகளைச் செய்தார்கள் என்ற குற்றத்துக்காக இலங்கையைச் சேர்ந்த நான்கு பேருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. அதேபோன்று கனடாவும் எங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றது.
இப்படி உலகம் எமக்காகச் சிந்தித்துச் செயற்படுகின்ற சூழலில் அந்த உலக நாடுகளுக்கு எதிராகத் தெற்கிலிருந்து பலரும் கொக்கரித்து வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது.
என்.பி.பி.தான் ஆட்சியை நடத்தி வருகின்றது. அதிலும் என்.பி.பி. இல்லாத தயாசிறி ஜயசேகர மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் புதுப் புது கதைகளைக் கூறிக் கொண்டு கொக்கரிக்கின்றனர்.
இதனைப் பார்க்கின்றபோது சிங்களவர்கள் தமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் ஒன்றாக உள்ளனர். ஆனால், தமிழ் மக்களாகிய நாங்கள்தான் பிரிந்து நிற்கின்றோம். அப்படியாக எங்களிடத்திலும் ஒற்றுமை அவசியம்.
சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது உலகத்தின் பூகோள அரசியலில் எங்களுக்கான மாற்றங்களும் மெல்ல மெல்ல நகருகின்றன எனத் தெரிகின்றது.
இந்த வீட்டுச் சின்னம் உங்கள் சின்னம். வீட்டுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். குறிப்பாக ஒரு வீட்டில் உள்ள குடும்பத்துக்குள்ளும் அதிலும் அண்ணண், தம்பிகளுக்கு இடையே கூட பிரச்சினைகள் இருக்கலாம். அப்படியாக வீட்டுக்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கின்றன போன்று எமது கட்சிக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன.
இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் ஒரு குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினைகள் போன்று எமது கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கத்தான் செயகின்றன.
அப்படியாகப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதற்காக நான் கட்சியை விட்டுவிட்டு ஓடவில்லை. குறிப்பாக எனக்குத் தரப்பட்ட அழுத்தத்தை விட வேறு யாருக்குமே அப்படி அழுத்தம் இருந்திருக்காது.
தமிழினம் அழிக்கப்பட முடியாத ஒரு இனம். நாங்கள் விழ விழ எழுவோம். அப்படியாகத் திரும்பத் திரும்ப எழும்பியிருக்கின்றோம். அது எமது வரலாறாக இருக்கின்றது. அதே போன்றே கடந்த கால தேர்தல்களில் சில தவறுகள் இடம்பெற்றிருந்தாலும் இனிவரும் காலங்களில் அத்தகைய தவறுகளை இழைக்காது செயற்பட வேண்டியது மிக மிக அவசியம்.” – என்றார்.
The post இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கின்றது அநுர அரசு! – சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Vanakkam London.