0
நடிகர் மதும்கேஷ் கதையின் நாயகனாக காதல் இளவரசனாக நடித்திருக்கும் ‘காதல் ரீ செட் ரிப்பீட் ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன் பார்வை..’ எனும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காதல் ரீ செட் ரிப்பீட்’ எனும் திரைப்படத்தில் மதும்கேஷ், அர்ஜுன் அசோகன், ஜியோ சங்கர் ,எம். எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். காதலை பின்னணியாக கொண்ட இப்படத்தை டி ஸ்டுடியோஸ் மற்றும் டென்வி புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கும் நிலையில் இதில் இடம்பெற்ற ‘உன் பார்வை எதிர் பார்வை அதன் வழியே இதயத்தை இழுக்கிறாயே..’ எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, பின்னணி பாடகர்கள் வினித் ஸ்ரீனிவாசன் பாடகிகள் பிரகதி- காயத்திரி ராஜீவ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதலர்கள் விரும்பும் வகையிலான பாடல் வரிகள் இரண்டாவது சரணத்தில் இடம் பிடித்திருப்பதும், பாடல் முழுவதும் மெல்லிசையாக வாசம் வீசுவதும் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.