படக்குறிப்பு, அமெரிக்க மீட்பு நடவடிக்கையின்போது அழிக்கப்பட்டதாக இரான் கூறும் விமானத்தின் பாகங்கள், இரானிய அரசுத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன.கட்டுரை தகவல்
இரானின் தொலைதூரப் பகுதியில் தனது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன விமானப் படையை சேர்ந்த ஒருவரை, அமெரிக்க ராணுவம் வியப்பூட்டும் நடவடிக்கையின் மூலம் மீட்டுத்துள்ளது.
சரியான சூழல்கள் இன்னும் தெளிவாக இல்லை; எனினும், எதிரிப் பிரதேசத்தில் இருந்து அவரை மீட்கும் அந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானதாக அமைந்திருந்தது.
இந்தத் திட்டத்தில், சிஐஏ-வுடன் (CIA) இணைந்து, சிறப்புப் படைகளும், அமெரிக்கப் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில், “இரானின் மலைப்பகுதிகளுக்கு நடுவே, படுகாயமடைந்தவரும், உண்மையிலேயே வீரமிக்கவருமான எஃப்-15 விமானப் பணிக்குழு உறுப்பினர்/அதிகாரியை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம்.” என பதிவிட்டிருந்தார்.
ஆயுதங்களை கையாளும் அதிகாரி மற்றும் விமானியுடன் சென்ற எஃப்-15 ரக போர் விமானம், தெற்கு இரானின் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த விமானிக்கு சோதனையான காலகட்டம் தொடங்கியது.
கடந்த 20 ஆண்டுகளில் எதிரித் தாக்குதலால் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.
எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) விமானத்தில் இருந்த அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த இருவராலும் விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற முடிந்தது; விமானி அதே நாளில் மீட்கப்பட்டார். இரண்டாவது வீரர் காணாமல் போனார்.
அமெரிக்கா அவரைக் கண்டுபிடிப்பதற்காக துரிதமாக செயல்படத் தொடங்கியது.
இரான் அவரை உயிருடன் பிடிக்க விரும்புவதை தெளிவுபடுத்தியதுடன், 50,000 பவுண்டுகள் (66,100 டாலர்கள்) சன்மானத்தையும் அறிவித்தது.
பிபிசியால் சரிபார்க்கப்படாத, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள், ஆயுதம் ஏந்திய பொதுமக்கள் அவரைத் தேடுவதைக் காட்டுவது போல் தோன்றின.
அந்த அதிகாரி தரையில் விழுந்த பிறகு, தன்னைத் தற்காத்துக்கொள்ள அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே இருந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்காகப் பயிற்சி பெற்றிருப்பார். அதில் தனது எச்சரிக்கை சிக்னலை (beacon) இயக்குவது, உயரமான இடத்திற்குச் செல்வது, தன்னை மறைத்துக்கொள்வது மற்றும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவது ஆகியவை அடங்கியிருக்கும்.
படக்குறிப்பு, வெள்ளிக்கிழமையன்று தெற்கு இரானின் வான்பரப்பில், ஒரு அமெரிக்க விமானமும் ஹெலிகாப்டர்களும் பறப்பதை ஒரு காணொளி காட்டுவதாகத் தெரிகிறது.
அமெரிக்க ஊடகச் செய்திகளின்படி, அவர் ஒரு மலை இடுக்கில் தன்னை மறைத்துக் கொண்டதுடன், இரான் தனது சிக்னலை பின்தொடரக்கூடும் என்று அஞ்சி, தனது கருவியின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
அதன் பிறகு, அவர் தன்னை மீட்பவர்கள் வருவதற்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, மீட்பு நடவடிக்கையில் சிஐஏ (CIA) முக்கியப் பங்கு வகித்தது.
அந்த விமானியின் துல்லியமான இருப்பிடத்தை ஒரு மலை இடுக்கில் கண்டறிந்து, அந்தத் தகவலை பாதுகாப்பு துறைக்கு தெரியப்படுத்தியது அமெரிக்க உளவு முகமைதான்.
மீட்பு நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த அமெரிக்க அதிகாரிகளால், அவரது இருப்பிடம் “24 மணி நேரமும்” கண்காணிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
டிரம்ப் மேலும் கூறுகையில், “அந்த அதிகாரி, ஒவ்வொரு மணி நேரமும் மேலும் மேலும் நெருங்கி வந்துகொண்டிருந்த எங்கள் எதிரிகளால் பின்தொடரப்பட்டார்,” என்று கூறினார்.
அமெரிக்கப் படைகள் இரண்டாவது விமானியை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டதாக இரானுக்குள் செய்தியைப் பரப்பி, சிஐஏ ஒரு ஏமாற்று நடவடிக்கையையும் முன்னெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அவரை மீட்டுவர அமெரிக்க ராணுவம் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கொண்ட டஜன்கணக்கான விமானங்களை, அனுப்பியது” என்று அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனித்து விடப்பட்ட அந்த அதிகாரியை நோக்கி அமெரிக்கச் சிறப்புப் படைகள் முன்னேறிச் சென்ற போது, இரானியப் படைகளை அவரது இருப்பிடத்திலிருந்து விலக்கி வைப்பதற்காகக் குண்டுகளும் ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புக் குழுவினரை வெளியேற்றுவதற்காக அனுப்பப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள், இரானுக்குள் அமைந்திருந்த ஒரு தொலைதூரத் தளத்திலிருந்து புறப்பட இயலாமல் போனதாகவும், அவை எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்குழுவினரை மீட்டு வருவதற்காக, சிறப்புப் படையினர் கூடுதலாக மூன்று விமானங்கள் மூலம் அங்கு சென்றதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்தன.
பிபிசி வெரிஃபையால் உறுதி செய்யப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும், மத்திய இரானின் மலைப்பாங்கான பகுதியில் இஸ்ஃபஹான் நகரத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் புகைந்து கொண்டிருந்த விமானச் சிதைவுகளைக் காட்டுவதாகத் தெரிந்தன.
இரானிய ராணுவம், இந்த நடவடிக்கையின் போது இரண்டு அமெரிக்க C-130 ராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தது;
“தெற்கு இஸ்ஃபஹானில் உள்ள ஒரு கைவிடப்பட்ட விமான தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘ஏமாற்று மற்றும் தப்பித்தல்’ நோக்கம் கொண்ட ஒரு பணி… முழுமையாக முறியடிக்கப்பட்டது” என்றும் கூறியது.
காணாமல் போன விமானப்படையை சேர்ந்த 2-வது நபரை தேடிக் கொண்டிருந்தபோது, இஸ்ஃபஹான் நகருக்கு மேலே பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் (IRGC) சேர்ந்த வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக இரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இஸ்ஃபஹான் அருகே நடந்ததாக கூறப்படும் நிகழ்வுகள் குறித்த இந்த இரு தகவல்களையும் பிபிசி-யால் உறுதிப்படுத்த முடியவில்லை.
பட மூலாதாரம், Reuters
அமெரிக்க நேரப்படி நள்ளிரவுக்கு முன்னதாகவே மீட்புப் பணி நிறைவடைந்ததாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக குவைத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த அதிகாரி “பலத்த காயமடைந்துள்ளார்” என்றாலும், “அவர் முழுமையாக குணமடைந்துவிடுவார்” என்று டிரம்ப் கூறினார்.
மீட்கப்பட்ட போது அவர் இருந்த துல்லியமான இடம் குறித்தோ, அல்லது அவரது அடையாளம் குறித்தோ அமெரிக்க அதிகாரிகள் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை.
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், ஓய்வுபெற்ற கடற்படை தலைவருமான வில்லியம் ஃபாலன், மீட்புப் பணியின் வெற்றிக்கு “அதன் நேரம்” அநேகமாகச் சாதகமாக அமைந்திருக்கக் கூடும் என்று பிபிசியிடம் தெரிவித்தார். “இருள் எங்கள் வீரர்களுக்குச் சாதகமானது; ஏனெனில், இரவு நேரங்களில் செயல்படுவதில் அவர்கள் நன்கு பழகியவர்கள்.”
எதிரி பிரதேசத்திற்கு மேலே பறக்கும்போது, ”தாக்குதலுக்கு உள்ளாகும் நபராக இருக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று ஃபாலன் கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை 00:00 EDT (04:00 GMT) மணிக்குச் சற்று முன்னதாக, இரண்டாவது வீரர் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
“அமெரிக்கப் வீரர் ஒருவரையும் ஒருபோதும் கைவிடமாட்டோம்!” என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை தோல்வியடைந்ததாக இரான் உறுதிபடக் கூறியுள்ளது. இரானின் முதன்மை ராணுவக் கட்டளையகத்தின் செய்தித் தொடர்பாளரான இப்ராஹிம் ஸோல்ஃபாகரி, ஒரு காணொளியில், அமெரிக்க ராணுவ விமானங்கள் பல அவசரமாகத் தரையிறங்க நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
“தாமே தொடங்கிவைத்த போர் மற்றும் ஆக்கிரமிப்பு எனும் சகதியில் சிக்கிக்கொண்ட அந்த அறியாமை கொண்ட அதிபர்… எந்தவொரு ஆக்கிரமிப்பும், தரைவழி நடவடிக்கையும் அல்லது ஊடுருவலும்… தீர்க்கமான மற்றும் அவமானகரமான தோல்வியை எதிர்கொள்ளும் என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டார்,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக, அந்த விமானி மீட்கப்பட்டுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததிலிருந்து, “தோல்வியடைந்த” நடவடிக்கை குறித்த இந்த வாதம் இரானிய அதிகாரிகளாலும், அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இரானிய எல்லைக்குள் ஒரு எஃப்-15இ போர் விமானம் இழக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து சில மீட்பு விமானங்கள் அழிக்கப்பட்டதையும், அமெரிக்க வான்படையின் வரம்புகளைச் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளாகச் சில அமெரிக்கப் பகுப்பாய்வாளர்கள் விவரித்துள்ளனர்.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி, பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ்-ஸிடம் பேசுகையில், “அந்தப் பணியின்போது நாங்கள் உண்மையில் ஓரிரு விமானங்களை இழந்தோம்” என்று தெரிவித்தார்; இருப்பினும், இதுபோன்ற ஒரு சூழலில் அத்தகைய இழப்பை “எந்த நாளிலும்” ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
“ஒரு விமானத்தை உருவாக்க ஓராண்டு ஆகும்; ஆனால், யாரையும் கைவிடாத ஒரு ராணுவ மரபை உருவாக்க 200 ஆண்டுகள் ஆகும்,” என்று அவர் சிபிஎஸ்-இன் ஃபேஸ் தி நேஷன் (Face The Nation) நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? – பகிர இங்கே கிளிக் செய்யவும்