• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரும்புவது என்ன? – 5 கேள்வி பதில்கள்

Byadmin

Apr 17, 2025


காணொளிக் குறிப்பு, இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரும்புவது என்ன? – 5 கேள்வி பதில்கள்

இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரும்புவது என்ன? – 5 கேள்வி பதில்கள்

இரானின் சர்ச்சைக்குரிய அணு திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும், இரானும் வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன.

திங்கட்கிழமை இதைப்பற்றி பேசிய டிரம்ப் இரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது எனவும், கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால் அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டு இரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிய டிரம்ப் தற்போது மீண்டும் அந்நாட்டுடன் அணு திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைவது ஏன்? இரான் – அமெரிக்கா உடனான இந்த ஒப்பந்தத்தால் இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன?

இந்த காணொளியில் பார்க்கலாம்.

இரான் தனது அணு திட்டங்கள் மக்கள் பயன்பாட்டு நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறுகிறது. அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று அந்நாடு கூறுகிறது. ஆனால் பல்வேறு நாடுகளும், உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையும் இதை ஏற்கவில்லை.

2002ஆம் ஆண்டு இரானில் ரகசிய அணுசக்தி நிலையங்கள் இருப்பது கண்டறியப்பட்டபோது, இரானின் நோக்கங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்தன. இது இந்த ஒப்பந்தத்தை முறிய வழிவகுத்தது.

இந்த ஒப்பந்தம் உலக நாடுகள் மருத்துவம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற ராணுவம் அல்லாத தேவைக்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்காது.

இரானின் அணுசக்தி திட்டம் எவ்வாறு மேம்பட்டது?

2018ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை டொனால்ட் டிரம்ப் விலக்கிக் கொண்டார். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது.

அமெரிக்காவை பழிவாங்கும் விதமாகவே இரான் முக்கிய வாக்குறுதிகளை மீறியது.

அதன்படி, யுரேனியத்தை செறிவூட்ட ஆயிரக்கணக்கான மேம்பட்ட சென்ட்ரிஃபூக்ஸ் எனப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரான் நிறுவியது. இவை கூட்டு விரிவான செயல் திட்டத்தால் தடை செய்யப்பட்டவை.

அணு ஆயுதங்களுக்கு 90% தூய்மைப்படுத்தப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. கூட்டு விரிவான செயல் திட்டத்தின்படி, இரான் 3.67% வரை தூய்மைப்படுத்தப்பட்ட 300 கிலோ யுரேனியத்தை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி முகமை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இரானிடம் சுமார் 275 கிலோகிராம் யுரேனியம் இருந்ததாகவும், அதனை 60% தூய்மை அளவுக்கு செறிவூட்டியுள்ளதாகவும் தெரிவித்தது. இரான் யுரேனியத்தை மேலும் செறிவூட்டினால், கோட்பாட்டளவில் இது சுமார் அரை டஜன் ஆயுதங்களை உருவாக்க போதுமானதாக இருக்கும் என்றும் அந்த முகமை கூறியது.

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏன் வெளியேறியது?

2010 ஆம் ஆண்டு முதல் இரான் தனது அணு திட்டத்தை அணுகுண்டை உருவாக்கும் நோக்கத்துக்காக பயன்படுத்துவதாக சந்தேகித்ததால், அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதனால், இரானின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

2015 ஆம் ஆண்டில் இரான் மற்றும் உலகின் அப்போதைய ஆறு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகியவை பல ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டு விரிவான செயல் திட்டம் எனப்படும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன.

இதன் மூலம், சர்வதேச அணுசக்தி முகமைக்கு இரானின் அனைத்து அணு நிலையங்களை அணுகவும், சந்தேகத்துக்குரிய இடங்களை ஆய்வு செய்யவும் அனுமதி வழங்கியது.

இதற்கு மாறக, இந்த நாடுகள் இரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்கின. இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்குப் பின் காலவதியாகும் வகையில் திட்டமிடப்பட்டது.

2018-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் உள்ளிட்ட பிற விஷயங்களை இந்த ஒப்பந்தம் கருத்தில் கொள்ளவில்லை என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, புதிய மற்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த இரானை கட்டாயப்படுத்தும் “அதிகபட்ச அழுத்த” பிரசாரத்தின் ஒரு பகுதியாக பொருளாதார தடைகளை இரான் மீது டிரம்ப் மீண்டும் விதித்தார்.

இரானுடனான ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரும்புவது என்ன?

கூட்டு விரிவான செயல் திட்டத்தை விட “சிறந்த” ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாக டிரம்ப் நீண்ட காலமாக கூறி வந்தார். இருப்பினும் இதுவரை இரான் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்துள்ளது.

இரான் ஒரு புதிய ஒப்பந்தத்துக்கு உடன்படியவில்லை என்றால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார்.

இரானின் அணு திட்டத்தை “முழுமையாகக் கலைக்க” டிரம்ப் விரும்புவதாக அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் “நேரடி பேச்சுவார்த்தைகள்” நடைபெறும் என்று கூறியிருந்தாலும், இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஓமனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகவே இருக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை டிரம்ப் முதலில் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தால் இஸ்ரேலுக்கு உள்ள அச்சுறுத்தல் என்ன?

டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறினார்.

இஸ்ரேலின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், இரானின் முழுமையான சரணடைதல் இல்லாமல் டிரம்ப் ஒரு சமரசத்தை ஏற்றுக்கொள்வார் என்பதுதான்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேல், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத அணு ஆயுதத்துடன் கூடிய இரான், தங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என இஸ்ரேல் நம்புகிறது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இரானை தாக்க முடியுமா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இரானின் அணு உட்கட்டமைப்பைத் தாக்கும் ராணுவத் திறன்களை வைத்துள்ளன. ஆனால் அத்தகைய நடவடிக்கை சிக்கலானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும், நிச்சயமற்ற விளைவைக் கொண்டிருக்கும்.

இரான் தன்னை தற்காத்துக் கொள்ள, அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கவும், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவும் செய்யலாம்.

இதனை சமாளிக்க, அமெரிக்கா வளைகுடாவில் உள்ள தனது தளங்களையும், விமானம் தாங்கும் போர்க் கப்பல்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் கத்தார் போன்ற நாடுகளில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் இருந்தாலும், அந்நாடுகள் பதிலடி தாக்குதல்களுக்கு பயந்து இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உதவ வராமல் போகலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin