பட மூலாதாரம், X
இது, கடந்த பல ஆண்டுகளில் மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டமாகக் கருதப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை டெஹ்ரான் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான மஷாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த அமைதியான போராட்டங்களை பாதுகாப்புப் படையினர் கலைக்கவில்லை. இதனை பிபிசி பெர்சியன் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இணையச் சேவை முடக்கப்பட்டதாக ஒரு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் ஆட்சியை வீழ்த்தவும், மறைந்த முன்னாள் ஷாவின் (மன்னர்) மகனும், தற்போது நாடுகடத்தப்பட்டு வசிப்பவருமான ரெசா பஹ்லவி மீண்டும் வர வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிடுவதை வீடியோவில் கேட்க முடிகிறது.
தனது ஆதரவாளர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு பஹ்லவி முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
இரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கோபத்தால் வெடித்த இந்த போராட்டம், தற்போது 12-வது நாளாகத் தொடர்கிறது. இது இரானின் 31 மாகாணங்களிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி முகமை, இந்தப் போராட்டங்களில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 34 போராட்டக்காரர்களும், 8 பாதுகாப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாகவும், 2,270 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நார்வேயைச் சேர்ந்த இரான் மனித உரிமைகள் அமைப்பு, 8 குழந்தைகள் உட்பட குறைந்தது 45 போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
பிபிசி பெர்சியன் 22 பேரின் மரணத்தையும் அவர்களது அடையாளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரான் அதிகாரிகள் 6 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், நாட்டின் வடகிழக்கில் உள்ள மஷாத் நகரின் முக்கியச் சாலையில் பெரும் திரளான மக்கள் செல்வதைக் காண முடிகிறது.
“ஷா நீடூழி வாழ்க” மற்றும் “இது இறுதிப் போர்! பஹ்லவி திரும்பி வருவார்” போன்ற கோஷங்கள் கேட்கின்றன. ஒரு கட்டத்தில், பல ஆண்கள் ஒரு மேம்பாலத்தில் ஏறி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதைக் காண முடிந்தது.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோ, கிழக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய சாலையில் பெருங்கூட்டமாக எதிர்ப்பாளர்கள் நடந்து செல்வதைக் காட்டியது.
தலைநகரின் வடக்குப் பகுதியில் இருந்து பிபிசி பெர்சியன் சேவைக்கு அனுப்பப்பட்ட காணொளியில், பெருந்திரளான மக்கள், “இது இறுதி போர், பஹ்லவி திரும்பி வருவார்” என்று முழங்குவதைக் கேட்க முடிகிறது.
அதேபோல், வடக்கு பகுதிகளின் வேறு இடங்களில், பாதுகாப்புப் படைகளுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள்”அவமானம்”, “பயப்பட வேண்டாம், நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்” என்று கோஷமிடும் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மற்ற வீடியோக்களில் போராட்டக்காரர்கள் “சர்வாதிகாரிக்கு மரணம்” என்று (ஆயதுல்லா அலி காமனெயியை குறிக்கும் வகையில்) மத்திய நகரமான இஸ்பஹானில் முழக்கமிட்டனர்.
“ஷா வாழ்க” என்று வடக்கு நகரமான பாபோலில் முழக்கமிட்டனர். மேலும் “பயப்படாதீர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” என்று வடமேற்கு நகரமான தப்ரீஸில் முழக்கமிட்டனர்.
மேற்கு நகரமான டெஸ்ஃபுலில் ஒரு மையச் சதுக்கத்திலிருந்து பெரும் திரளான போராட்டக்காரர்களை நோக்கி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது போல் தோன்றுவதையும் பிபிசி பெர்சியனுக்கு அனுப்பப்பட்ட காட்சிகள் காட்டின.
பட மூலாதாரம், UPI/Bettmann Archive/Getty Images
1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியால் அவரது தந்தை பதவியிறக்கப்பட்ட பிறகு வாஷிங்டன் டிசியில் வசித்து வரும் ரெசா பஹ்லவி, இரானியர்களை “வீதிக்கு வந்து, ஒரு ஐக்கிய முன்னணியாக உங்கள் கோரிக்கைகளை முழக்கமிடுங்கள்” என்று அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த மாலை நேரப் போராட்டங்கள் நடந்தன.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “லட்சக்கணக்கான இரானியர்கள் இன்று இரவு தங்கள் சுதந்திரத்தைக் கோரினர்” என்று கூறிய பஹ்லவி, போராட்டக்காரர்களைத் தனது “தீரம் மிக்க தோழர்கள்” என்று விவரித்தார்.
