தென்காசி: தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் கடந்த ஆண்டு வரை இருந்தது. அப்போது பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பழைய குற்றாலம் அருவி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டது. கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பின்னர், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
பின்னர், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் வாகன நிறுத்துமிடம் அருகே வனத்துறை சோதனைச் சாவடியை அமைத்தது. சோதனைச்சாவடிக்கு அடுத்து அருவி பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஆட்டோக்களுக்கு மட்டும் சோதனைச் சாவடியை கடந்து அருவி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து அருவிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லது ஆட்டோவில் அருவிக்கு செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் தலா ரூ.100 கட்டணம் செலுத்தி சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பழைய குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டுக்கு சென்ற பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் உள்ளது.
மீண்டும் பழைய குற்றாலத்தை பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து, 24 மணி நேரமும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு 7.25 மணிக்கு மேல் சோதனைச் சாவடியை கடந்து பழைய குற்றாலம் அருவிக்கு செல்வதற்கு சில தனியார் வாகனங்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்த கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் அருவி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றிவிட்டு இரவில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்துக்கு ஆயிரம் முதல் 2,000 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து தகவலறிந்த ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி.சுடலையாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தி.உதய கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுமயில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.எஸ்.கிட்டப்பா, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் டேனி அருள் சிங் ஆகியோர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் பழைய குற்றாலம் அருவிப் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலந்துசென்றனர்.
இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறம்போது, “இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் வனத்துறையினர் பணம் வசூலித்துக் கொண்டு பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதித்து அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். பழைய குற்றாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனைச் சாவடியை அப்புறப்படுத்த வேண்டும்.
பழைய குற்றாலத்தில் எந்த வகையிலும் வனத்துறையினர் தலையீடு இருக்கக்கூடாது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் சுதந்திர தினத்தில் கிராமங்களில் கருப்பு கொடிகள் கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதோடு உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட போகிறோம். அடுத்த கட்டமாக அனைத்து கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஒன்று திரட்டி மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றாலம் அருவியில் தடையை மீறி குளிக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்று போராட்டத்தின் ஈடுபட்டவர்கள் கூறினர்.