
காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது.
வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன.
இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை.
போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையினர் நுழைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, தங்களின் வலுவான பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் இணைந்ததால், இஸ்ரேலிய படையினர் பலமுறை திரும்பி வந்துள்ளனர்.
காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.
குறுகிய நேரம் நீடித்த இந்த பயணம் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, இதில் பாலத்தீனர்களையோ அல்லது காஸாவின் மற்ற பகுதிகளையோ அணுக முடியவில்லை.
செய்திகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அவை ராணுவ அதிகாரிகளால் பார்க்கும் வகையில் இஸ்ரேலின் ராணுவ தணிக்கை சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த செய்தியாக்கம் மீதான தனது கட்டுப்பாட்டை பிபிசி உறுதி செய்தது.

நாங்கள் சென்றுவந்த பகுதியில் அழிவு எந்தளவுக்கு உள்ளது என இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் நாடவ் ஷோஷானியிடம் கேட்டபோது, “எங்கள் இலக்கு அதுவல்ல” என பதிலளித்தார்.
“பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் இலக்கு. கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பதுங்குக்குழி அல்லது கண்ணி பொறி அல்லது ராக்கெட் மூலம் செலுத்தப்படும் எறி குண்டு அல்லது குறிபார்த்து துப்பாக்கி சுடும் அமைப்பு உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
“இங்கிருந்து நீங்கள் வேகமாக வாகனத்தை இயக்கினால், ஒரு நிமிடத்திற்குள் இஸ்ரேலிய மூதாட்டி அல்லது குழந்தையின் வீட்டின் அறைக்குள் இருப்பீர்கள். அதுதான் அக்டோபர் 7 அன்று நடந்தது.”
2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அப்போதிலிருந்து, காஸாவை சேர்ந்த 68,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாம்பல் நிற இடிபாடுகள்
இந்த பகுதியில் பணயக்கைதிகள் சிலரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக கூறும் லெப்டினன்ட் கர்னல் ஷோஷானி, அதில் இந்த வாரம் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இடாய் சென்னின் உடலும் அடங்கும் என்றார். மற்ற ஏழு பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நாங்கள் சென்ற இஸ்ரேலிய ராணுவ தளமானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி திட்டத்தின் படி அமைக்கப்பட்ட தற்காலிக எல்லையான மஞ்சள் கோட்டிலிருந்து சில நூறு மீட்டர்களில் அமைந்திருந்தது, இந்த பகுதி காஸாவில் ஹமாஸ் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து இன்னும் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை பிரிக்கிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக, அந்த மஞ்சள் கோட்டு பகுதியில் படிப்படியாக தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ராணுவம் குறியிட்டு வருகிறது.
கோட்டின் இந்த பகுதியில் எந்த எல்லைகளும் இன்னும் வரையறுக்கப்படவில்லை எனக்கூறிய இஸ்ரேலிய படையை சேர்ந்த ஒருவர், கட்டடங்களின் சாம்பல் நிற இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிறிய மணல் பகுதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி சுட்டிக்காட்டினார்.
பட மூலாதாரம், EPA
போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் மஞ்சள் கோட்டு பகுதியில் ஹமாஸ் துப்பாக்கிதாரிகளுடன் “கிட்டத்தட்ட தினமும்” தாங்கள் சண்டையிடுவதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். காஸா நகரத்தை நோக்கியிருக்கும் கரைகளில் உள்ள துப்பாக்கிச் சூடு நிலைகள் வெண்கல நிற தோட்டா உறைகளின் குவியல்களால் குறிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் “நூற்றுக்கணக்கான முறை” போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அதன் விளைவாக 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலிய படைகள் உறுதி பூண்டுள்ளதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார், ஆனால் இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஹமாஸ் இனியும் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை தாங்கள் உறுதி செய்வோம் என்றும், தேவையானவரை தாங்கள் இருப்போம் என்றும் கூறினார்.
“ஹமாஸ் ஆயுதங்களை வைத்துள்ளது மற்றும் காஸாவை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் மிக தெளிவாக தெரியும்,” என்கிறார் அவர். “இதற்கு தீர்வு காணத்தான் நாம் முயற்சிக்கிறோம், ஆனால் அது வெகு தொலைவில் உள்ளது” என ஷோஷானி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Moose Campbell/ BBC
அடுத்த கட்டம் என்ன?
அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின்படி, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, அதிபர் டிரம்ப் உட்பட சர்வதேச தலைவர்கள் உள்ள பாலத்தீன குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், அதிகாரம் மற்றும் ஆயுதங்களை கைவிடுவதற்கு பதிலாக, ஹமாஸ் அதற்கு எதிரானதை செய்துவருவதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார்.
“காஸா மீதான கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக, ஹமாஸ் தன்னை ஆயுதமயப்படுத்தி கொள்ள முயற்சிப்பதாக,” அவர் என்னிடம் கூறினார். “பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவும் காஸாவில் யார் தலைமை வகிக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்காகவும் ஹமாஸ் மக்களை பட்டப்பகலில் கொலை செய்கிறது. ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிடுவதை உறுதி செய்ய இந்த ஒப்பந்தம் போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.”
இஸ்ரேலியப் படையினர், இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடித்ததாகக் கூறும் சுரங்கப்பாதைகளின் வரைபடத்தை எங்களுக்குக் காட்டினர். “சிலந்தி வலை போன்ற பெரியளவிலான சுரங்கப்பாதைகளை” தாங்கள் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர், அதில் பல ஏற்கெனவே அழிந்துவிட்டன, சில அப்படியே உள்ளன, இன்னும் சில சுரங்கப்பாதைகளை படையினர் தேடிவருகின்றனர்.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த ஒப்பந்தம் காஸாவை பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. சூழல் எந்தளவுக்கு நிலையற்றதாக உள்ளது என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது, மேலும் போர் நிறுத்தம் ஏற்கெனவே இருமுறை தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையற்ற மோதலில் இருந்து நீடித்த அமைதியை நோக்கி முன்னேற அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய வரைவு தீர்மானம் பிபிசியால் பார்க்கப்பட்டது, அதில் காஸாவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவும் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைக்கு (International Stabilisation Force – ISF) இரண்டு ஆண்டு கால அதிகாரத்தை வழங்குகிறது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிக தகவல்கள் தெரியவில்லை: ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு முன்னதாக காஸாவைப் பாதுகாக்க எந்த நாடுகள் படைகளை அனுப்பும், இஸ்ரேலிய படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் அல்லது காஸாவின் புதிய தொழில்நுட்ப நிர்வாகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து காஸாவை மத்திய கிழக்கு மையமாக கட்டமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையை அதிபர் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். காஸா இன்று இருக்கும் சூழலில் அந்த நோக்கம் வெகு தொலைவில் உள்ளது.
சண்டையை யார் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது மட்டுமல்லாமல், காஸா இஸ்ரேலால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு டிரம்பால் முதலீடாகக் கருதப்படும் நிலையில், காஸா மக்கள் தங்கள் நகரங்கள் மற்றும் நிலங்களின் மீது எதிர்காலத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு