தற்போதைய அரசுகள் பொது மக்களின் நிலம் தேவைப்பட்டால், அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து அந்த நிலத்தைப் பெறுகின்றன. பல தருணங்களில் நிலத்திற்கான இழப்பீடு போதுமானதாக இல்லை என அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் நடக்கிறது.
ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திரன் தமக்குத் தேவையான நிலத்தை, மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய நிகழ்வு ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது.
புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து “புதுச்சேரி மாநில கல்வெட்டுகள்” என்ற தலைப்பில் “இன்ஸ்டிட்யூட் பிரான்சிஸ் டி பாண்டிச்சேரி” வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள தகவல்களின்படி, இந்த வரதராஜ பெருமாள் கோவிலின் மேற்குச் சுவரில் கி.பி. 1058ஆம் ஆண்டில் சோழ அரசன் இரண்டாம் ராஜேந்திரன் உத்தரவுப்படி வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்தக் கல்வெட்டு, அரசன் பணம் கொடுத்து நிலம் வாங்கியது தொடர்பான தகவலைத் தெரிவிக்கிறது.
படக்குறிப்பு, திருபுவனை கோவிலில் மொத்தம் 188 கல்வெட்டுகள் உள்ளன
மக்களின் நிலத்தை பணம் கொடுத்து வாங்கிய சோழ மன்னன்
சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரன் மக்களின் நிலத்தை பணம் கொடுத்து வாங்கியதைக் குறிக்கும் அந்தக் கல்வெட்டு உள்ளது.
“ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கொல்” எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டில் “பிராட்டியார் பிரா தேக உலோக மாதேவியார் திருநாமத்தால் நம்மூர் தெந்பிடாகை குஞ்சிரமல்ல பேரரி கீழ் புத்தூரா ஜனநாத நல்லூர் கட்டளையில் குடிமக்கள் நிலத்தில் விலைகொண்ட நிலம் முற்ப்பிட்ட” என்ற செய்தி உள்ளது.
அதாவது, கி.பி. 1058ஆம் ஆண்டில் இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் மன்னர், தனது மனைவியின் பெயரால் பணம் கொடுத்து நிலத்தை வாங்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நில வகைப்பாட்டின்படி அதை உரிய பிரிவின்கீழ் வகைப்படுத்தி அதையும் ஆவணப்படுத்தியுள்ளனர்.
அரசன் அதிகாரம் பெற்றவனாக இருந்தும் கூட, மக்களிடம் இருந்து சோழ அரசர் நிலத்தை வாங்கியபோது அதற்கு உரிய விலை கொடுத்துப் பெற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
படக்குறிப்பு, சோழர் காலத்தைச் சேர்ந்த செய்திகளைக் கூறும் பல கல்வெட்டுகள் திருபுவனை கோவிலில் உள்ளன
ஏரியின் ‘வயிற்றில் குத்திய’ மர்ம நபர்கள்
இந்தக் கோவிலின் கல்வெட்டுகளில் வேறு சில சுவாரஸ்யமான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் தெற்கு சுவற்றில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், உடைந்த ஏரியின் கரையை கட்டித் தந்தவருக்கு அரசு மரியாதை செய்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பராந்தக சோழனால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ வீரநாரயணப் பேரேரியைச் சிலர் உடைத்து விட்டனர். இந்த உடைப்பை, இப்பகுதி அதிகாரியான உத்தம சோழ விழுப்பரையன் சரி செய்து கொடுத்துள்ளார்.
அவரது செயலைப் பாராட்டவும், அவருக்குச் சிறப்பு செய்யவும் மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தானியம், நிலங்களை அளக்கும் மரக்கால், துலாக்கோல் ஆகியவற்றுக்கு அவரது பெயரைச் சூட்டி இந்த முறையிலேயே ஊரிலும் கோவிலிலும் அளக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதை அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
மேலும், அந்தக் கல்வெட்டில், ஏரியை ஓர் உயிருள்ள ஜீவனை போலவே குறிப்பிடும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏரிக்கரையை உடைத்தவர்களைப் பற்றிக் கூறும்போது, ‘ஏரி வயிற்றில் குத்திவிட்ட” என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி குலோத்துங்கனின் 9ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 25.7.1079) பொறிக்கப்பட்டுள்ளது.
இதே கோவிலின் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதி சுவர்களில் உள்ள முதலாம் ராசாதிராசனின் 33ஆம் ஆண்டு கல்வெட்டு (கி.பி.1051) புதிய ஊரை உருவாக்கிய செய்தியைத் தெரிவிக்கிறது.
அதாவது, “முதலாம் ராசாதிராசனின் அதிகாரியாகிய ராஜேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவர் திருபுவனை வடபிடாகையில் கங்கை கொண்ட சோழப் பேரேரி என்ற பெயரில் ஓர் ஏரியை உருவாக்கினார்.
பின்னர், அதன் அருகிலேயே உள்ள காட்டுப் பகுதிகளைச் சமன்படுத்தி அதற்கு ராஜேந்திர சோழநல்லூர் எனப் பெயரிட்டு புதிய ஊரை உண்டாக்கினார். மக்கள் குடியிருப்பதற்கு முன்பாக இந்தப் பகுதி கொடுக்கூர் என்று அழைக்கப்பட்டது; மக்கள் குடியேற்றத்திற்குப் பிறகு ராஜேந்திர சோழ நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது” என்று அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
திருபுவனை கோவிலில் மொத்தம் 188 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் 187 கல்வெட்டுகள் சோழர்களின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகளைத் தருகின்றன.