பட மூலாதாரம், Getty Images
அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி காமனேயிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் எழுதியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அதில், அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்காக இரானின் அதிஉயர் தலைவரை அவர் அழைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இரான் பேச்சுவார்த்தையில் இணையவில்லை என்றால், இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அத்தகைய கடிதம் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் தூதரகம் கூறியுள்ளது.
“இரானுடன் பேச்சுவார்த்தையின் மூலம் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நான் விரும்புகிறேன். இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது,” என்று வெள்ளிக்கிழமையன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னர், இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள டிரம்ப் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார்.
இது மட்டுமின்றி அமெரிக்கா, இரானின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பிற துறைகள் மீது கடுமையான தடைகளை விதித்தது. மேலும், பிற நாடுகளுடன் இரான் வணிகம் செய்வதையும் கடினமாக்க முயன்றது.
முன்னதாக டிரம்ப் நிர்வாகத்தின் உத்தி, இரானுக்கு ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுப்பதாக இருந்தது. தனது இரண்டாவது பதவிக் காலத்திலும், டிரம்ப் இதே உத்தியைத் தொடர்கின்றார். அதேநேரத்தில், அவர் மென்மையான அணுகுமுறையின் அறிகுறிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?
இரானின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதாக, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டிரம்ப் தொடர்ச்சியாகப் பலமுறை கூறி வந்துள்ளார். இருப்பினும் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இதில் ஓர் ஒப்பந்தத்தை எட்ட முயல்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், பிப்ரவரி 5ஆம் தேதியன்று, டிரம்ப் இரான் மீது “அதிகபட்ச அழுத்தத்தை” தரும் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, “நான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்புகிறேன். இதில் அனைவரும் உடன்படுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ராணுவ பலத்தின் மூலம் கிடைக்கும் வெற்றிக்கு நிகரான வெற்றியாக இந்த ஒப்பந்தம் இருக்கும்,” என்று ஃபாக்ஸ் நியூஸிடம் அதிபர் டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
“அதற்கான நேரம் கூடி வருகிறது. ஏதாவது ஒரு வகையில் ஏதோவொன்று நடக்கப் போகிறது. நீங்கள் சமரசம் செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன், நானும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். ஏனென்றால் நாம் ராணுவ பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
“இரானுடன் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள நான் விரும்புகிறேன். அவர்கள் இறக்கக்கூடாது, யாருமே உயிரிழக்கக் கூடாது” என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் “நாம் ஓர் உடன்பாட்டை எட்டினால், இஸ்ரேல் அவர்கள் மீது குண்டு வீசாது. இஸ்ரேல் என்ன செய்ய நினைக்கிறதோ அதைச் செய்யாது என்று நான் நம்புகிறேன். அது இரானுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தரும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் டிரம்ப் கூறினார்
இவற்றோடு, இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்கத் திட்டமிட்டுள்ளன என்ற கருத்தை டிரம்ப் மறுத்துள்ளார்.
டிரம்புக்கு இரானின் பதில் என்ன?
பட மூலாதாரம், Getty Images
காமனேயி மற்றும் இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், இருவரும் அமெரிக்கா உடனான எந்தவோர் ஒப்பந்த்ததையும் முன்பே நிராகரித்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள், 2025 பிப்ரவரி 7ஆம் தேதியன்று, ‘புத்திசாலித்தனமாகவும் மரியாதைக்கு உரியதாகவும் இல்லை’ என்று அயதுல்லா அலி காமனேயி கூறினார்.
டிரம்பின் சமீபத்திய கூற்றுக்குப் பிறகு, “அதிகபட்சமாக அழுத்தம் தரும் கொள்கையைத் தொடரும் வரை அமெரிக்காவுடன் நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்த மாட்டோம்” என்று ஜெட்டாவில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கூட்டத்தின் ஒரு பகுதியாக இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.
இருப்பினும், மூன்று ஐரோப்பிய நாடுகள் தவிர, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்றும் அவர் கூறினார்.
இரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-வின் கூற்றுப்படி, “இரானின் அணுசக்தித் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் அழிக்க முடியாது. நாங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளோம். அதோடு, மனதில் இருக்கும் தொழில்நுட்பத்தை குண்டுகளால் அழித்துவிட முடியாது,” என்று அப்பாஸ் அரக்சி தெரிவித்துளார்.
அதைத் தொடர்ந்து, இரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மத்திய கிழக்கு முழுவதும் பரந்த மோதலுக்கு வழிவகுக்கும் என்று அரக்சி எச்சரித்துள்ளார். முன்னதாக மார்ச் 2ஆம் தேதி, இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஆனால் அதிஉயர் தலைவரின் எதிர்ப்புக்குப் பிறகு, அவர் அவரது நிபந்தனைகளின்படி செயல்படுவதாகவும் கூறினார்.
