பட மூலாதாரம், MAHSA / Middle East Images / AFP via Getty Images
பல நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சியங்களின் கூற்றின்படி இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள், இஸ்லாமிய குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் பார்த்திராத கட்டத்தை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தெருக்களில் மக்கள் போராடும் நிலையில், போராட்டக்காரர்களை அதிகாரிகள் ஒடுக்க நினைத்தால் “மேலும் பெருத்த சேதம் ஏற்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். “அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கும் தயாராக இருப்பதாக” டிரம்ப் தெரிவித்தார்.
அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் அதற்கு ஆதரவானவர்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்போம் என இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த போராட்டம் முந்தைய போராட்டங்களைவிட எவ்வாறு மாறுபட்டது? முந்தைய போராட்டங்களில் இரான் அரசின் எதிர்வினை எப்படி இருந்தது?
பரவலான போராட்டம்

இந்தாண்டு நடைபெறும் போராட்டங்கள் அதன் அளவிலும் பரவலிலும் முன்னெப்போதும் இல்லாதது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமூகவியல் ஆராய்ச்சியாளர் எல்லி கோர்சன்ட்ஃபர் கூறுகையில், பேரணிகள் இரானின் முக்கிய நகரங்களில் நடைபெற்றாலும், “பலரும் அதன் பெயர்களை கூட முன்பு கேட்டிராத ” சிறு நகரங்களுக்கும் பரவியுள்ளதாக கூறுகிறார்கள்.
இரான் முன்பும் போராட்டங்களை கண்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு பொதுவாக பசுமை இயக்கம் என அழைக்கப்பட்ட போராட்டங்களை, தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நடுத்தர வகுப்பினர் நடத்தினர். அது பெரியளவிலான போராட்டமாக இருந்தாலும், முக்கிய நகரங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மற்ற பெரிய போராட்டங்கள் ஏழ்மையான பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தன.
மிக சமீபத்தில், 2022-ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் இருந்த 22 வயதான மாசா அமினி என்ற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. ஹிஜாபை அவர் அணிந்திருந்த விதம் காரணமாக இரானின் கலாசார காவல்துறை அவரை கைது செய்தது.
இந்த போராட்டங்கள் வேகமாக அதிகரித்து, அமினி உயிரிழந்த ஆறு நாட்களுக்குப் பிறகு அதன் உச்சக்கட்டதை எட்டியதாக பலதரப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதற்கு முரணாக தற்போது நடைபெறும் பரவலான மற்றும் விரிவான போராட்டங்கள், டிசம்பர் 28-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து சீராக அதிகரித்ததாக தோன்றுகிறது.
பட மூலாதாரம், Ameer Alhalbi/Getty Images
‘சர்வாதிகாரிக்கு முடிவு’
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களை போலவே தற்போதைய எழுச்சியும், குறிப்பிட்ட குறைகளை தீர்க்கக் கோரி ஆரம்பித்து, விரைவிலேயே ஆழமான அமைப்பு ரீதியான மாற்றத்தைக் கோரும் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
“2022-ஆம் ஆண்டு போராட்டம் பெண்கள் சார்ந்த பிரச்னைக்காக தொடங்கியது. ஆனால், மற்ற குறைபாடுகளும் அதில் பிரதிபலித்தன… 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டங்கள் பொருளாதார ரீதியிலான பிரச்னைகளுக்காக தொடங்கியதாக தோன்றினாலும், மிகமிக குறுகிய காலகட்டத்திலேயே பல பொதுவான குறைகளையும் எதிரொலித்தன,” என கோர்சன்ட்ஃபர் கூறுகிறார்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இரானின் நாணயமான ரியாலின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற-இறக்கங்களால் டெஹ்ரானின் முக்கிய பகுதியில் உள்ள சந்தை வணிகர்கள் டிசம்பர் மாத இறுதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஏழ்மையான பகுதிகளுக்கும் போராட்டங்கள் பரவ ஆரம்பித்தன. 2022-ஆம் ஆண்டைப் போலவே இலாம் (Ilam) மற்றும் லோரெஸ்டான் மாகாணங்கள் போராட்டங்களின் மையமாக மாறின.
நடுத்தர வகுப்பினர் உட்பட மில்லியன்கணக்கான இரானிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணிகள் டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்றன.
“சர்வாதிகாரிக்கு முடிவுகட்ட வேண்டும்!” (Death to the dictator) என்ற முழக்கங்களுடன் மக்கள் தெருக்களில் பேரணியாக சென்றனர். இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரின் தலைமையிலான அரசை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ரெஸா பஹ்லவி
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள் தலைமை இல்லாமல் நடந்ததாக தோன்றுகிறது. அவை விரைவிலேயே முடிவுக்கு வந்தன. ஆனால், அதற்கு முரணாக, தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு கடத்தப்பட்ட ரெஸா பஹ்லவி போன்ற தலைவர்கள் உள்ளனர். 1979-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஷா-வின் மகனான ரெஸா பஹ்லவி, தொலைவிலிருந்து இந்த பேரணிகளை வடிவமைக்க அல்லது தலைமை தாங்க முயற்சிக்கிறார். இந்த போராட்டங்கள் ஏன் இவ்வளவு காலம் நீடிக்கின்றன என்பதை இது ஓரளவுக்கு விளக்கலாம்.
தற்போதைய போராட்டங்களில் பஹ்லவி மற்றும் அவரது தந்தையை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருமாறு அழைப்பு விடுக்கும் குரல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக கேட்கின்றன.
அமெரிக்காவில் நாடு கடத்தப்பட்டிருந்த போது பஹ்லவி தன்னைத் தானே இரானின் ஷா-வாக (மன்னருக்குரிய பட்டம்) அறிவித்திருந்தார்.
தெருக்களில் இறங்கி முழக்கமிடுமாறு அவர் மக்களுக்கு விடுத்த அழைப்பு பலராலும் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இரானில் சமூக ஊடகங்களில் உள்ள இளைஞர்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்குமாறு ஒருவரையொருவர் ஊக்குவித்து வருகின்றனர்.
டெஹ்ரான் போன்ற நகரங்களில் சமீபத்திய போராட்டங்களின் அளவை பார்க்கும்போது பஹ்லவியின் அழைப்பு எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்கலாம்.
இதன் விளைவாக, நன்கு அறியப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரின் இருப்பு, தற்போதைய அரசாங்கம் வீழ்ந்தால் ஒரு சாத்தியமான மாற்று வழி உள்ளது என்ற நம்பிக்கையை சில போராட்டக்காரர்களிடையே வலுப்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பஹ்லவிக்கு ஆதரவாகத் தோன்றும் எந்தவொரு செயலும், முடியாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற விருப்பத்தைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை என்று மற்றவர்கள் கூறுகின்றனர். மாறாக, இது மதகுருமார்களின் ஆட்சிக்கு மாற்றாக எந்தவொரு மாற்று வழியையும் தேடும் ஒரு விரக்தியின் வெளிப்பாடாகும்; குறிப்பாக, நாட்டுக்குள் வெளிப்படையான, மதச்சார்பற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இல்லாத நிலையில் இது ஏற்படுகிறது.
டிரம்பின் அச்சுறுத்தல்
பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images
2022-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு போராட்டத்தைப் பிரிக்கும் மற்றொன்று, அமெரிக்கா.
முந்தைய போராட்டங்களை போல அல்லாமல் இந்தாண்டு நடைபெறும் போராட்டம் வெள்ளை மாளிகையின் ஆதரவை பெற்றுள்ளதாக தோன்றுகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இரான் அரசின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார் – இது முன்பு எப்போதும் நடந்திராதது.
அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற இயக்கத்தின்போது, போராட்டக்காரர்கள், “ஒபாமா, ஒபாமா ஒன்று எங்களுடன் இருங்கள் அல்லது அவர்களுடன் இருங்கள்!” என முழக்கமிட்டனர். போராட்டக்காரர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததற்காக ஒபாமா பின்னர் தன் வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

“இரான் எதிரிகளால்” இந்த போராட்டங்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருக்குள்ள சிக்கல் என்னவென்றால், சமீபத்திய ஆண்டுகளில் இருந்ததை விட அவரது நாட்டுக்கு இப்போது கூட்டாளிகள் குறைவாக உள்ளனர்.
இரானிய அதிகாரிகள் முக்கியமான கூட்டாளிகளை இழந்துள்ளனர்: சிரிய அதிபராக இருந்த பஷர் அல்-அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டார். லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையால் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமடைந்துள்ளது.
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
போர் பாரம்பரியம்
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களை போல அல்லாமல், இந்தாண்டு நடைபெற்றுவரும் போராட்டங்கள் இஸ்ரேலுடனான 12 நாள் போர் மற்றும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு விரைவிலேயே வடிவம் பெற்றன.
இந்தச் சம்பவங்கள் மக்களிடையே ஒருவித ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கின என்றும், ஆனால் அரசாங்கம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும் பத்திரிகையாளர் அப்பாஸ் அப்தி நம்புகிறார்.
கடந்த ஆண்டில் ராணுவத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு, இரானியர்களின் பார்வையில் நாட்டின் முக்கிய ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் செல்வாக்கையும் கௌரவத்தையும் சிதைத்துவிட்டது என்று சில வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2022 போராட்டங்களின் உணர்வின் அடிப்படையில், தற்போதைய போராட்டங்களில் ஒரு நீடித்த மாற்றத்தை சமூகவியல் ஆராய்ச்சியாளர் எல்லி கோர்சன்ட்ஃபர் காண்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் இறங்கிய பெண்களிடம் அவர் நேர்காணல் செய்தபோது, அவர்களில் பலர், அடக்குமுறை அரசின் மீதான தங்கள் பயத்தைப் போக்கியதே தங்களின் மிகப்பெரிய சாதனை என்று அவரிடம் தெரிவித்தனர்.
பிபிசி நியூஸ் பெர்சிய மொழி சேவை, பிபிசி குளோபல் ஜர்னலிசம் மற்றும் மத்திய கிழக்கு செய்தியாளரான நெடா சானிஜ் ஆகியோரின் அறிக்கை மற்றும் பகுப்பாய்வுகளுடன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு