மதுரை: “வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்” என்று டிடிவி தினகரன், செங்கோட்டையன் விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய: “எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி மலர, பழனிசாமி இரவு, பகலாக உழைத்து வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார். அதிமுகவில் குட்டையை கிளப்பி மீன் பிடிக்க முடியுமா என்ற அவரின் பகல் கனவுக்கு சில பேர் இறையாகி போகிறார்கள்.
அதிமுகவுக்கும் பழனிமசாமிக்கும் உள்ள பெரும் ஆதரவை மடைமாற்றம் செய்யும் வகையிலும் ஆளுங்கட்சி ஒருபுறம் குழிப்பறிக்கறார்கள் என்றால், மற்றொரு புறம் அதிமுகவிலும் சிலர் திமுகவின் எண்ணத்துக்கு துணை போகிறார்கள். அவர்களின் இந்த நடவடிக்கையால் ஒவ்வொரு தொண்டனும் மன வேதனை அடைந்துள்ளார்கள். பழனிசாமி 27 மாவட்டங்களில், 47 நாட்களில், 140 சட்டமன்ற தொகுதிகளில் 8,000 கி.மீ. தொலைவு சென்று 80 லட்சம் மக்களை சந்தித்துள்ளார்.
பழனிசாமியின் எழுச்சி சுற்றுப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம். அவர்கள் தங்கள் இயலாமையினால் ஏற்படும் பொறாமையாகும். அந்த பொறாமைத் தீயினால் கட்சி ஒற்றுமை என்ற பெயரை பயன்படுத்தி அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என கணவு காண்கிறார்கள். அந்த வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.