பட மூலாதாரம், Getty Images
காஸா போர், இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்று உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் நடுப்பகுதி வரை, இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் காஸாவில் சுமார் 65,000 பேரைக் கொன்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் கொல்லப்பட்ட 1,200 பேரில் பெரும்பாலானோரும் காஸாவுக்கு கடத்தப்பட்ட 251 பேரும் பொதுமக்கள் ஆவர்.
காஸாவில் நடந்த தாக்குதல் மற்றும் அழிவுகள் பரவலான கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளன. துருக்கி மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை குழுக்கள் மற்றும் ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சில வல்லுநர்கள், காஸாவில் இஸ்ரேலின் நடத்தை இனப்படுகொலை எனக் கூறியுள்ளனர்.
1948 இனப்படுகொலை தீர்மானத்தை மீறியதாக இஸ்ரேலுக்கு எதிராக 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வழக்கு தொடர்ந்தது.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு இடைக்கால தீர்ப்பு, பாலஸ்தீனர்களுக்கு இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை இருக்கிறது என்று கூறியது
தென் ஆப்ரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளில் சில உண்மையென நிரூபிக்கப்பட்டால், அவை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையமும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும்.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள், இஸ்ரேலின் செயல்களை இனப்படுகொலை என்று விவரிப்பதை பெரும்பாலும் தவிர்த்துள்ளன.
பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் தலைவரின் கையில் இல்லை என்றும் “வரலாற்றாசிரியர்கள்” பொருத்தமான நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் “அப்பட்டமான பொய்கள்” என்று கடுமையாக நிராகரித்து, தனது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி வருவதாக வலியுறுத்துகிறது.
இந்த வாதத்தை இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த நட்பு நாடான அமெரிக்காவும் ஆதரிக்கிறது.
இனப்படுகொலை என்றால் என்ன, இது பொருந்துமா என்பதை யார் முடிவு செய்யலாம்?
இனப்படுகொலை என்பதன் வரையறை என்ன?
பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images
இந்தச் சொல் 1943இல் யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கினால் உருவாக்கப்பட்டது. அவர் கிரேக்க வார்த்தையான “ஜெனோஸ்” (இனம் அல்லது பழங்குடி) மற்றும் லத்தீன் வார்த்தையான “சைடு” (கொல்லுதல்) ஆகியவற்றை இணைத்தார்.
அவரது சகோதரரைத் தவிர அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கொல்லப்பட்ட யூத இனப்படுகொலை பயங்கரங்களைக் கண்ட பிறகு சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று லெம்கின் வலியுறுத்தினார்.
அவரது முயற்சிகள் 1948 டிசம்பரில் ஐ.நா. இனப்படுகொலை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. 2022-ஆம் ஆண்டு வரை, இது 153 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் இரண்டாம் பிரிவு, இனப்படுகொலை என்பதை “தேசிய, இன, இனவியல், அல்லது மதக் குழுவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று” என்று வரையறுக்கிறது:
- குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது
- குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவிப்பது
- குழுவின் அழிவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே மோசமான வாழ்க்கை சூழலை உருவாக்குவது
- குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது
- குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுவது
கையெழுத்திட்ட நாடுகளுக்கு இனப்படுகொலையை “தடுக்கவும் தண்டிக்கவும்” ஒரு பொதுவான கடமையை தீர்மானம் விதிக்கிறது.
இனப்படுகொலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?
பட மூலாதாரம், Abdalhkem Abu Riash/Anadolu via Getty Images
ஒரு சூழ்நிலை இனப்படுகொலையாக உள்ளதா என்பதை தன்னால் தீர்மானிக்க முடியாது என்றும் சர்வதேச நீதிமன்றங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை அமைப்புகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது.
சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சில வழக்குகளில் மட்டுமே இனப்படுகொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலை, 1995இல் போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை, மற்றும் 1975 முதல் 1979 வரை கம்போடியாவில் கமர் ரூஜின் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை.
சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை இனப்படுகொலை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற முக்கிய சர்வதேச நீதிமன்றங்களாகும். ருவாண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா. தற்காலிக தீர்ப்பாயங்களையும் அமைத்தது.
சர்வதேச நீதிமன்றம், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்கும் ஐ.நாவின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும். தற்போது நடந்து வரும் இனப்படுகொலை வழக்குகளில், 2022இல் யுக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ஒன்றாகும்.
யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் யுக்ரேன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா தவறாக குற்றம் சாட்டியதாகவும், அதை படையெடுப்புக்கு ஒரு காரணமாக பயன்படுத்தியதாகவும் யுக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.
பட மூலாதாரம், Mahmoud Abu Hamda/Anadolu via Getty Images
மற்றொரு உதாரணம், 2017இல் காம்பியா மியான்மருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு. பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு, முஸ்லிம் ரோஹிஞ்சா சிறுபான்மையினருக்கு எதிராக “பரவலான மற்றும் திட்டமிட்ட அழிக்கும் நடவடிக்கைகளை” அவர்களின் கிராமங்களில் நடத்தியதாக குற்றம் சாட்டியது.
2002இல் ரோம் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), தனிநபர்களை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த 125 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாக உள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது.
ஆனால் 2019இல் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால ஆட்சிக்குப் பிறகு பதவி நீக்கப்பட்ட சூடானின் முன்னாள் அதிபர் ஓமர் ஹசன் அஹ்மத் அல் பஷீர் மீது மட்டுமே இதுவரை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவை அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் சட்டபூர்வமான அங்கீகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.
உதாரணமாக, 1932-33இல் யுக்ரேனில் ஜோசப் ஸ்டாலினின் கூட்டு மயமாக்கல் கொள்கைகளால் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்த ‘ஹோலோடோமரை’ பல அரசாங்கங்களும் நாடாளுமன்றங்களும் சமீபத்திய ஆண்டுகளில் இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன.
தகுதியான நீதிமன்றங்களின் முடிவுகளைத் தொடர்ந்து மட்டுமே இனப்படுகொலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கொள்கை காரணமாக பிரிட்டன் இவ்வாறு அங்கீகரிக்கவில்லை.
பட மூலாதாரம், Khames Alrefi/Anadolu via Getty Images
விமர்சனங்கள் உள்ளனவா?
இனப்படுகொலை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, பல்வேறு தரப்பினரால் அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட வழக்குகளுக்கு இதை பயன்படுத்துவதில் உள்ள சிரமத்தால் விரக்தியடைந்தவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிலர் வரையறை மிகவும் குறுகியது என்று வாதிடுகின்றனர். மற்றவர்கள் இது அதிகப்படியான பயன்பாட்டால் மதிப்பிழந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
“இனப்படுகொலைக்கான அளவுகோலை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது,” என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய இனப்படுகொலை நிபுணர் திஜ்ஸ் பவுக்னெக்ட் ஏஎஃப்பிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“நோக்கம் இருந்தது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்பதுடன் நடந்தவற்றுக்கு அந்த நோக்கமே ஒரே சாத்தியமான விளக்கம் என்றும் நிரூபிக்கவேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.
மற்ற சில பொதுவான விமர்சனங்களில், சில அரசியல் மற்றும் சமூகக் குழுக்களை பாதிக்கப்பட்டவர்களாக சேர்க்காதது மற்றும் எத்தனை இறப்புகள் இனப்படுகொலைக்கு சமமாகும் என்பதை நிறுவுவது ஆகியவை அடங்கும்.
இனப்படுகொலை நடந்ததா என ஒரு நீதிமன்றம் தீர்மானிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று பவுக்னெக்ட் குறிப்பிட்டார்.
ருவாண்டாவின் வழக்கில், ஐ.நா. அமைத்த தீர்ப்பாயம் இனப்படுகொலை நடந்ததாக முறையாக முடிவு செய்ய கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் எடுத்தது.
மேலும் 1995இல் ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் கிட்டத்தட்ட 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டதை 2017-ஆம் ஆண்டு வரை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என்று அங்கீகரிக்கவில்லை.
யார்க் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் ரேச்சல் பர்ன்ஸ், மிகக் குறைவான குற்றவாளிகளே தங்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
“ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் கம்போடியாவில் உண்மையான குற்றவாளிகளின் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் ஒரு சிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்.”
ஒரு சூழல் சட்டரீதியாக இனப்படுகொலை என்று வரையறுக்கப்பட்டவுடன், தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதைத் தடுக்க அல்லது நிறுத்துவதற்கு ராஜ்ஜிய, தடைகள் அல்லது ராணுவ தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, ருவாண்டா இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது, தீர்மானத்தின் கீழ் சட்ட மற்றும் அரசியல் கடமைகளைத் தவிர்க்க, அமெரிக்க அதிகாரிகள் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருந்ததாக அமெரிக்காவின் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தின.
“ஐ.நா. வரையறையுடன் கூட, வரையறை செய்யத் தவறுதல், செயல்படத் தவறுதல் மற்றும் விசாரணை செய்யத் தவறுதல் ஆகியவை இன்னும் உள்ளன,” என்று பர்ன்ஸ் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு