பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிக்கு எடுப்பதற்கான ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
‘பன்மடங்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ என, தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன.
‘ஆண்டுதோறும் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்’ என்ற டிரம்பின் புதிய உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்?
அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 88 லட்ச ரூபாய் என்பதால் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்களைக் கட்டணமாக வழங்குவதற்கு அனைத்துப் பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்கர்களுக்கான வேலையில் வெளிநாட்டவரை அழைத்து வருவதை நிறுத்துமாறு கூறிய லுட்னிக், “அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
“ஹெச்1பி விசா பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நிதி உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள், 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அவர்கள் கொண்டு வரும் ஊழியர்கள், திறமையானவர்கள் என்பதை உறுதி செய்யப்படும்” என, அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப் கூறியுள்ளார்.
மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாகவும் வில் ஷார்ஃப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ள துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வகையில் ஹெச்1 பி விசா வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் அறிவிப்பின் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் கூறுகின்றனர்.
‘குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு’
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய இந்திய வர்த்தம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (FICCI) தமிழ்நாடு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ராஜாராம், “ஆண்டுதோறும் சுமார் 70 சதவீத ஹெச்1பி விசாக்களை இந்தியர்கள் பெறுகின்றனர். இதில் அதிக விசாக்களை அமேசான் நிறுவனம் எடுக்கிறது. காக்னிசன்ட், டிசிஎஸ், கூகிள், மைக்ராசாஃப்ட், இன்ஃபோஸிஸ், மெட்டா, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஆட்களைத் தேர்வு செய்கின்றன” என்கிறார்.
“ஹெச்1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அந்தவகையில், மொத்தமாக ஆறு ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது.” எனக் கூறுகிறார், ராஜாராம்.
தற்போது ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
எந்ததெந்த வகைகளில் பாதிப்பு?
பட மூலாதாரம், Getty Images
“இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்?” என ராஜாராமிடம் பிபிசி தமிழ் கேட்டது.
அவர், “இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன. இந்த ஊழியர்கள் அமெரிக்கா செல்வதால், வாடிக்கையாளரிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க முடியும்” என்கிறார்.
“அமெரிக்காவில் இருந்து சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள புராஜக்ட்களை இந்திய நிறுவனங்கள் கையாள்வதாக இருந்தால் சுமார் 15 சதவீத ஊழியர்களை ஆன்சைட் பணியாக அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர். இனி தனி நபருக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும்” எனவும் ராஜாராம் கூறுகிறார்.
“இதன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்களின் லாபம் என்பது பல மடங்கு குறைந்துவிடும். இது சவாலானதாக இருக்கும்” எனவும் ராஜாராம் குறிப்பிட்டார்.
விசா கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் பங்குச் சந்தையில் வரும் நாட்களில் இதன் பாதிப்பு தெரியவரும் எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
‘அமெரிக்காவுக்கும் சிக்கல்’
பட மூலாதாரம், Getty Images
“புதிய நடைமுறையால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மென்பொருள் துறையில் அமெரிக்கர்களின் சம்பளம் என்பது இந்தியர்களைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் வெளிநாட்டினரை அதிகளவில் பணிக்கு எடுக்கின்றனர்” எனக் கூறுகிறார், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக (Chief scientist) பணியாற்றி ஓய்வுபெற்ற சுகி வெங்கட்.
புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள், குறைவான அனுபவம் உள்ளவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறுகிறார், ராஜாராம்.
“குறைவான அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் டாலர் வரை சம்பளமாக இந்திய நிறுவனங்கள் தருகின்றன. இவர்களுக்கு ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை விசா கட்டணமாக செலுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. சம்பளத்தை விடவும் விசா கட்டணம் அதிகமாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘தென்னிந்தியாவுக்கு அதிக பாதிப்பு’
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பட்டியலிட்ட ராஜாராம், “பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் அதிக மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து சுமார் 30 முதல் 35 சதவீதம் பேர் அமெரிக்கா செல்கின்றனர்” என்கிறார்.
அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா மூலம் செல்லும் இந்தியர்கள் குறித்த தரவுகளை கடந்த பிப்ரவரி 6 அன்று மாநிலங்களவையில் இந்திய அரசு தெரிவித்தது.
அதன்படி, 2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் இந்தியர்கள். இதனை அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்திய அரசு தெரிவித்தது.
வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறுகிறார், ராஜாராம்.
‘பணத்தைக் கட்டும் வாய்ப்புகள் குறைவு’
அமெரிக்க அரசின் புதிய அறிவிப்புக்கு முன்னதாக ஹெச்1பி விசா பெற்றவர்களை 21ஆம் தேதி இரவுக்குள் வருமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
“அவ்வாறு அமெரிக்கா செல்லாவிட்டால் விசா ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” எனக் கூறுகிறார் சுகி வெங்கட்.
“விசா ரத்து செய்யப்பட்டுவிட்டால் மீண்டும் அதனைப் பெறுவதற்கு 100 ஆயிரம் டாலர்களைக் கட்ட வேண்டும். இவ்வளவு பணத்தை யாரும் கட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு” எனக் கூறும் சுகி வெங்கட், “ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் ஏற்கெனவே பணி செய்கிறவர்களை இந்தியா வருமாறு அழைக்கலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் உற்பத்தி காரணமாக இப்படியொரு முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளதாகக் கூறும் ராஜாராம், “இந்தியாவில் இதுதொடர்பான நிறுவனங்களை அதிகளவில் உருவாக்கலாம். அதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருக்கும்” என்கிறார்.
“மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம்”
அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை இந்திய அரசு பார்த்தது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா என இருநாடுகளின் தொழில்துறைகளும், புதுமை மற்றும் படைப்பாற்றலில் பங்கு வகிக்கின்றன. சிறந்த பாதையில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறன்சார் தொழிலாளர் பரிமாற்றங்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்க மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. எனவே பரஸ்பர நன்மைகளை கணக்கில் கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் சமீபத்திய நடவடிக்கைகளை மதிப்பிடுவார்கள்.
இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறு மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகளால் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் கண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர், இதில் இந்திய தொழில்துறையும் அடங்கும், இது ஏற்கனவே H1B திட்டம் தொடர்பான சில கருத்துக்களை தெளிவுபடுத்தும் ஆரம்ப பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு