பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸாவில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச திட்டத்தை வெளியிட்டார். இந்த முயற்சிக்கு பல நாடுகள் ஆதரவளித்தன.
முதலில் இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது, பிறகு ஹமாஸும் ஏற்றுக்கொண்டது. இருப்பினும் இந்தத் திட்டத்தின் சில நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறிவிட்டது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றப் பிறகு, அவரது வெளியுறவுக் கொள்கை பலமுறை சர்வதேச விவாதப் பொருளாக மாறிவிட்டது.
இப்போது கேள்வி என்னவென்றால், அமெரிக்கா இன்னும் உலகின் பெரும் பகுதியினரின் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறதா?
டொனால்ட் டிரம்ப், தன்னை அறியாமலேயே தனது செயல்களால் தனது போட்டியாளர்களுக்கான புதிய வழிகளைத் திறக்கிறாரா? டிரம்ப் செயல்படும் பாணி அமெரிக்காவில் நீண்ட கால அடிப்படையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? டிரம்பின் வெளியுறவுக் கொள்கையை இந்தியா தவறாகப் புரிந்துகொண்டதா, அல்லது அதன் விருப்பங்கள் வரம்புக்கு உட்பட்டதா? மேலும் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு தரும் படிப்பினைகள் யாவை?
இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடும் முயற்சியில், பிபிசியின் முன்னாள் ஆசிரியரும் சர்வதேச விவகார பத்திரிகையாளருமான ஷிவ்காந்த் மற்றும் ராஜதந்திர ஆய்வாளர் முனைவர் ஸ்வேதா குமாரி ஆகியோரிடம் பிபிசி கலந்துரையாடியது.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் வெளியுறவுக் கொள்கை
உலக வர்த்தகத்தில் “அமெரிக்காவே முதலில்” என்ற கொள்கையைக் கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் பிரசாரங்களின்போது அதை வலியுறுத்தினார். இது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையைக் குறிக்கிறது. தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பாடுபடுவேன் என்பதை டிரம்ப் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றால், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் நம்பினார்கள், அதனை டிரம்ப் பொய்யாக்கவில்லை.
இது குறித்து பேசும் ராஜதந்திர ஆய்வாளர் முனைவர் ஸ்வேதா குமாரி, பழைய கொள்கைகளின் தொடர்ச்சியையே டிரம்ப் நிர்வாகம் 2.0 காட்டுகிறது என்றாலும், அது முன்பை விட மிகவும் ஆக்ரோஷமான வடிவத்தை எடுத்துள்ளது என்று சொல்கிறார்.
“டிரம்ப் நிர்வாகம் 2.0-இன் வெளியுறவுக் கொள்கையில், ஒருதலைப்பட்சம், பாதுகாப்புவாதம், பரிவர்த்தனைவாதம் போன்றவை முன்பு போலவே இருக்கின்றன. ஆனால் இந்த முறை இந்தக் கொள்கை வரம்பற்றதாகவும் ஆக்ரோஷமானதாகவும் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார் என்று கூறும் முனைவர் ஸ்வேதா குமாரி, “வரிவிதிப்பு என்பது கூட்டாளிகளாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் பொருந்தும்” என்று கூறினார்.
எந்தவொரு பிரச்னையையும் தீர்க்க வரிகளை மந்திரக்கோலாக டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்துவதாக முனைவர் ஸ்வேதா குமாரி நம்புகிறார்.
இதுவே, அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட்டாளிகளும் கூட அந்நாட்டின் மீது அவநம்பிக்கை வைக்க காரணமாகிவிட்டது என அவர் கூறுகிறார்.
டிரம்பின் வெளியுறவுக் கொள்கை பற்றி பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷிவ்காந்த், டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் பழைய கட்டமைப்பை உடைத்து அதற்கு ஒரு புதிய திசையை வழங்குவதாக இருப்பதாக சொல்கிறார்.
“கடந்த 50 முதல் 70 ஆண்டுகளாக உலக நாடுகளுடன் பின்பற்றப்பட்டு வரும் வெளியுறவுக் கொள்கைகளை அதே வழியில் தொடர டிரம்ப் விரும்பவில்லை. அவற்றை உடைத்து, அதற்கு ஒரு புதிய திசையை வழங்க விரும்புகிறார்” என்று ஷிவ்காந்த் கூறினார்.
