அக்டோபர் 7 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டம் வழியாக ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 15 பயணிகள் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம், இந்த ஆண்டின் பருவமழைக் காலத்தில் மாநிலத்தில் நடந்த தொடர் விபத்துகளில் கடைசியாக நடந்தது. இந்தச் சங்கிலி முடிவடைவதாகத் தெரியவில்லை.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தீவிர வானிலை நிகழ்வுகளால் 141 பேர் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று பலர் அஞ்சுகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்த ஆண்டுப் பருவமழைக் காலம் இந்தியா முழுவதும் துயரமானதாக மாறியுள்ளது.
ஊடக செய்திகள் மற்றும் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களின் உள்ளீடுகள் மூலம் ஐஎம்டி தொகுத்த தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளில் 1,528 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், இமயமலைப் பகுதிகளுக்கு இந்தத் துயரம் மிக மோசமானது.
உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் பல தீவிர வானிலை நிகழ்வுகளைச் சந்தித்தன. ஐஎம்டி தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் இந்த மாநிலங்களில் முறையே 41 பேர் மற்றும் 139 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மேலும் தீவிரமடையும் கேள்வி இதுதான்: இமயமலையில் மழை ஏன் ஆபத்தானதாக மாறி வருகிறது?
இமாச்சலப் பிரதேசத்தில் கள நிலவரம்
நாங்கள் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சேஹ்லியில் ஒரு சிறிய நீரோடைக்கு அருகில் பெரிய பாறைகள் நிறைந்த ஒரு திறந்த வெளியில் நிற்கிறோம். வெளியாட்கள் எவரேனும் பார்த்தால், இது இமயமலை ஆற்றின் ஒரு அகலமான படுகை என்று நினைக்கலாம். ஆனால் அது இல்லை.
வெறும் 3 மாதங்களுக்கு முன்பு, இந்த நிலத்தில் பல மாடி வீடுகள் நின்றிருந்தன, பயிர்கள் பயிரிடப்பட்டன. இப்போது அதை யாரும் நம்ப மாட்டார்கள்.
ஜூன் 30 ஆம் தேதி இரவு வரை சந்திரா தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் கூட இதை நம்பவில்லை.
“நாங்கள் இங்கு பண்ணையில் ஒரு வீட்டைக் கட்டினோம். அதனுடன் ஒரு மளிகைக் கடையும் வைத்திருந்தோம். குறைந்தபட்சம் கடந்த நூறு ஆண்டுகளில் இங்கு தண்ணீர் வந்ததில்லை,” என்று அவர் சோகத்துடன் விவரிக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்திராவும் அவரது கணவரும் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து 8 அறைகளைக் கட்டினர். ஆனால் அந்த இரவு திடீரென வெள்ளம் வந்து எல்லாவற்றையும் அடித்துச் சென்றது.
அன்று இரவு மேகவெடிப்பு (Cloudburst) போல மழை கொட்டியது. சந்திராவின் குடும்பம் எப்படியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. அவரது 19 வயது மகள் ரித்திகா மன மற்றும் உடல் ரீதியாகச் சவால்கள் கொண்டவர். சந்திரா அவரை முதுகில் கட்டிக்கொண்டு அருகில் உள்ள மலையில் ஏறினார்.
நீரோடைக்கு அருகில் வசித்த பலரைப் போலவே சந்திராவும் இப்போது மலையின் உச்சியில் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்.
செராஜ் பள்ளத்தாக்கு (Seraj Valley) என்று அழைக்கப்படும் இந்தப் பிராந்தியம் ஜூன் 30 போன்ற ஒரு இரவைக் கண்டதில்லை. பல மாதங்களுக்குப் பிறகும் நாங்கள் அங்குப் பயணிக்கும்போது, நிலச்சரிவுகள், சேதமடைந்த சாலைகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எச்சங்கள் போன்ற வடிவங்களில் அழிவின் காயங்கள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன.
தூணக் (Thunag) இன்னும் ஒரு சிதைந்த நகரமாகவே உள்ளது. அதன் குறுகிய பாதைகள் வழியாக நாம் செல்லும்போது, பல சேதமடைந்த கட்டடங்களின் கூடுகளைக் காண்கிறோம். அவற்றில் பலவற்றில் இன்னும் இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன.
“நாங்கள் இரவு 10.30 மணியளவில் எங்கள் வீடுகளில் இருந்தோம். அதிகாலை 2.30 மணி வரை நீரோட்டத்துடன் இடிபாடுகள் வந்து கொண்டே இருந்தன. வீடுகள், கடைகள், அனைத்தும் சென்றுவிட்டன. பலர் தங்கள் உடலில் ஒட்டியிருந்த ஆடைகளுடன் மட்டுமே எஞ்சியிருந்தனர்,” என்று தூணக்கைச் சேர்ந்த கிமி சௌஹான் கூறுகிறார்.
இந்த மலைகளில் உள்ள பல சிறிய குடியிருப்புகள் நிலச்சரிவுகளால் சேதமடைந்துள்ளன. தூணாதி (Thunadi) கிராமம், பலத்த நீரோட்டம் மற்றும் பெரிய நிலச்சரிவுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.
நாங்கள் சந்தித்த தூணாதியைச் சேர்ந்த 90 வயதான ஜெய் ராம், தனது வாழ்க்கையில் இதுபோன்ற பேரழிவை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்.
“நாங்கள் இரண்டு மாதங்கள் மலையின் உச்சியில் தங்கினோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நிர்வாகம் எங்களைக் கீழே செல்லச் சொன்னபோதுதான் வந்தோம். நாங்கள் இன்னும் எங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து வருகிறோம். குவியல்குவியலாக இடிபாடுகள் இன்னும் அங்கேயே கிடக்கின்றன,” என்று ஜெய் ராம் கூறுகிறார்.
‘ஏன்’ என்பதற்கான காரணங்கள்
கடந்த சில ஆண்டுகளாக இமயமலைப் பிராந்தியம் இத்தகைய துயரங்களைச் சந்தித்து வருகிறது.
காலநிலை மாற்றம் மழைப்பொழிவு காலத்தை மாற்றுகிறது, மேலும் நாடு முழுவதும் நீண்ட வறண்ட காலங்களையும் திடீர் கனமழை நிகழ்வுகளையும் ஏற்படுத்துகிறது என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புனே இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் (IITM) சேர்ந்த காலநிலை ஆய்வாளர் டாக்டர் ராக்ஸி மேத்யூ கோலின் கூற்றுப்படி, 1950 மற்றும் ஜூன் 2025 க்கு இடையில், இந்தியாவில் மொத்தம் 325 வெள்ளப்பெருக்குகள் நிகழ்ந்துள்ளன. இதில் 923 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 19 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர், 81,000 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
மேகவெடிப்பு (ஒரு மணி நேரத்தில் 100 மிமீ மழைப்பொழிவு) போன்ற தீவிர நிகழ்வுகள் இப்போது அடிக்கடி நிகழ்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் அதிக கனமழையின் (204.5 மிமீ-க்கு மேல்) ஐஎம்டி தரவுகளே இதற்கு சான்று.
இது புவி வெப்பமடைதல் காரணமாக கடல்களின் வெப்பநிலை உயர்வதுடன் நேரடியாகத் தொடர்புடையது.
“அரேபியக் கடலும் வங்காள விரிகுடாவும் மிக அதிகமாக வெப்பமடைந்து வருகின்றன. வெப்பநிலை அதிகமாக இருந்தால், வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும். அதிக ஈரப்பதம் அதிக மழைப்பொழிவு விகிதத்திற்கு வழிவகுக்கும்,” என்று ஐஐடி பாம்பேயின் காலநிலை அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் அக்ஷயா நிகும்ப் விளக்குகிறார்.
