• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ட்ராமா’ படத்தின் ஓடியோ

Byadmin

Mar 13, 2025


தமிழின் சிறந்த குணசித்திர நடிகரான விவேக் பிரசன்னா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ட்ராமா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் மூத்த இயக்குநர் கே. பாக்யராஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ட்ராமா’ எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த்  நாக், சாந்தினி தமிழரசன்,  நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா , நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். ஆந்தாலாஜி பாணியிலான இந்த திரைப்படத்தை டர்ம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் கே. பாக்யராஜ் நடிகர் டத்தோ ராதாரவி, தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” மூன்று வெவ்வேறு கதைகள்- வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட இந்த இன்டர் லிங்க் பாணியிலான திரைக்கதை ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். இந்த திரைப்படம் மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் கதையை முதலில் பைலட் மூவியாக தான் தொடங்கினோம். அதன் பிறகு தரத்தினை பார்த்து தயாரிப்பாளர் படமாக உருவாக்குவதற்கு ஊக்கமளித்தார்.  இப்படத்திற்கு என்னுடைய நண்பர்கள் தான் உதவினார்கள். அதனால் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் நட்சத்திர நடிகர்கள் நடிக்கவில்லை என்றாலும்.. படத்தின் கதையை நம்பி இப்படத்தை வெளியிடும் ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இளமாறனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

By admin