பட மூலாதாரம், Win McNamee/Getty Images
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதன் பின்னணியில் உள்ள அடிப்படைக் கொள்கைகளில் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மனித நலன் ஆகியவை அடங்கும் என்று ஷிவ்காந்த் குறிப்பிடுகிறார்.
“ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாவலராக அமெரிக்கா கருதப்படுகிறது. அமெரிக்கா எதை விரும்புகிறதோ, அவையெல்லாம் செய்யப்பட்டன, அது விரும்பாத விஷயங்கள் செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார்.
சர்வதேச வர்த்தக அமைப்பின் கொள்கைகளைப் பற்றியும் குறிப்பிடும் ஷிவ்காந்த், “வறுமை ஒழிப்பு, உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சர்வதேச வர்த்தக அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. ஆனால் டிரம்ப் அந்தப் போக்கை உடைத்து பரிவர்த்தனைக் கொள்கையை அமல்படுத்தினார். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு எங்கு பரவலாக இல்லையோ, அங்கெல்லாம் அது இப்போது செயல்படுத்தப்படுகிறது. ஒரு வகையில், முழு அமைப்பும் சிதைந்துவிட்டது. அதே நேரத்தில், தெளிவான வெளியுறவுக் கொள்கை எதையும் என்னால் காணமுடியவில்லை” என்று கூறுகிறார்.
ஐரோப்பாவின் மீதான அமெரிக்காவின் தாக்கத்தைப் பற்றி பேசும் ஷிவ்காந்த், “அமெரிக்காவுடன் மிக நீண்ட மற்றும் மிகவும் நம்பகமான உறவைக் கொண்டிருந்த ஐரோப்பா, தற்போது அனாதையைப் போல உணர்கிறது. ஆனால் இப்போது அந்த உறவு முற்றிலும் முறிந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Pakistan PM office
செளதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா செய்ய வேண்டியது என்ன?
செளதி அரேபியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் “மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” ஒன்றில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
இந்த ஒப்பந்தத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த ஷிவ்காந்த், “இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பின்னணியில் சீனா இருப்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அமெரிக்கா இப்போது தனது சொந்த நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது என்று கூறும் ஷிவ்காந்த், “அமெரிக்கா எப்போதும் தனது சொந்த நலனுக்காகவே செயல்பட்டு வந்துள்ளது. இருந்தபோதிலும், உலக நலனுக்காக செயல்படுவதாக முகமூடி ஒன்றை அணிந்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த முகமூடியை அகற்றிவிட்டு தனது சொந்த நலனுக்காக உழைப்போம் என்று வெளிப்படையாகவே கூறுகிறது. அதன் எந்தவொரு நட்பு நாடும் பாதுகாப்பைப் பெற விரும்பினால், அதற்கு ஈடாக ஏதாவது கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.
ஷிவ்காந்தின் கருத்துப்படி, “ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் ஆகிவவை அமெரிக்காவின் உலகளாவிய பங்கின் மூன்று முக்கிய தளங்களாகும். இவற்றில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா கிட்டத்தட்ட விலகிவிட்டது. தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்பினால், ஐரோப்பாவிற்கு ஆயுதங்கள் விற்கப்படும், அமெரிக்கா இதனால் பயனடையும் என்பதால் மட்டுமே தற்போது ஐரோப்பாவிற்கு உதவி செய்யப்படுகிறது”.
ரஷ்யா, போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால் அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்த ஐயம் தற்போது வந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த கேள்விகள்
டிரம்பின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் அமெரிக்காவின் நலனுக்கானவையாக இருந்தாலும், சில முடிவுகள் நீண்ட கால கண்ணோட்டத்தில் அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்கும்.
அவரது “அமெரிக்காவே முதலில்” என்ற அணுகுமுறை சர்வதேச உறவுகளுக்கு சவால் விடுவதாகவே இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை இந்த அளவு ஆக்ரோஷமாக இல்லை என முனைவர் ஸ்வேதா குமாரி கருதுகிறார்.
“டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வரும் வரை, அல்லது அவர் பதவியேற்ற முதல் சில மாதங்களில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை இந்த அளவு தீவிரமானதாக இல்லை, பழைய கொள்கைகளில் ஒருவித தொடர்ச்சி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் நீண்டகால எதிர்காலம் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை என மூத்த பத்திரிகையாளர் ஷிவ்காந்த் கூறுகிறார்.
“எதிர்காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளப்போவது என்ன என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. அவர் அதைப் பற்றி கவலைப்பட்டிருந்தால், இதுவரை எடுத்த நடவடிக்கைகளை ஒருபோதும் எடுத்திருக்க மாட்டார்” என்று ஷிவ்காந்த் கூறினார்.
“ஒருவரை அதிகமாக புகழ்ந்தால், அவர்களிடமிருந்து ஏதாவது ஒன்றை பெறலாம் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவர் (டொனால்ட் டிரம்ப்) பாராட்டப்படுவதை விரும்புகிறார்” என்று ஷிவ்காந்த் மேலும் கூறினார்.
“பஹல்காமில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அது ஒரு பயங்கரவாத தாக்குதல். இஸ்ரேல் தாக்கப்பட்டபோது, அதுவும் ஒரு பயங்கரவாத தாக்குதல் தான். இருப்பினும், ஒரு பயங்கரவாத சம்பவத்திற்கு, முழு உலகத்தின் ஆதரவைப் பெற்று ஒரு நாட்டோடு நிற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், ஆனால் மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு, இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கிறீர்கள், ஒரே விஷயத்தை கையாள்வதில் வித்தியாசம் காட்டப்படுகிறது ” என்று அவர் கூறினார்.
“இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், திறமையானதாகவும் மாறினால், அதற்கு அழுத்தம் இருக்காது. சீனாவுக்கு அமெரிக்கா தேவையில்லை. சீனா சுயமாகவே திறமையானது. சக்திவாய்ந்த நாடுகளுடன் நிற்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதும், மனிதகுலத்தின் நலனுக்காகப் பாடுபடுவதும் ஐ.நா.வின் கொள்கையாக இருந்தது. இது இப்போது தலைகீழாக மாறிவிட்டது” என்று ஷிவ்காந்த் கூறினார்.
அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் கல்வியின் தரம் குறித்து குறிப்பிட்ட ஷிவ்காந்த், “எதிர்கால, நவீன தொழில்நுட்பத்தில் உலகத் தலைவராக இருந்த அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களும் திறம் வாய்ந்தவையாகவும் சிறப்பானதாகவும் இருந்தன. இப்போது அதற்கும் டிரம்ப் முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டார்” என்றார்.
பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTAN
அதிகரிக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நெருக்கம்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் அதிகமாக இருக்கும் தற்போதைய நிலையில், நீண்ட ராஜதந்திர முட்டுக்கட்டைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பதற்கான வழிகளை அமெரிக்கா திறந்து வைப்பதாகத் தெரிகிறது.
சமீபத்திய மாதங்களில், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளன, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புகளும் தொடர்கின்றன.
அண்மையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வாஷிங்டனில் சந்தித்தனர். சந்திப்புக்கு சிறிது முன்பு, இருவரும் “சிறந்த ஆளுமைகள்” என அமெரிக்க அதிபர் வர்ணித்தார்.
மறுபுறம், பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் ‘அமைதித் தூதர்’ என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக கூறுகிறது.
ஒரே வாரத்தில் அமெரிக்க அதிபருடன், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரு முறை சந்தித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுடனான ராணுவ மோதலுக்குப் பிறகு அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவுகள் நெருக்கமடைந்துள்ளன.
இந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தபோது, அமெரிக்க அதிபர் போர் நிறுத்தத்தை அறிவித்தார், அதற்கு பாகிஸ்தானும் அவரைப் பாராட்டியது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் எந்த மூன்றாவது நாட்டிற்கும் எவ்விதப் பங்கும் இல்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
பட மூலாதாரம், EPA
அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது, முற்றிலும் தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்று முனைவர் ஸ்வேதா குமாரி கூறுகிறார்.
“அமெரிக்கா தற்போது செயல்படுத்திவரும் வெளியுறவுக் கொள்கை, ஆளுமை மற்றும் விருப்பத்தேர்வுகளைச் சார்ந்தது. இது, டொனால்ட் டிரம்ப் என்ன விரும்புகிறார், அவர் கேட்க விரும்புவது என்ன என்பதைப் பொறுத்தது. தற்போது டிரம்ப் விரும்பும் அனைத்தும் பாகிஸ்தானிடம் உள்ளது” என்று அவர் கூறினார்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்திலேயே போரை எதிர்த்தவர் என்றும் போரை விரும்பவில்லை என்றும் ஸ்வேதா கூறினார். “தன்னை சமாதானத் தூதுவராக காட்டிக் கொள்ள விரும்புகிறார், அவர் சராசரியாக ஒவ்வொரு மாதமும் ஒரு மோதலை நிறுத்தியதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பாராட்டப்பட்டால், அதை விட அவருக்கு வேறு என்ன மகிழ்ச்சி அவருக்கு இருக்க முடியும்?”
பாகிஸ்தானின் உத்தி குறித்து குறிப்பிட்ட அவர், “பாகிஸ்தான் தற்போது சமயோசிதமாக அமெரிக்காவின் கூட்டாளியாக மாற முயற்சிக்கிறது, டிரம்பிற்கு என்ன கொடுத்தால் தனக்கு லாபம் என்பதைப் பார்க்கிறது.’நாங்கள் உங்களை ஆதரிப்போம், ஊக்குவிப்போம். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தருவோம், இரானுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்குவோம்’ என அமெரிக்காவை பாகிஸ்தான் அணுகுகிறது. இவை அனைத்துமே டிரம்புக்கு பிடித்தமானது.”
இந்தியாவின் அணுகுமுறை குறித்தும், டிரம்பின் தனிப்பட்ட ஈகோ குறித்தும் கருத்து தெரிவித்த ஸ்வேதா, “போரை நிறுத்த உதவியது தான் என்ற தனது கூற்றை இந்தியா ஆதரிக்காதது மற்றும் எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டையும் இந்தியா ஏற்காதது குறித்து அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவரது தனிப்பட்ட ஈகோவைத் தாக்கியுள்ளது” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிற்கு எப்படி எதிர்வினையாற்ற முடியும்?
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கான உத்தியை உலகம் தீர்மானிக்க வேண்டும் என்று முனைவர் ஸ்வேதா குமாரி கூறுகிறார்.
“டிரம்ப் ஒரு பாதுகாப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டது போலவே, உலகெங்கிலும் உள்ள நாடுகள் இதேபோன்ற உள்நோக்கிய அணுகுமுறைகளை அல்லது சிறிய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதை காணலாம். இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், நீங்களே சிந்திக்க வேண்டும். சீனாவிற்கு அதன் சொந்த மூலோபாய நலன்கள் உள்ளன, அமெரிக்காவிற்கு அதன் சொந்த நலன்கள் உள்ளன. உங்கள் நலன்கள் அவற்றுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன, உங்களை எவ்வாறு பாதுகாக்கும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.”
தங்கள் தேசிய நலன்களை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதைப் பொறுத்து உலக நாடுகள் இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளும் என்று முனைவர் ஸ்வேதா குமாரி கூறுகிறார்.
தற்போதைய உலக ஒழுங்கு, மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து சென்றுக் கொண்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஷிவ்காந்த் கூறுகிறார்.
“டொனால்ட் டிரம்பின் இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியை உலகம் குறைந்தபட்ச இழப்புகளுடன் தக்கவைக்க முயற்சிக்க வேண்டும். அடுத்து, எதிர்காலத்தில், நாம் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும். இதுவரை, எந்தவொரு சர்வதேச தகராறு, குறிப்பாக எல்லை தகராறுகள் ஏற்பட்டாலும், அது அமெரிக்காவின் உதவியின்றி தீர்க்கப்பட்டதில்லை” என்று அவர் கூறினார்.
“அமெரிக்கா நம்முடன் இல்லாவிட்டாலும், உலக ஒழுங்கைப் பராமரிக்கக்கூடிய அமைப்பு ஒன்றை உலகம் உருவாக்க வேண்டும். “தடி வைத்தவன் தான் தண்டல்காரன்” என்ற பழமொழி, முழு உலகிற்கும் பொருந்தாத வகையில் சில கொள்கை அல்லது முறைமை (அறநெறி) இருக்க வேண்டும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.