“இமயமலைப் பிராந்தியத்தில் மலைகளின் நிலவியல் உள்ளது. ஈரப்பதம் அதிக உயரத்திற்கு உயர்த்தப்பட்டு, நமக்கு மழை கிடைக்கிறது. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இப்போது அதிக ஈரப்பதம் வருவதால், இது அதிக மேகவெடிப்புகளுக்கு வழிவகுக்கும், ஏனென்றால் வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இந்த ஆண்டு, ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக, ‘மேற்குச் சீர்குலைவுகள்’ (Western Disturbances) என்று அழைக்கப்படும் நிகழ்வும் இந்தத் துயரத்தை மேலும் தீவிரமடையச் செய்தது.
“இந்த ஆண்டு, இது மலைகளின் நிலவியல் மட்டுமல்ல, அந்த நிலவியலுக்கு மேலே ஏற்கனவே இருந்த ஒரு விஷயம், அதாவது மேற்குச் சீர்குலைவுகள் காரணமாக ஏற்பட்ட மேகக் கூட்டங்களின் சுழற்சியும் இருந்தது. அது மேலும் மழைப்பொழிவை மேம்படுத்துகிறது. அதனால்தான் அதிக மேகவெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்,” என்று நிகும்ப் கூறுகிறார்.
நிலையற்ற மலைகள்
மேகவெடிப்புகளுடன், நிலச்சரிவுகளும் அதிகரிக்கின்றன.
ஐஐடி மண்டியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 30 ஆண்டுகளின் மழைப்பொழிவுத் தரவுகளை ஆய்வுச் செய்தனர். குறிப்பாக இமயமலைப் பிராந்தியங்களில், வறண்ட மற்றும் ஈரமான காலங்களுக்கு இடையேயான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று அவர்கள் கண்டறிந்தனர்.
இது பெரும்பாலான ஆண்டுக் காலத்திற்கு மலைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது, இது நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது.
“ஒரு குறிப்பிட்ட வறண்ட காலமும், ஒரு குறிப்பிட்ட ஈரமான காலமும் இல்லையென்றால், மலைகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் என்று அர்த்தம். மலைகள் ஈரப்பதமாக இருந்தால், இறுதியில் மழை பெய்யும் போது, அது நிலச்சரிவுகளைத் தூண்டும், அதை நாம் இப்போது அடிக்கடி காண்கிறோம்,” என்று ஐஐடி மண்டியின் புவி தொழில்நுட்ப பொறியியல் துறையின் அசுதோஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு
காலநிலை மாற்றம் உண்மையில் நடக்கிறது, ஆனால் மனிதர்கள் இமயமலையைச் சீரழித்த விதம், பேரழிவுக்குச் சமமாகப் பொறுப்பாகும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
வகைதொகையற்ற கட்டுமானங்கள், நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், நீர் மின் திட்டங்களுக்காகச் செய்யப்படும் வேலைகள் ஆகியவை இமயமலை மலைகளைப் பலவீனப்படுத்துகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி முதல் குலு-மனாலி வரை கட்டப்பட்டு வரும் பலவழி நெடுஞ்சாலைகளில் நாங்கள் பயணிக்கும்போது, அனைத்து இடங்களிலும் சிதைந்த மலை சரிவுகளைக் கண்டோம். பல இடங்களில் நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது.
“சமவெளிகளில் உள்ளதைப் போன்ற சாலைகள் இமயமலையில் எதற்கு?” என்று ‘இமயமலைப் பகுதி ஆராய்ச்சிக்கான மக்கள் சங்கம்’ அமைப்பின் நிறுவனர் சேகர் பதக் கேள்வி எழுப்புகிறார்.
