2
வடக்கு மற்றும் தெற்கு இலண்டனில் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு பெண்கள் கொலை வழக்குகளில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட சைமன் லெவி (40) ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் வீடியோ அழைப்பு மூலம் ஆஜரானார்.
டோட்டன்ஹாமின் பியூஃபோய் வீதிபகுதியில் வசிக்கும் லெவி மீது, ஆகஸ்ட் 24 அன்று டோட்டன்ஹாமின் ஹை ரோட்டில் உயிரிழந்த ஷெரில் வில்கின்ஸ் (39) மற்றும் மார்ச் 17 அன்று தென்கிழக்கு இலண்டனின் வால்வொர்த்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கார்மென்சா வலென்சியா-ட்ருஜில்லோ (53) ஆகியோரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, லெவி தனது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பேசினார்.
வழக்கறிஞர் டாம் லிட்டில் கே.சி கூறியதாவது, மார்ச் 17 அன்று வால்வொர்த்தில் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வலென்சியா-ட்ருஜில்லோவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தவிர யாரும் அதிகமாக வருவதில்லை என்றும் தெரிவித்தார்.
இரு பெண்களும் காணப்பட்ட விதத்தில் “குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள்” உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனவரி 21 அன்று டோட்டன்ஹாமில், சட்டப்பூர்வ காரணங்களால் பெயரிட முடியாத மற்றொரு பெண்ணுக்கு எதிராக வேண்டுமென்றே உடல் ரீதியான கடுமையான தாக்குதல், மூச்சுத் திணற செய்தல் மற்றும் இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளும் லெவி மீது சுமத்தப்பட்டுள்ளன.
நீதிபதி மார்க் லுகிராஃப்ட் கே.சி, லெவியை பிப்ரவரி 23 அன்று நடைபெறும் அடுத்த விசாரணை வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். முழு விசாரணை ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநகர காவல்துறை, இந்த வழக்குகள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டிருந்தும் இதுவரை புகார் அளிக்காதவர்கள் முன்வருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.