இந்த “ஆட்சியைப் பொறுப்பேற்கச் செய்ததற்காக” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் ஐரோப்பியத் தலைவர்களையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி முதல் (16:30 GMT) போராட்டங்களைத் தொடருமாறும் பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார்.
இரானிய அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை நடந்த போராட்டத்தின் அளவைக் குறைத்துக் காட்டின. சில சந்தர்ப்பங்களில், போராட்டங்கள் நடக்கவே இல்லை என்று மறுத்து, வெறிச்சோடிய வீதிகளின் வீடியோக்களைப் பதிவிட்டன.
இதற்கிடையில், இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், அதன் அளவீடுகள் இரான் “நாடு தழுவிய இணைய முடக்கத்தின் நடுவில்” இருப்பதைக் காட்டுவதாகக் கூறியது.
“இந்தச் சம்பவம், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்களை குறிவைத்து அதிகரித்து வரும் டிஜிட்டல் தணிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். இது மக்களின் தொடர்பு கொள்ளும் உரிமையை மிக முக்கியமான தருணத்தில் தடை செய்கிறது,” என்று கூறி, மேலும் பல நகரங்களில் முன்பு ஏற்பட்ட இணைப்பு இழப்புகளைச் சுட்டிக்காட்டியது.
அன்றைய தினத்தின் முற்பகுதியில், மேற்கு மாகாணமான இலாமில் உள்ள லோமர் என்ற சிறிய நகரத்திலிருந்து வந்த காட்சிகள், “பீரங்கிகள், டாங்கிகள், பட்டாசுகள், முல்லாக்கள் வெளியேற வேண்டும்” என்று ஒரு கூட்டம் முழக்கமிடுவதைக் காட்டின.
இது மதகுருமார்களின் ஆட்சியைச் சுட்டிக்காட்டுகிறது. மற்றொரு வீடியோ, உடைக்கப்பட்டதாகத் தோன்றும் ஒரு வங்கிக்கு வெளியே மக்கள் காகிதங்களை காற்றில் வீசுவதைக் காட்டியது.
இலாம், கெர்மான்ஷா மற்றும் லொரெஸ்தான் மாகாணங்களில் உள்ள குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பல நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை மற்ற வீடியோக்கள் காட்டின.
இப்பகுதியில் போராட்டங்கள் மீதான கொடிய ஒடுக்குமுறைக்கு பதிலடியாக, நாடுகடத்தப்பட்ட குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள் விடுத்த பொது வேலைநிறுத்த அழைப்பைத் தொடர்ந்து இது நடந்தது.
இலாம், கெர்மன்ஷா மற்றும் லோரெஸ்தானில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது குறைந்தது 17 போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் அவர்களில் பலர் குர்திஷ் அல்லது லோர் இன சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்று குர்திஷ் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவ் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அன்று, மேற்கு இரான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
நாடு முழுவதும் 13 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், மிக மோசமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாள் இதுவென ஐ.எச்.ஆர் (IHR) தெரிவித்துள்ளது.
“ஒடுக்குமுறையின் அளவு ஒவ்வொரு நாளும் வன்முறையாகவும் விரிவாகவும் மாறி வருகிறது என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன,” என்று அந்த அமைப்பின் இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகாதம் கூறினார்.
புதன்கிழமை இரவு வடக்கு மாகாணமான கிலானில் உள்ள கோஷ்க்-இ பிஜார் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஹெங்காவ் தெரிவித்துள்ளது.
புரட்சிகரப் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்புடைய இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ், புதன்கிழமை அன்று மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு நகரமான லோர்டேகனில் “கலவரக்காரர்கள்” குழுவில் இருந்த ஆயுதம் ஏந்திய நபர்களால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மூன்றாவது நபர் தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள மலார்ட் பகுதியில் “போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் போது” குத்திக் கொல்லப்பட்டதாகவும் அது கூறியது.
வியாழக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய அதிகாரிகள் போராட்டக்காரர்களைக் கொன்றால் ராணுவ ரீதியாகத் தலையிடுவேன் என்ற தனது மிரட்டலை மீண்டும் வலியுறுத்தினார்.
“கலவரங்களின் போது அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அங்கு நிறைய கலவரங்கள் ஏற்படும். அவர்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம் என்பதை நான் அவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்,” என்று அவர் ஹக் ஹெவிட் ஷோவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், இரானிய பொருளாதாரம் “மிகவும் இக்கட்டான நிலையில்” இருப்பதாகக் கூறினார்.
வியாழக்கிழமை மின்னசோட்டாவின் எகனாமிக் கிளப்பில் பேசுகையில் அவர் மேலும் கூறுகையில், “[அதிபர் டிரம்ப்] போராட்டக்காரர்களுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதை விரும்பவில்லை. இது ஒரு பதற்றமான தருணம்”என்றார்.
முன்னதாக, இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், அமைதியான போராட்டங்களைக் கையாளும் போது பாதுகாப்புப் படையினர் “மிகுந்த நிதானத்தை” கடைபிடிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
“எந்தவொரு வன்முறை அல்லது வலுக்கட்டாயமான நடத்தையையும் தவிர்க்க வேண்டும்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இரானில் உச்ச அதிகாரம் கொண்ட காமனெயி, சனிக்கிழமை அன்று அதிகாரிகள் “போராட்டக்காரர்களுடன் பேச வேண்டும்” என்றும், ஆனால் “கலவரக்காரர்கள் தங்களுக்குரிய இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
டிசம்பர் 28 அன்று, இரானிய நாணயமான ரியால், வெளிச்சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக மீண்டும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததால் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்த, தெஹ்ரான் கடைக்காரர்கள் வீதியில் இறங்கியபோது இந்தப் போராட்டங்கள் தொடங்கின.
இரானின் அணுசக்தித் திட்டம் மீதான பொருளாதாரத் தடைகள், அரசின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் பலவீனமடைந்துள்ள பொருளாதாரத்தை அழுத்துவதால், கடந்த ஆண்டில் ரியால் அதன் மிகக் குறைந்த அளவை எட்டியது மற்றும் பணவீக்கம் 40% ஆக உயர்ந்தது.
விரைவில் பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டங்களில் இணைந்தனர், அதனைத் தொடர்ந்து அவை மற்ற நகரங்களுக்கும் பரவத் தொடங்கின.
மதகுருமார்களின் ஆட்சியை விமர்சிக்கும் முழக்கங்களை கூட்டத்தினர் அடிக்கடி எழுப்புவதைக் கேட்க முடிந்தது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஒரு ஆர்வலர் மூலம் பிபிசிக்கு அனுப்பிய செய்திகளில், டெஹ்ரானைச் சேர்ந்த ஒரு பெண், விரக்தியே இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் என்று கூறினார்.
“நாங்கள் ஒரு நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம்,” என்று கூறிய அவர், “இங்கிருந்து வெளியேற சிறகுகளோ அல்லது இங்கே எனது இலக்குகளைத் தொடர நம்பிக்கையோ இல்லாமல் காற்றில் தொங்கிக்கொண்டிருப்பது போல் உணர்கிறேன். இங்கே வாழ்க்கை தாங்க முடியாததாகிவிட்டது”என்று கூறியிருந்தார்.
மற்றொருவர் கூறுகையில், தனது கனவுகள் மதகுருமார்களின் ஆட்சியால் “திருடப்பட்டுவிட்டன” என்பதற்காகத் தான் போராடுவதாகவும், “இன்னும் எங்களிடம் கத்துவதற்குக் குரல் இருக்கிறது, அவர்களின் முகத்தில் குத்துவதற்கு ஒரு கை இருக்கிறது” என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் கூறினார்.

மேற்கு நகரமான இலாமில் உள்ள ஒரு பெண் கூறுகையில், ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்பது குறித்து தான் அறிந்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எனது தோழியின் தந்தை உளவுத்துறையில் நன்கு அறியப்பட்ட ஒரு நபர். எனது தோழியும் அவரது மூன்று சகோதரிகளும், தங்கள் தந்தைக்குத் தெரியாமல் இதில் இணைகிறார்கள்” என்று கூறினார்.
தனது ஹிஜாபை முறையாக அணியவில்லை என்று கூறி அறநெறி காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்ட குர்திஷ் இனப் பெண் மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து, 2022ல் வெடித்த எழுச்சிக்குப் பிறகு நடந்த மிகவும் பரவலான போராட்டங்கள் இவை.
மனித உரிமை அமைப்புகளின் படி, பல மாதங்களாக நடந்த அந்தப் போராட்டங்களில் 550-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 20,000 பேர் பாதுகாப்புப் படையினரால் காவலில் வைக்கப்பட்டனர்.
இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு மிகப்பெரிய போராட்டங்கள் 2009-ல் நடந்தன.
சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான இரானியர்கள் முக்கிய நகரங்களின் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்த ஒடுக்குமுறையில் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு