0
நடிகர்கள் கிஷோர் – ரி ரி எஃப் வாசன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா ‘திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐபிஎல் இந்தியன் பீனல் லா’ எனும் திரைப்படத்தில் கிஷோர், ரி ரி எஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், போஸ் வெங்கட், ‘ஆடுகளம்’ நரேன் , திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் எஸ். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி ஆர் மதன் குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் கே .பாக்யராஜ் – ஆர். கே. செல்வமணி- ஆர். வி உதயகுமார் – பேரரசு – ஆகியோர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எளிய மனிதர்கள் நாளாந்த வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் போது.. அதிகார பலம் + பணபலம் மிக்கவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை சமாளிக்க.. அதனை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு தப்பிக்க திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் ஏழை எளிய மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது படத்தை பட மாளிகையில் பார்வையிடும் அனைத்து தரப்பு ரசிகர்களும் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும்” என்றார்.