ஆராய்ச்சியாளர்களான கேப்ரியல் நோச்சி மாசிடோ மற்றும் லாஜோஸ் பெர்க்ஸ் ஆகியோர், கோடைக்காலத்தில் ஒரு வழக்கமான பிற்பகல் நேரத்தில் தங்கள் ஆய்வுப் பணிகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.
பெர்லின் பல்கலைக்கழகத்தில் உள்ள பெர்க்ஸ் அலுவலகத்தில், பழைய ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட படங்களை “மதிப்பாய்வு” செய்வதே அவர்களின் அன்றையப் பணியாக இருந்தது.
“ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் ஒருசில பண்டைய காகித ஆவணங்கள் (papyrus) இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம், அவை எங்களின் ஆர்வத்தைத் தூண்டின” என்று பிபிசி பிரேசிலுக்கு அளித்த பேட்டியில் மாசிடோ கூறினார்.
பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் காகிதங்களில் எழுதப்பட்டிருந்த ஆவணங்கள் இவை.
“பண்டைய காகித ஆவணங்கள் பொதுவாக நூலகங்கள், அருங்காட்சியகங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சேகரித்து வைக்கப்படுகின்றன. மேலும், இந்த சேகரிப்புகளில் பல ஆவணங்கள் இப்போது ஓரளவு அல்லது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அதாவது, அதன் நகல் இணையத்தில் புகைப்படங்களாகக் கிடைக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
“புகைப்படங்கள் மூலம் பண்டைய காகித துண்டுகளை ஆய்வு செய்யும் இந்த வேலை பாப்பிராலஜிகல் ஆராய்ச்சியில் அன்றாடம் மேற்கொள்ளப்படும் பணியாகும்”
பாபிரஸ் காகிதங்களை கொண்டு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியை பாப்பிராலஜிகல் ஆராய்ச்சி என்கின்றனர்.
அன்றைய தினம் ஒரு ஆவணம் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த ஆவணத்தில் இருந்த வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ள முயற்சித்தனர். “of Jesus” என்ற வார்த்தையின் `ies` ஒலியுடன் மூன்று பண்டைய கிரேக்க எழுத்துக்களின் வரிசை இருப்பதை அவர்கள் கவனித்தனர்.
“கிரேக்க மொழியில் இந்த எழுத்துக்களுடன் தொடங்கும் அதிக சொற்கள் இல்லை, எனவே அதில் இயேசுவைப் பற்றிய குறிப்பு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்”, என்று மாசிடோ விளக்குகிறார்.
இந்த வகை பழங்கால ஆவணங்கள் ஒரு சில முக்கிய வார்த்தைகளுடன் தொடங்கும். அந்த வார்த்தைகள் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய ஒரு குறிப்புகளை வழங்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இதுபோன்ற குறிப்புகளில் ஒரு பண்டைய மொழி பயன்படுத்தப்பட்டிருக்கும். அவை பெரும்பாலும் துண்டு துண்டாக உள்ளன, அவற்றின் எழுத்துகள் தற்போதைய மொழிப் பயன்பாட்டை விட மிகவும் வித்தியாசமான எழுத்து வடிவத்துடன் எழுதப்பட்டுள்ளன.
அந்த நாளின் பிற்பகுதியில், நோச்சி மாசிடோ மற்றும் லாஜோஸ் பெர்க்ஸ், அவர்களால் அடையாளம் காணப்பட்ட சொற்களை ஒரு தொழில்முறை தரவுத்தளத்தில் வெளியிட்டனர். அதில், பழங்காலத்திலிருந்து இடைக்காலங்கள் வரை கிரேக்க இலக்கியத்தின் அனைத்து அறியப்பட்ட நூல்களும் உள்ளிடப்பட்டுள்ளன.
இந்த காகித ஆவணங்கள் புகழ்பெற்ற ‘இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி தாமஸின் நற்செய்தி நூலின் (Gospel of Thomas On the Infancy of Jesus) ஆரம்ப உரையின் நகல் என்று அவர்கள் கண்டுபிடித்தனர். அது, 5 முதல் 12 வயது வரையிலான இயேசுவின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை விவரிக்கும் ஒரு அபோக்ரிபல் உரை. அதாவது, இந்த தகவல்கள் பைபிளில் சேர்க்கப்படாதவை, ஏனெனில் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு சுவிசேஷகர்களும் இயேசுவின் இந்த காலக்கட்டத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதுகுறித்து அமைதி காத்தனர்.
`மோசமான கையெழுத்து’
கடந்த 18 மாதங்களாக, பிரேசிலை சேர்ந்த மாசிடோவும் அவரது ஹங்கேரிய சக ஆராய்ச்சியாளரான பெர்கெஸும் அந்த காகிதங்களை உன்னிப்பாகப் படித்து வருகின்றனர். முனைவர். பெர்க்ஸ் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். மாசிடோ, பெல்ஜியத்தில் உள்ள லீஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
இவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் ஜெர்மனியில் இருக்கும் ஹாம்பர்க் நகருக்கு பயணித்து இவற்றை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த பழங்கால ஆவணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர்.
இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய இந்த முக்கியமான பழங்கால ஆவணம் தனித்துவமானது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த பழங்கால காகித ஆவணம் 4 முதல் 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டது. ஆவணத்தில் இருக்கும் எழுத்து நடையை அடிப்படையாகக் கொண்டு இதனை உறுதி செய்துள்ளனர்.
“காலத்தைப் பொறுத்து எழுத்துக்கள் வேறுபடுகின்றன”என்கிறார் மாசிடோ.
“நாங்கள் ஆய்வு செய்யும் இந்த காகிதங்களை பொறுத்தவரை, இது எழுத்துக் கலை தெரிந்தவரால் எழுதப்பட்ட கையெழுத்து அல்ல, இது நன்றாக இல்லை, மோசமான கையெழுத்தாக உள்ளது. நன்றாக எழுதத் தெரியாத ஒருவரால் எழுதப்பட்டுள்ளது. அவர் ஒரு தொழில்முறை, எழுத்தாளர் அல்ல. அதனால்தான் இந்த ஆவணம் கவனத்தை ஈர்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஹாம்பர்க்கில் காப்பகப்படுத்தப்பட்ட பல ஆவணங்களை போல இது கவனம் பெறவில்லை” என்றார்.
ஆராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்படும் ஒரு கருதுகோள் என்னவென்றால், இந்த உரையை எழுத்துக் கலையை கற்றுக் கொண்டிருக்கும் ஒரு துறவி எழுதியிருக்கலாம். எனவே, இந்த ஆவணம் மோசமான கையெழுத்தையும் ஒழுங்கற்ற எழுத்துகளையும் கொண்டுள்ளது.
“துரதிருஷ்டவசமாக, இந்த பழங்கால காகித ஆவணம் எந்த தொல்பொருள் காலக்கட்டத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை என்பதால், அதை கண்டுபிடிக்க நாங்கள் வைத்திருக்கும் ஒரே கருவி `பேலியோகிராஃபி’ தான். அதாவது, பண்டைய மற்றும் இடைக்கால எழுத்துக்களைப் பற்றி ஆய்வு செய்யும் தொல்லெழுத்துக் கலையை வைத்துக் கண்டறிவது.” என்று அவர் விவரித்தார்.
அந்த காகிதத் துண்டில் இயேசுவைப் பற்றி என்ன எழுதப்பட்டிருந்தது?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தால் பராமரிக்கப்படும் `பாப்பிரோலாஜிக்கல் சேகரிப்பு ‘ 1906 மற்றும் 1913க்கு இடையில் கையகப்படுத்திய ஆவணங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, 1939 வரை தனிப்பட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன”
தற்போது அவர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஆவணம் இந்த நூற்றாண்டு வரை பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். 2001 ஆம் ஆண்டில் இருந்து “அங்கு வைக்கப்பட்டிருந்த சேகரிப்பில் 782 எண்கள் வரை மட்டுமே இருந்தன”, மேலும், இந்த பாப்பிரஸ் 1011 என்ற எண்ணில் பட்டியலிடப்பட்டிருந்தது.
“இந்த பழங்கால காகித ஆவணம் 1990 ஆம் ஆண்டில் பெர்லினில் இருந்து ஹாம்பர்க்கிற்கு ஒரு மரப் பெட்டியில் கொண்டு செல்லப்பட்ட பாப்பிரஸ் சேகரிப்பை சேர்ந்ததாக இருக்கலாம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
`கோஸ்பல் ஆஃப் ஜீசஸ் இன்ஃபன்ஸி’ அல்லது `சூடோ-தாமஸின் நற்செய்தி’ அல்லது `தாமஸின் புரோட்டோவஞ்செலியம் என்றும் அழைக்கப்படும் இந்த நற்செய்தி ஏற்கனவே மத ஆராய்ச்சியாளர்களிடையே நன்கு அறியப்பட்டிருந்தது. முன்னதாக, இதுபற்றிய மிகப் பழமையான கிரேக்க ஆவணம் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டது.
“`கோஸ்பல் ஆஃப் ஜீசஸ் இன்ஃபன்ஸி’ ஒன்பது பண்டைய மொழிகளில் அறியப்பட்டன, அவற்றில் சில ஏற்கனவே இடைக்கால மொழிபெயர்ப்புகளுக்கு உட்பட்டுள்ளன. இது ஒரு பாரம்பரியத்தையும் மிகவும் சிக்கலான தகவல் பரிமாற்றத்தையும் கொண்டுள்ளது. மேலும், ஒரே மொழியின் பல வகையான பதிப்புகள் இருந்தன. உதாரணமாக, கிரேக்க மொழியில் நான்கு தனித்துவமான பதிப்புகள் இருந்தன”என்கிறார் பிரேசிலிய ஆராய்ச்சியாளர் மாசிடோ .
11 : 5 சென்டிமீட்டர் அளவும், 13 வரிகளையும் கொண்ட இந்த காகித துண்டு, இந்த நற்செய்தியின் தொடக்கத்திலிருந்து ஒரு சிறிய பகுதியைக் கொண்டுள்ளது. இயேசு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது நிகழ்த்திய முதல் அதிசயம் என்னவாக இருந்திருக்கும் என்பதற்கான விவரம் இது.
கோயம்பிரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபிரடெரிகோ லாரென்சோ அந்த காகித துண்டில் இருந்த வரிகளை மொழிபெயர்த்துள்ளார்.
அவரின் மொழிபெயர்ப்பின்படி அந்த காகித துண்டில் இருந்த வரிகள் : “அவர் ஒரு நீரோடையின் ஆழமற்ற பகுதியில் விளையாடினார்; அவர் ஓடும் நீரை குளங்களில் சேகரித்து சுத்தப்படுத்தினார்; மேலும், அவர் இந்த செயல்களை வார்த்தைகளால் ஆன கட்டளைகள் வாயிலாக மட்டுமே செய்தார்”
“களிமண்ணை மென்மையாக்கி, அதிலிருந்து பன்னிரெண்டு சிட்டுக்குருவிகளையும் உண்டாக்கினார். அவர் அவற்றைச் செய்தபோது அது ஒரு ஓய்வுநாளாக இருந்தது. மேலும் பல குழந்தைகள் அவருடன் விளையாடிக் கொண்டிருந்தனர்..”
“ஓய்வுநாளில் இயேசு விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட ஒரு யூதன், உடனே சென்று தன் தந்தை யோசேப்பிடம், ‘இதோ, உன் மகன் ஆற்றங்கரையில் நிற்கிறான்; அவன் களிமண்ணை எடுத்து, பன்னிரெண்டு குருவிகளை வடிவமைத்து, ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தினான் “
“அப்பொழுது யோசேப்பு அந்த இடத்துக்கு வந்து, அதைக் கண்டு: ஓய்வுநாளில் இப்படிச் செய்வது நியாயமல்லவென்று சத்தமிட்டுச் சொன்னார். “
“இயேசு தமது கைகளைத் தட்டி, சிட்டுக்குருவிகளை நோக்கி “போங்கள்” என்றார். சிட்டுக்குருவிகள் பறந்து சென்று பாடின” இவ்வாறாக அந்த காகிதத் துண்டில் எழுதப்பட்டுள்ளது.
அதாவது, யூதச் சட்டத்தின்படி சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை.
அபோக்ரிபல் நற்செய்திகளின் கிரேக்கம் மற்றும் லத்தீன் பதிப்பு புத்தகத்தில் ஃபெடரிகோ லோரென்சோவின் வர்ணனையின்படி, “இந்த எழுத்துக்களை வைத்து அதன் ஆசிரியர், அதன் தேதி அல்லது அதன் அசல் தலைப்பு ஆகியவற்றை தீர்மானிக்க முடியாது.”
போர்த்துகீசிய பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான ஃபெடரிகோ லோரென்சோ, இது பல நிலைகளில் குழப்பமான வரிகளை கொண்டுள்ளது. குறிப்பாக, இது ஒரு உணர்ச்சியற்ற மற்றும் கேப்ரிசியோஸ் குழந்தை இயேசுவை சித்தரிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது நான்கு சுவிசேஷங்களும் (apocryphal gospel) மிகக் குறைவான ஒற்றுமைகளைக் கொண்ட அபோக்ரிபல் நற்செய்தி என்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது.” என்றும் ” சிலர் கிறிஸ்தவ அமைப்பில் இதனை குழந்தை இலக்கியத்தின் முதல் உதாரணம் என்று குறிப்பிடுகின்றனர்.” என்றும் லோரென்சோ எழுதியுள்ளார்.
இந்த பழங்கால ஆவணம் எந்த காலகட்டத்தை சேர்ந்தது?
கோயம்ப்ராவைச் சேர்ந்த பேராசிரியரான மாசிடோ, 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இருந்து வரும் கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனது பணியை மேற்கொண்டதாக கூறுகிறார்.
“இந்த நற்செய்தியின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் மிகவும் சமீபத்திய பதிப்பு” என்று அவர் ஆச்சரியப்படுகிறார், ஏனெனில் “சிரியாக் மொழிபெயர்ப்பில் இந்த ஆவணத்தின் பழைய சான்றுகள் (6 ஆம் நூற்றாண்டு) உள்ளன”.
இந்த பழங்கால காகித ஆவணத்தில் இருக்கும் வரிகள், முதலில் சிரியாக் (Syriac) மொழியில் எழுதப்பட்டதாக சிலர் நம்பினர். ஆராய்ச்சியாளர் மாசிடோ பிபிசி பிரேசிலிடம் தனது கண்டுபிடிப்பை மடைமாற்றிய புள்ளிகளில் இதுவும் ஒன்று என்று கூறுகிறார்.
பொது சகாப்தத்தின் ஆரம்ப காலகட்டத்தில் மத்திய தரைக்கடல் அறிஞர்களின் பொதுவான மொழி பண்டைய கிரேக்கம் என்பதால், ஆரம்ப பதிப்பு அந்த மொழியில் எழுதப்பட்டது என்பது இப்போது உறுதியாகிவிட்டது.
ஆண்ட்ரே லியோனார்டோ செவிடரீஸ், ஆரம்பகால கிறிஸ்தவத்தில் நிபுணரும், இந்த விஷயத்தில் பல புத்தகங்களை எழுதியவருமான, ரியோ டி ஜெனிரோவின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் (யு. எஃப். ஆர். ஜே) பேராசிரியருமான வரலாற்றாசிரியரும் ஆவார்.
பிபிசி பிரேசிலிடம் பேசிய அவர், “இயேசுவின் வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய கவலை பின்னர் அதிகரித்தது; அதாவது, அவருடைய சீடர்களுக்கு முதல் தலைமுறையைப் பற்றிய கவலை இல்லை. எனவே அவர்கள் அதனை பற்றி கவலைப்படவில்லை” என்றார்.
“முதல் நூற்றாண்டின் 50 மற்றும் 60 களில் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி எங்களிடம் சொல்லக்கூடிய ஆசிரியர்கள் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை,” என்று கூறினார்.
“எனவே சூடோ-தாமஸ் நற்செய்தியில் உள்ள இந்த வரிகள், உண்மையில் இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து வந்திருக்கலாம்.
அந்தக் குழந்தைப் பருவத்தைப் பற்றிய நுண்ணறிவை எங்களுக்கு வழங்கக்கூடியவர் இப்போது நம்முடன் இல்லை.” என்றார்
மெக்கன்சி பிரஸ்பைடிரியன் பல்கலைக்கழக பேராசிரியர், இறையியலாளர், வரலாற்றாசிரியர் மற்றும் தத்துவஞானி கெர்சன் லைட் டி மோரேஸ், பிபிசி பிரேசில் உடனான ஒரு நேர்காணலில், இந்த பண்டைய கால உரை, “ஒரு இடைவெளியை நிரப்புவதற்கான முயற்சி” என்று மதிப்பிட்டார். அதாவது, இயேசுவின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தைப் பற்றிய தகவல்கள் இல்லை. இந்த ஆய்வு அதனை கண்டறிய முயற்சிக்கிறது.
அவரது பகுப்பாய்வின்படி, இது வரலாற்றில் கிறிஸ்தவம் சார்ந்து அல்லது அதற்கு வெளியே நிலவிய பல இறையியல் கண்ணோட்டங்கள் இருந்த காலத்தில் எழுதப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது ஏன்?
இந்த கண்டுபிடிப்பின் மிகப்பெரிய முக்கியத்துவம் என்னவென்றால், “இது இந்த நற்செய்தியின் காலகட்டத்தை கணிசமாகக் குறைக்கிறது” என்றும் “அசல் கிரேக்க மொழியில் இருந்திருக்கலாம்” என்றும் செவிடாரீஸ் கருத்து தெரிவிக்கிறார்.
“கிறிஸ்தவத்தின் தோற்றத்தைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு கையெழுத்துப் பிரதியும்” மிகவும் குறிப்பிடத்தக்கது என்று மோரேஸ் கூறுகிறார். ஏனெனில் “இது கிறிஸ்தவ அமைப்பின் அடித்தளத்தில் இருந்த இறையியல், தத்துவ, வரலாற்று மற்றும் சமூகவியல் கூறுகளின் முழு பாரம்பரியத்தையும் நிரூபித்து உறுதிப்படுத்துகிறது” என்றார்.
இந்த கண்டுபிடிப்பின் பெரிய விஷயம் என்னவென்றால் அதன் காலகட்டம் தான் என்று மோரேஸ் ஒப்புக்கொள்கிறார்.
“‘சூடோ தாமஸின் நற்செய்தி’ (the Gospel of Pseudo Thomas) ஒரு மிகப் பழமையான ஆவணம் என்பதற்கான சான்றுகள் உள்ளன, இது ஒரு சிறந்த பாரம்பரியத்தின் மகத்தான ஆதரவைக் கொண்டுள்ளது.” என்றும் அவர் கூறுகிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு