பட மூலாதாரம், AHMED FARWAN via Getty Images
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை இரான் குறிவைக்கத் தொடங்கியது.
இரான் தாக்குதலுக்கு இலக்கான அந்த நாடுகளும் வலுவான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இருப்பினும், அந்த நாடுகள் இதுவரை இரான் மீது பதில் தாக்குதல் நடத்தவில்லை.
இரான் ஏவுகணைகளை வீசித் தாக்கும் வளைகுடா நாடுகளில், சௌதி அரேபியா மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவின் வருடாந்திர பாதுகாப்பு பட்ஜெட் 80.30 பில்லியன் டாலராக இருந்தது. அதன் வலுவான ராணுவத் திறன் மற்றும் பெரிய பாதுகாப்பு பட்ஜெட் காரணமாக, சௌதி அரேபியா மத்திய கிழக்கில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
சௌதி அரேபிய ராணுவத்தின் மிகப்பெரிய பலமாக அதன் விமானப்படை கருதப்படுகிறது.
1. சௌதி அரேபியா
பட மூலாதாரம், Sefa Karacan/Anadolu Agency/Getty Images
ராயல் சௌதி விமானப்படை 300-க்கும் மேற்பட்ட எஃப்-15 ஸ்டிரைக் ஈகிள் மற்றும் யூரோஃபைட்டர் டைபூன் உள்ளிட்ட நவீன போர் விமானங்களைக் கொண்டுள்ளது. இது அண்டை நாடுகளை விட அதற்கு வலுவான பலனை அளிக்கிறது.
சௌதி அரேபியா “பீஸ் ஷீல்ட்” என்ற மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பையும் கொண்டுள்ளது. சௌதி அரேபியா ஏவுகணைகள் மற்றும் நவீன ட்ரோன்களையும் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ஆப்ராம்ஸ் டாங்கிகள் மற்றும் அதிநவீன கவச வாகனங்களைக் கொண்ட சௌதி அரேபியாவின் ராணுவமும் வலுவானதாகக் கருதப்படுகிறது.
தனது கடல் வழித்தடங்கள் மற்றும் எரிசக்தி தளங்களைப் பாதுகாப்பதற்காகச் சௌதி அரேபியா தனது கடற்படையையும் பலப்படுத்தி வருகிறது.
இருப்பினும், இவ்வளவு பெரிய பாதுகாப்பு பட்ஜெட் இருந்தபோதிலும், சௌதி அரேபியாவின் ராணுவம் வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. தனது பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சிடமிருந்து அந்நாடு பெறுகிறது.
ஆண்டுதோறும் வெளியாகும் ஃபயர்பவர் ஆய்வின்படி, 2026-ஆம் ஆண்டில் 145 நாடுகளில் சௌதி அரேபியா 25-வது இடத்தில் உள்ளது. அதன் ஃபயர்பவர் குறியீட்டு புள்ளி 0.4473 ஆகும்.
குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் என்பது நாடுகளின் வழக்கமான ராணுவ வலிமையை மதிப்பிடும் தரவு அடிப்படையிலான வருடாந்திர தரவரிசை ஆகும்.
இதில் ராணுவ வலிமை, தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படைத் திறன்கள், தளவாடங்கள் மற்றும் பொருளாதார வளங்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் ஒரு “பவர் இன்டெக்ஸ்” புள்ளிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் குறைவான புள்ளிகள் என்பது வலுவான ராணுவ வலிமையைக் குறிக்கிறது.
குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் வரிசையில் குறைவான புள்ளிகள் பெறுவதே சிறந்தது எனக் கருதப்படுகிறது. தத்துவார்த்த ரீதியாக 0.0000 என்பது மிகச்சிறந்த தரநிலை ஆகும், இருப்பினும் இதுவரை எந்த நாடும் இந்த நிலையை எட்டவில்லை.
அமெரிக்கா 0.0857 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யாவும் சீனாவும் இரண்டாவது இடத்தில் உள்ளன.
இந்தக் குறியீட்டில் இந்தியா நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 14-வது இடத்திலும் உள்ளன.
2. குவைத்
பட மூலாதாரம், YASSER AL-ZAYYAT/AFP via Getty Image
வளைகுடாவின் முக்கிய நாடான குவைத், தனது வலுவான பொருளாதாரம் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளைப் பயன்படுத்தி ஒரு சக்திவாய்ந்த ராணுவத்தை உருவாக்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் குவைத்தின் பாதுகாப்பு பட்ஜெட் 7.79 பில்லியன் டாலராக இருந்தது.
குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் வரிசையில் 1.716 மதிப்பெண்ணுடன் குவைத் 76-வது இடத்தில் உள்ளது.
குவைத்தில் 18 முதல் 35 வயது வரையிலான ஆண்களுக்குக் கட்டாய ராணுவ சேவை நடைமுறையில் உள்ளது.
குவைத் ராணுவம் தோராயமாக 367 போர் டாங்கிகளைக் கொண்டுள்ளது. அதன் விமானப்படை 50 போர் விமானங்கள் உட்பட 131 விமானங்களைக் கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ட்ரோன் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக, குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும், எஃப்ஏ-18 ஹார்னெட் போன்ற போர் விமானங்களைக் கொண்ட விமானப்படையையும் படிப்படியாக நவீனமயமாக்கி வருகிறது.
வியூக ரீதியாக, குவைத் மேற்கத்திய நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் வலுவான பாதுகாப்பு கூட்டாண்மைகளைப் பேணி வருகிறது. இவை பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
3. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
பட மூலாதாரம், KARIM SAHIB/AFP via Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய கிழக்கிலேயே மிகவும் நவீனமான மற்றும் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
இரான் துபை மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது, இது கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. துபை பல இரானிய ஏவுகணைகளை இடைமறித்துள்ளது, ஆனால் இதுவரை எந்தவொரு பதிலடித் தாக்குதலையும் அது நடத்தவில்லை.
துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் திறனையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வருடாந்திர பாதுகாப்பு பட்ஜெட் 22.75 பில்லியன் டாலராக இருந்தது.
இது குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் வரிசையில் 1.0188 புள்ளிகளுடன் 54-வது இடத்தில் உள்ளது.
பாதுகாப்பு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு தற்காப்பு ராணுவ சக்தியாக இல்லாமல், ஒரு செயல்திறன் மிக்க ராணுவ சக்தியாகவும் மாறியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமன் மற்றும் லிபியாவில் ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதுடன், ஐ.எஸ்-க்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளித்துள்ளது.
விமானப்படை தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய பலமாகும், இது எஃப்-16 மற்றும் மிராஜ் 2000 போன்ற போர் விமானங்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்ரியாட் மற்றும் தாட் போன்ற மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு கூட்டாண்மைகளைப் பேணி வருகிறது.
4. பஹ்ரைன்
பட மூலாதாரம், Getty Images
வளைகுடா பிராந்தியத்தில் தனது வியூக முக்கியத்துவம் காரணமாக, பஹ்ரைன் ராணுவம் தன்னை வலுப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளது.
பஹ்ரைனின் ராணுவம் ‘பஹ்ரைன் பாதுகாப்புப் படை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படை நவீனமானதாகவும், தொழில்நுட்ப ரீதியாக வலுவானதாகவும் கருதப்படுகிறது.
பஹ்ரைன் விமானப்படை அதன் வலிமையான பிரிவாகக் கருதப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் குளோபல் ஃபயர்பவர் தரவரிசையில் இது 75-வது இடத்தில் உள்ளது.
எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானங்களை, குறிப்பாக நவீன பிளாக் 70 வகையை அறிமுகப்படுத்திய முதல் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. இது அதன் ராணுவத்தை மேலும் பலப்படுத்துகிறது.
கடல்சார் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, ராயல் பஹ்ரைன் கடற்படை அமெரிக்கத் தயாரிப்பான ஆலிவர் ஹசார்ட்-பெர்ரி ரகப் போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது.
அதன் ராணுவம் எம்60ஏ3 டாங்கிகளைக் கொண்டுள்ளது.
பஹ்ரைனின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 1.75 பில்லியன் டாலராக உள்ளது. பிராந்திய பதற்றங்கள் காரணமாக பாதுகாப்புச் செலவினத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இருப்பினும், ராணுவத்தின் ஒரு பெரிய பகுதி வெளிநாட்டு ஒப்பந்த வீரர்களைச் சார்ந்து இருப்பது அதன் ஒரு முக்கிய பலவீனமாகக் கருதப்படுகிறது.
மூலோபாய ரீதியாக, பஹ்ரைனின் மிகப்பெரிய பலம் அதன் சர்வதேச ஒத்துழைப்பில் உள்ளது. இந்த நாடு அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் தாயகமாக உள்ளது. இதன் இருப்பு, பஹ்ரைனை மத்திய கிழக்கில் ஒரு முக்கிய அமெரிக்க ராணுவத் தளமாக மாற்றுகிறது.
5. கத்தார்
பட மூலாதாரம், KARIM JAAFAR/AFP via Getty Images
வளைகுடா பிராந்தியத்தில் சிறிய, ஆனால் வளமான நாடான கத்தார், குறைந்த மக்கள்தொகையைக் கொண்டிருந்த போதிலும் தனது நவீன ராணுவ வலிமையின் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது.
கத்தார் உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.
இரான் சமீபத்தில் கத்தாரின் முக்கிய எரிவாயு நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது. கத்தாரின் ராணுவம் அளவில் சிறியதாக இருக்கலாம், ஆனால் அது குறிப்பிடத்தக்க தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டுள்ளது.
குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் வரிசையில் 1.409 புள்ளிகளுடன் கத்தார் 71-வது இடத்தில் உள்ளது.
2024-ஆம் ஆண்டில் அதன் பாதுகாப்பு பட்ஜெட் 15.41 பில்லியன் டாலராக இருந்தது.
கத்தாரின் விமானப்படை அதன் முக்கிய பலமாகக் கருதப்படுகிறது. கத்தார் யூரோஃபைட்டர் டைபூன் மற்றும் ரஃபேல் போன்ற நவீன போர் விமானங்களைக் கொண்டுள்ளது.
கத்தார் கடற்படை சிறியதாக இருந்தாலும், அதன் கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிக்கும் அதிநவீன ரோந்து கப்பல்களைக் கொண்டுள்ளது.
இருப்பினும், கத்தாரின் மிகப்பெரிய சவால் அதன் குறைந்த உள்ளூர் மக்கள் தொகையாகும். அந்நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டினர், சுமார் 3,00,000 பேர் மட்டுமே குடிமக்கள்.
இது ராணுவத்தையும் பாதிக்கிறது, கத்தார் தனது ராணுவத் தேவைகளுக்காக வெளிநாட்டு நிபுணர்களையும் ஒப்பந்த வீரர்களையும் பெரிதும் சார்ந்துள்ளது.
வியூக ரீதியாக, கத்தாரின் ராணுவம் தாக்குதல் பணிக்காக அல்லாமல், தற்காப்புப் பணிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் எல்லைகள் மற்றும் எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

கூடுதலாக, கத்தாரின் பாதுகாப்பு உத்தியில் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாருக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் அல் உதெய்த் தளம் மீது தாக்குதல் நடத்தியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு