உலக அளவில் முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காகத் தான் விதித்துள்ள காலக்கெடுவிற்குள் இரான் ஒரு உடன்படிக்கைக்கு வராவிட்டால், அந்நாட்டை “ஒரே இரவில்” அழித்துவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
எரிசக்தி தடையின்றி செல்வதை உள்ளடக்கிய ஒரு “ஏற்றுக்கொள்ளக்கூடிய” ஒப்பந்தத்திற்காக டிரம்ப் விதித்துள்ள காலக்கெடு, வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (ஜிஎம்டி நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு) ஆகும்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், இரானின் “விவேகமான” தலைவர்கள் “நம்பிக்கையுடன்” பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தான் நம்புவதாகவும், ஆனால் அதன் முடிவு இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாகவும் கூறினார்.
தற்காலிகப் போர் நிறுத்தம் குறித்த திட்டங்களை நிராகரித்துள்ள இரான், அதற்குப் பதிலாக மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவும், தடைகளை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோருடன் இணைந்து டிரம்ப் நடத்திய இந்தச் செய்தியாளர் சந்திப்பு, தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்த இரு வீரர்களை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக மீட்ட சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
டிரம்பின் பெரும்பாலான கருத்துக்கள் அந்த வீரர்களின் மீட்பு நடவடிக்கையை “வீரம்” மிக்கது என்று முன்னிலைப்படுத்திய போதிலும், செவ்வாய்க்கிழமை காலக்கெடுவிற்குள் ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டால், இரானின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என்ற தனது எச்சரிக்கையை அவர் மீண்டும் முன்வைத்தார்.
“ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே இரவில் அழித்துவிட முடியும் . அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம்,” என்று அவர் திங்களன்று கூறினார்.
இரான் “கற்காலத்திற்கு” தள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
“அவர்களுக்குப் பாலங்கள் இருக்காது”, “அவர்களுக்கு மின் உற்பத்தி நிலையங்கள் இருக்காது”என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் கோரிக்கைகளை இரான் முன்னதாக நிராகரித்திருந்த போதிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் தலைமைப் பீடத்திற்கு அடுத்தடுத்த வந்த தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகு, இரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற நம்பிக்கையை டிரம்ப் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
“நாங்கள் அதைக் கண்டறிவோம்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கு அறிந்த பிராந்திய அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, முதலில் போர் நிறுத்தம் ஏற்படாமல் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவம் காரணமாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், தற்போது நிலவிவரும் தகவல் தொடர்புத் தடைக்கு மத்தியில், இரானிய அதிகாரிகளுக்குச் செய்திகளை அனுப்புவதிலும் அங்கிருந்து பெறுவதிலும் உள்ள சிரமங்களால் பேச்சுவார்த்தைகள் சிக்கலாகியுள்ளன என்று தெரிவித்தார்.
“இரானுக்குச் செய்திகளைத் தெரிவிக்கவும், நியாயமான நேரத்திற்குள் பதிலைப் பெறவும் முடிவதில்லை” என்று கூறிய அந்த அதிகாரி, “பதிலைப் பெறுவதற்கான சராசரி நேரம் ஒரு நாள் அல்லது அதற்கு மேலாக இருக்கிறது”என்கிறார்.
பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அரசாங்கத்தின் அடுத்தக்கட்டத் திட்டங்கள் குறித்து டிரம்ப் மிகக் குறைவான விபரங்களையே வழங்கினார்.
தன்னிடம் “சிறந்த திட்டம்” இருப்பதாகவும், ஆனால் அதை ஊடகங்களுக்குத் தெரிவிக்க மாட்டேன் என்றும் மட்டுமே அவர் கூறினார்.
இரானிய உள்கட்டமைப்புகள் மீது திட்டமிட்டுத் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் போர்க்குற்றமாக அமையக்கூடும் என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
“அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் அழிப்பது, ஒரு அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காக பொது மக்களுக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அனைத்தும் முற்றிலும் சட்டவிரோதமானவை” என்று ஒபாமா காலத்துத் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் சட்ட ஆலோசகர் டெஸ் பிரிட்ஜ்மேன், பிபிசியின் அமெரிக்கப் பங்காளியான சிபிஎஸ்-ஸிடம் (CBS) தெரிவித்தார்.
பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images
அன்றைய தினத்தின் முற்பகுதியில், அத்தகைய சாத்தியக்கூறுகள் குறித்துத் தான் “கவலைப்படவில்லை” என்று டிரம்ப் கூறினார்.
இரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தனது நோக்கமாக இல்லாவிட்டாலும், இரானின் மக்கள் “சுதந்திரத்தைப் பெறுவதற்காகத் துயரங்களை அனுபவிக்கத் தயாராக இருப்பார்கள்” என்று அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
நேட்டோ மற்றும் பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளையும் டிரம்ப் மீண்டும் விமர்சித்தார். இந்த மோதலின் போது அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு உதவத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.
“அது நேட்டோ மீது ஒருபோதும் மறையாத ஒரு வடுவாக இருக்கும்” என்று கூறிய அவர், அமெரிக்காவிற்குப் பிரிட்டன் “தேவையில்லை” என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் திங்களன்று வெளியிட்ட தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து இரான் முழுவதும் அமெரிக்கப் படைகள் 13,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன.
படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? – பகிர இங்கே கிளிக் செய்யவும்