• Tue. Aug 26th, 2025

24×7 Live News

Apdin News

இராணுவ பிடியிலுள்ள நிலத்தினை விடுவிக்க அரசு ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை | வலி கிழக்கு தவிசாளர்

Byadmin

Aug 26, 2025


மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய ஆர்வம் கொள்ளவில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றச்சாட்டினார்.

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் போல் டக்கிளஸின் அழைப்பில், இராணுவத்தினரை பொது இடங்களில் இருந்து அகற்றுவதற்கான போராட்டம் பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவுறுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எம்மை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகின்றன.

மக்களின் நிலம் மக்களுக்குச் சொந்தமானது என்ற தேர்தல் பிரச்சாரத்துடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் எந்த உத்தரவாதத்தினையும் நிறைவேற்றவில்லை.

பலாலியில் வீதியை விடுவித்துவிட்டு நடமாடும் சுதந்திரத்திற்கு தடை போடுகின்றனர். அங்கு மக்களின் நடமாடும் சுதத்திரத்தின் மீது மட்டுப்பாடுகளை விதித்து அறிவித்தல் செய்தவர்கள் இராணுவத்தினர்.

ஆகவே இராணுவத்திற்கு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கான உத்தியோகப்பற்றற்ற அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்கிற்கு வெளியே உரிய வர்த்தமானி அறிவித்தல்கள் வாயிலாகவே உயர்பாதுகாப்பு வலய மட்டுப்பாடுகள் உள்ளன. எனினும் வடக்குக் கிழக்கில் தமிழர் பூர்வீக நிலங்களில் இராணுவச் சட்டங்களும் அணுகுமுறைகளும் காணப்படுகின்றன.

நாங்கள் வெளிப்படையாகவே எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்கின்றோம். எவ்வித நியாயப்பாடுகளும் இன்றி தமிழ் மக்களின் தனியார் காணிகளிலும் நிர்வாகம் சார்ந்த மற்றும் பொதுத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

தையிட்டி உள்ளிட்ட காணிகளின் மக்கள் வீதியில் போராடுகின்றபோதும் அவற்றுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. எனவே தாமதம் இன்றி இராணுவத்தினரை வெளியேற்றி தமிழ் மக்களின் வாழ்வுரிமையை உறுப்படுத்த வேண்டும் என்றார்.

By admin