ஈரோடு: தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சலில் எழுத்துபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், ‘தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரத்தை விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் உள்ளதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல. கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்’ என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த கடிதத்தை செங்கோட்டையன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் செங்கோட்டையன் அனுப்பியுள்ளார்.
செங்கோட்டையன் மீது போலீஸில் புகார்: இதனிடையே, அதிமுக கட்சி கொடி, சின்னம் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தும் கே.ஏ.செங்கோட்டையன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஈரோடு மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டி.தனக்கோட்டிராம், கோபி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவை காவல் துறையினர் பெற்று மனு ஏற்பு சான்று அளித்துள்ளனர்.