0
‘சவாலான கதையை தேர்ந்தெடுத்து அதை திரைப்படமாக உருவாக்கும் மிக அரிதான இயக்குநர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர் ‘ என இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , யோகி பாபு, கௌரி ஜி கிஷன் , மாளவிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ரொமான்டிக் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரித்து வழங்குகிறார்.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பட குழுவினருடன் இயக்குநர்கள் ராம் – ஆர் ஜே பாலாஜி – மிஷ்கின்- ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி இயக்குநர் ராம் பேசுகையில், ” நான் விக்னேஷ் சிவனின் ரசிகன். நண்பன். இப்படத்தின் கதையை நான் இதற்கு முன் கேட்டிருக்கிறேன். அதற்கு சவாலான திரை கதையை தெரிவு செய்து அதனை படமாக உருவாக்கியுள்ளார்.
இது போன்ற முயற்சியை எடுக்கும் அரிய படைப்பாளிகளில் இவரும் ஒருவர். இந்த படம் -எதிர்கால உலகத்தில் காதல் எப்படி இருக்கும்? என்பதை பற்றி பேசுகிறது. நூறாண்டுகள் ஆனாலும் காதல் என்பது மாறாமல் அப்படியே தான் இருக்கும் என்பதை இப்படத்தில் அவருடைய பாணியில் சொல்லி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.