• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

இம்முறையாவது சேலத்தில் திமுக கொடிநாட்டுமா? – அமைச்சர் ராஜேந்திரனுக்கு காத்திருக்கும் சவால்கள் | DMK in Salem politics and Challenges Awaiting Minister Rajendran explained

Byadmin

Dec 23, 2024


கோவையைப் போலவே சேலம் மாவட்டமும் இப்போது அதிமுக கோட்டையாகவே இருக்கிறது. அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்டத்துக்காரர் என்பதும் முக்கிய காரணம். இந்த செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்காக பெரும்பாலும் சென்னையைத் தவிர்த்துவிட்டு சேலத்தையே சுற்றி வருகிறார் இபிஎஸ்.

​மாவட்​டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதி​களில் கடந்த முறை 8 தொகுதிகளை அதிமுக​வும், 2 தொகுதிகளை அப்போது அதிமுக கூட்ட​ணியில் இருந்த பாமக-வும் கைப்பற்றின. ஒரே ஒரு தொகுதியை மட்டும் தான் திமுக பிடித்தது. இதனால் திமுக தலைமையே அதிர்ந்து போனது. அந்த ஆதங்கத்​தில், சேலம் வடக்கில் வென்ற பனமரத்​துப்​பட்டி ராஜேந்திரனுக்கு அப்போது அமைச்சர் பதவியைக்கூட வழங்க​வில்லை. இது சேலம் மாவட்ட திமுக​-வினரை அதிருப்தி கொள்ளச் செய்தது.

பொறுப்பு அமைச்சர் மூலமே மக்களவைத் தேர்தலை திமுக சந்தித்தது. அந்தத் தேர்தலில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரான டி.எம்​.செல்​வகணபதி வென்றாலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் சுமார் 5 சதவீத வாக்குகள் குறைந்து போனது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த திமுக தலைமை, அண்மையில் அமைச்சரவை மாற்றத்தின் போது பனமரத்​துப்​பட்டி ராஜேந்​திரனையும் அமைச்​சர​வைக்குள் சேர்த்​துக்​கொண்டது.

சுற்றுலாத்​துறைக்கு அமைச்​சராகி இருக்கும் ராஜேந்​திரன், சேலம் மாவட்ட திமுக-​வினரை ஒருங்​கிணைத்து இம்முறை அதிமுக-​விட​மிருந்து சேலத்தைக் கைப்பற்றுவாரா என்ற கேள்வி திமுக​வினர் மத்தியில் எழுந்​திருக்கிறது. இதுகுறித்து அவர்கள் நம்மிடம் பேசுகை​யில், “ஒருகாலத்தில் சேலத்து சிங்கம் எனச் சொல்லப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளராக இருந்தவர் ராஜேந்​திரன். ஆனால், 2006-ல் முதல்​முறையாக எம்எல்ஏ ஆனதுமே தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு குருநாதருக்கு எதிராகவே கொடிபிடிக்க ஆரம்பித்​தார். கட்சித் தலைமையும் வீரபாண்​டியாரை சமாளிக்க ராஜேந்​திரனை ஊட்டி வளர்த்தது. இதனால், சேலம் திமுக-வில் வீரபாண்​டியார் அணி, பனமரத்​துப்​பட்டி ராஜேந்​திரன் அணி என கோஷ்டிகள் உருவானது.

வீரபாண்​டியார் மறைவுக்குப் பின்னரும் இந்த அணிகள் ஒன்று சேராமல் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றன. அமைச்​சராகி இருக்கும் ராஜேந்​திரன் அனைவரையும் ஒருங்​ணைத்தால் தான் அவரது செல்வாக்கை தக்கவைக்க முடியும். ஆனால், காண்ட்​ராக்ட் ‘வருமான’ விவகாரங்​களில் ராஜேந்​திரன் கட் அண்ட் ரைட்டாக இருப்​பதால் திமுக​வினர் அவர் மீது அதிருப்​தியில் தான் இருக்​கிறார்கள்.

இதேபோல் சேலம் எம்பி-யான டி.எம்​.செல்​வகணப​திக்கும் இப்போது பழைய செல்வாக்கு இல்லை. மேற்கு மாவட்டச் செயலாளரான இவரால் எடப்பாடி தொகுதியில் திமுகவை ஜெயிக்​க வைக்க முடிய​வில்லை. இந்த நிலையில், எடப்பாடி தொகுதி பார்வை​யாளராக நியமிக்​கப்பட்ட நாமக்​கல்லைச் சேர்ந்த மகளிரணி நிர்வாகி ராணி அண்மையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்​பட்​டார். செல்வகணப​தியின் செயல்​பாடுகள் குறித்து புகார் தெரிவித்​த​தாலேயே அவர் நீக்கப்​பட்​ட​தாகச் சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருந்தால் சேலத்தை எப்படி திமுக கோட்டை​யாக்க முடியும்?” என்று கேள்வி எழுப்​பி​னார்கள்.

இப்போதைய அமைச்சர் ராஜேந்​திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி இருவரும் மனதுவைத்து தீவிர களப்பணி​யாற்றினால் மட்டுமே சேலத்தை அதிமுக​-விட​மிருந்து கைப்பற்ற முடியும். இல்லா​விட்டால் அடுத்தும் சேலத்தில் அதிமுக கொடிதான் பறக்கும்!



By admin