• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

இராணுவத்தினராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்! – பொன்சேகா திட்டவட்டம்

Byadmin

Mar 29, 2025


“மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.”

– இவ்வாறு வன்னியில் இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் கருணா உள்ளிட்ட நால்வருக்குப் பிரிட்டன் விதித்த தடை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜகத் ஜயசூரிய, வசந்த கரன்னகொட ஆகியோர் போர்க் களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள்.

போர்க் களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அவை விசாரிக்கப்பட வேண்டும்.

நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்கள் இருவரையும் பற்றி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் விமர்சித்திருந்தேன்.

இதேபோன்று, போர்க் களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூற முடியும்.” – என்றார்.

By admin