பெரிய கட்டுமானப் பணிகள் கட்டுப்பாடற்ற இடிபாடுகளை உருவாக்குகின்றன. இது மழையின் போது தீவிரமான பிரச்னைகளை உருவாக்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“கனமழை பெய்யும் போது, அனைத்து இடிபாடுகளும் ஆற்றில் போய் சேர்கின்றன. அது தண்ணீரைப் போல மிதப்பதில்லை. அது அடியில் தங்கிவிடுகிறது. அது அடியில் தங்கும்போது, ஆற்றின் இடத்தை ஆக்கிரமிக்கிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் உயரும்போது, அருகில் நீங்கள் கட்டிய நெடுஞ்சாலைகள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டு விளைவை சந்திக்கின்றன,” என்று பதக் கூறுகிறார்.
“இதற்கு மிகப்பெரிய உதாரணத்தை உத்தரகாண்டில் மட்டுமல்ல, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகத் துயரம் நிகழ்ந்த குலு பள்ளத்தாக்கிலும் காணலாம். ஆனால் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
தெற்காசிய அணை, ஆறுகள் மற்றும் மக்கள் வலையமைப்பின் (SANDRP) ஹிமான்ஷு தக்கர் அதே கருத்தை முன்வைக்கிறார்.
“உத்தரகாண்டில் உள்ள தரலியை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேரழிவு தாக்கியது, பலர் இறந்தனர். இது 2013 இல் ஒரு பேரழிவு தாக்கிய அதே தரலி தான். அதிலிருந்து நாம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. மக்கள் மீண்டும் அங்கு குடியேறினர். நாம் பாடம் கற்றுக்கொண்டிருந்தால், அங்கு யாரையும் குடியேற அனுமதித்திருக்க மாட்டோம். அத்தனை பேரழிவு சம்பவங்களிலும் எந்தப் பாடத்தையும் நாம் கற்கவில்லை” என்று ஹிமான்ஷு கூறுகிறார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு, இது ஒரு டிரைலர் மட்டுமே, முழு பாதிப்பு இனிதான் என கூறினோம். இப்போது அதற்கான ஆதாரம் உள்ளது,” என்று ஹிமான்ஷு கூறுகிறார்.
இமாச்சலப் பிரதேச முதல்வரின் கருத்து
இமயமலை மலைப் பகுதிகளில் உள்ள வளர்ச்சி மாதிரி குறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் பேசினோம்.
“கொள்கை மாற்றம் தேவை. கொள்கை மாற்றத்தில் எங்கோ குறைபாடு உள்ளது. மலைகளில் நிலச்சரிவுகள் இயற்கையானவை. அங்கு ஒரு சாலையை உருவாக்கும்போது, மலையை 90 டிகிரி கோணத்தில் வெட்ட வேண்டும். எனவே அடுக்குகள் நிலைபெற நான்கு முதல் ஆறு ஆண்டுகள் ஆகும்.” என்கிறார் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு.
“இப்போது என்ன நடந்தது என்றால், தேசிய நெடுஞ்சாலைத்துறை நான்கு வழிச் சாலை கட்டப்பட்டதிலிருந்து, பெரிய இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை இந்த மலையை, அதன் அடுக்குகளை அசைத்துள்ளன, அது தொடர்ந்து விழுகிறது. புதிய சாலைகள் கட்டப்படும்போதெல்லாம், அவை நிலைபெற நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.”
“இமயமலைக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மலைகள் கொண்ட மாநிலங்களுக்குத் தனித்தனிக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்,” என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நம்புகிறார்.
மொத்தத்தில், இமயமலை மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்று நாம் கூறலாம். காலநிலை மாற்றம், இந்தப் பிராந்தியத்தில் மழைப்பொழிவு முறைகளை மாற்றியுள்ளது. மனித தலையீடு மலைகளின் முதுகெலும்பை உடைத்துள்ளது.
இப்போது ஒவ்வொரு ஆண்டும் நாம் அதே கேள்வியை எழுப்புகிறோம்: இந்த முறையாவது நாம் பாடம் கற்றுக்கொள்வோமா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு