• Sat. Mar 1st, 2025

24×7 Live News

Apdin News

இரண்டாவது நாளாகவும் யாழ். போதனா வைத்தியசாலை முடக்கம்!

Byadmin

Feb 28, 2025


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் இரண்டு நாட்களாக நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், நோயாளர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரியுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர்.

அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் உரிய சிகிச்சைகளைப் பெற முடியாது பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு வைத்தியர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, நோயாளர்களின் நலனைக் கருத்தில்கெண்டு அவர்களைப் பாதிக்காத வகையில் வைத்தியர்கள் செயற்பட வேண்டும் என்று கேட்டுள்ள நோயாளர்கள், தமக்கான சிகிச்சைகளை நிறுத்தாது வழமை போன்று வழங்குவதற்கு வைத்தியர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன என்றும், இன்று இரவுக்குள் உரிய தீர்வுகள் எட்டப்படலாம் என்றும் தெரியவருகின்றது.

By admin