மேட்டூர்: திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட அனைத்து வரிகளும் வரும் 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்த பிறகு அனைத்தும் குறைக்கப்படும என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேச்சேரி, வீரக்கல்புதூர், பி.என்.பட்டி மற்றும் கொளத்தூர் பேரூராட்சிகளில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வீரக்கல்புதூர் பேரூராட்சி முன்பு இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை கலந்து கொண்டு பேசியதாவது : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீப காலத்தில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஆரம்பமாக கூட்டணியை அமைத்து தொடங்கியுள்ளார். இது ஆரம்பம் தான். இதற்கு எதிர்க்கட்சியினர் பதற்றப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள். நாங்கள் என்ன பொருந்தாத கூட்டணியா? எதிரும் புதிருமாக உள்ள கூட்டணியா? இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருமித்த கொள்கையில் இருக்கிறார்களா? ஒற்றுமையாக இருக்கிறார்களா? அந்த கூட்டணியில் உள்ள கட்சியினர் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள். ஆனால், நம்மை பார்த்து பொருந்தாத கூட்டணி என சொல்கிறார்கள். மதவாத சக்தியை எதிர்க்கிறோம் என திமுகவினர் சொல்கிறீர்கள்.
ஊழல் என்ற சொல்லை டிஸ்னரியில் இடம் பெற செய்தது திமுக. கடந்த வாரம் அமலாக்கத்துறை நேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில், ஒரு வங்கியில் 30 கோடி கடன் வாங்கி, அதற்கு செலவழிக்காமல் வேறு விஷயத்திற்காக செலவழித்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. இந்த அளவுக்கு இந்த ஆட்சியில் ஊழல் நடந்து வருகிறது இந்த ஊழலைத்தான் மையப் புள்ளியாக வைத்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. . இந்த ஆட்சியில் ஏற்றப்பட்ட அனைத்து வரிகளும் வரும் 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்த பிறகு அனைத்தும் குறைக்கப்படும்.
திமுக ஆட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க கூட்டணி அமைக்க எடப்பாடியார் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பதற்றப்பட்டு பயப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிராக அதிமுக நாடளுமன்றத்தில் ஓட்டளித்தது. அப்போது, கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கிடைப்பதற்காக நாடாளுமன்றத்தில் திமுக சிறு வணிகங்களில் அந்நிய முதலீடுக்கு ஆதரவாக ஓட்டளித்தது. இவர்களுடைய ஆட்டம் எப்பொழுது அடங்கும் என்றால் 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்த பின் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.