மேலும் “பேச்சுவார்த்தை அவசியம் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் அதிஉயர் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளபடி, இந்தப் பாதையில் நாங்கள் உறுதியாக இருப்போம்” என்று பெஷேஷ்கியன் தெரிவித்துளார்.
அடுத்தபடியாக, “அதிகபட்ச அழுத்தத்தை உபயோகிப்பது சட்டத்தை மீறும் நடவடிக்கை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாக்கி வெள்ளிக்கிழமையன்று கூறியுள்ளார்.
“இரானிய மக்களுக்கு எதிரான அழுத்தம் மற்றும் மிரட்டல் கொள்கை பல்வேறு நேரங்களில் தோல்வியடைந்துள்ளது. மேலும் ஏற்கெனவே சோதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சோதித்துப் பார்ப்பது மிகப்பெரிய தவறு. அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் முந்தைய முடிவில் இருந்து மாறுபட்ட முடிவை எட்டப் போவதில்லை,” என்றும் இஸ்மாயில் கூறினார்.
அமெரிக்க அதிபர்கள் இதுவரை எத்தனை கடிதங்களை அனுப்பியுள்ளனர்?
பட மூலாதாரம், Getty Images
கடந்த காலங்களில் இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தைகளும் ரகசிய கடிதப் போக்குவரத்தும் நடந்துள்ளன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இரானிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சில கடிதப் போக்குவரத்துகள் குறித்துப் பொதுவெளியில் தெரிய வந்துள்ளது.
மே 2009இல் பராக் ஒபாமா, அயதுல்லா காமனேயிக்கு முதல் கடிதத்தை எழுதினார். இதை காமனேயி ஜூன் 10, 2009 அன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குறிப்பிட்டார். பின்னர் இரானின் அதிஉயர் தலைவர் ஒபாமாவுக்கு பதிலளித்தார்.
அதன் பிறகு செப்டம்பர் 2009இல், காமனேயிக்கு பராக் ஒபாமாவிடம் இருந்து இரண்டாவது கடிதம் வந்தது. தபனாக் வலைதளத்தின்படி, கடிதத்தின் விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் இதன் மூலம் அமெரிக்க அதிபர் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார் என்று அறியப்படுகிறது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே “சிறந்த ஒத்துழைப்பை” ஒபாமா நாடுவதாக வாஷிங்டன் டைம்ஸ் குறிப்பிட்டது. அதையடுத்து, ஒபாமா மூன்றாவது கடிதத்தை 2011இல் எழுதினார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியான அந்தக் கடிதத்தைப் பற்றி இரானின் நாடாளுமன்றப் பிரதிநிதி அலி மோட்டாஹரி கூறுகையில், அதன் முதல் பகுதி அச்சுறுத்தும் வகையிலும், இரண்டாம் பகுதி நட்புறவுகளைப் பற்றியும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 2014இல், ஒபாமா நான்காவது கடிதத்தை எழுதினார். வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் கூற்றுப்படி, பராக் ஒபாமா இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “பொது நலன்களை” குறிப்பிட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அழைக்கப்படும் அமைப்புக்கு எதிரான அமெரிக்க தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
முன்னதாக பிப்ரவரி 2014இல், பராக் ஒபாமாவுக்கு அயதுல்லா காமனேயி ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அதில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. ஜூன் 13, 2019 அன்று டிரம்ப் காமனேயிக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை வழங்க முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தானே இரானுக்கு சென்றார். இந்தச் சந்திப்பிலும்கூட காமனேயி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டார்.
இரானின் அணுசக்தி திட்டத்தின் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
இரானின் அணுசக்தி திட்டத்தைக் கண்காணிக்கும் அனைத்து அமைப்புகளும், இந்த இஸ்லாமிய நாடு அணுகுண்டைப் பெறுவதற்கான முயற்சியில் சில படிகளையே தொட்டுள்ளதாகக் கூறுகின்றன.
மேலும், அதிகம் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை அதிகரிக்கும் இரானின் முடிவு “ஆழ்ந்த கவலை” அளிப்பதாக கடந்த ஆண்டின் இறுதியில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு பிபிசியிடம் கூறியது.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி கூறுகையில், “இரான் 60 சதவீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சேமித்து வருகிறது. இது அணு ஆயுதத்திற்குத் தேவையான தூய்மையைவிட சற்றுக் குறைவு” என்றார்.
க்ரோஸியின் கூற்றுப்படி, “இது இனி ஒரு ரகசியமல்ல. சில இரானிய தலைவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்க அழைப்பு விடுக்கின்றனர்” என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இரானின் அணுமின் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்த அவர், இரானின் பழிவாங்கும் நடவடிக்கையின் ஆபத்து மற்றும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அது “மிகவும் தீவிரமானது” என்றும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஃபோர்டோ அணுமின் நிலையத்தால் இப்போது ஒவ்வொரு மாதமும் 60 சதவீத தூய்மையுடன் 34 கிலோ UF6-ஐ (யுரேனியம்) உற்பத்தி செய்ய முடியும். முன்பு அதன் கொள்ளளவு 4.7 கிலோ மட்டுமே இருந்ததாக அறியப்படுகின்றது.
தொடர்ந்து பேசிய க்ரோஸி, “2025ஆம் ஆண்டின் இரான், 2015ஆம் ஆண்டில் இருந்த இரானைவிட மிகவும் வித்தியாசமானது. அவர்கள் விரும்பினால், மிக விரைவான வேகத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க முடியும்” என்றும் கூறினார்.
முன்னதாகத் தனது உயர்மட்ட தளபதி கொல்லப்பட்ட பிறகு, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரான் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியது. அதன் பிறகு, இஸ்ரேல் இரானின் அணு உலைகளைத் தாக்கப் போவதாகக் கூறத் தொடங்கியது.
ஆனால் அக்டோபர் 1, 2024 அன்று, இஸ்ரேல் இரானின் வரையறுக்கப்பட்ட ராணுவ தளங்களைத் தாக்கியது. ஆனால், இந்தத் தாக்குதல் இரானின் அணுமின் நிலையங்கள் மீது நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இரானின் திட்டம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
இரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-வின் கூற்றுப்படி, டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, இரான் சாத்தியமுள்ள எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முன்தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளதாக இரானிய அதிகாரிகள் கூறுகின்றனர் என அறியப்படுகின்றது.
இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் பாக்கியின் கூற்றுப்படி, அண்டை அரபு நாடுகளுடனான உறவில் உள்ள இரானின் பதற்றங்களைக் குறைப்பதில், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ எனும் கொள்கை பெரிதும் உதவியுள்ளது.
மார்ச் 2023இல் பரம எதிரிகளான இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே சீனாவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட சமரசமும், அக்டோபர் 2023இல் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலும் இரு நாடுகளையும் மிகவும் நெருக்கமாகியுள்ளன.
சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ஒப்பந்த செயல்முறையை முன்னேற்றுவதற்கான ஓர் உத்தியை இரான் பின்பற்றி வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் அமெரிக்காவிடம் இருந்து விலகியே உள்ளது.
அதைத் தொடர்ந்து, இரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் மத்தியஸ்த பங்கு குறித்து சமீபத்திய வாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சௌதி அரேபியாவில் நடைபெற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் உடனான சந்திப்பிற்குப் பிறகு, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இரானுக்கு பயணம் செய்த பின்னர், இந்த ஊகம் மேலும் வலுப்பெற்றது.
இதற்கிடையில், ரஷ்யப் பிரதிநிதியுடனான சந்திப்பிற்குப் பிறகு, “இரான் தனது அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தாது. ரஷ்யா, சீனாவுடன் ஒருங்கிணைந்து அணுசக்தி விவகாரத்தில் முன்னேறும்” என்றார் அப்பாஸ் அரக்சி.
சமீபத்தில் ரியாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்பு தொடர்புக்கான வழியை நிறுவ ஒப்புக் கொண்டன என்பதை சர்வதேச அமைப்புகளுக்கான ரஷ்யாவின் உயர்மட்ட பிரதிநிதி மிகேல் உல்யனோவ் உறுதிப்படுத்தினார்.
மேலும் இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான “உறுதியான திட்டங்கள்” எதுவும் இல்லை என்றும் வியன்னாவில் பிபிசி பாரசீகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு ஏற்கெனவே அதிக நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய உல்யனோவ், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கலாம், ஆனால் இந்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம்” என்றும் கூறினார்.
மேலும், “இரானின் ஏவுகணை மற்றும் பிராந்திய பிரச்னைகள் புதிய பேச்சுவார்த்தையில் சேர்க்கப்படக் கூடாது. ஏனெனில் அது பேச்சுவார்த்தையைச் சிக்கலாக்கும் மற்றும் முடிவில்லாததாக மாற்றும்” என்றும் அவர் கூறினார்.
இரானுக்கும் ஆறு அணுசக்தி நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA) 2015ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
ஜோ பைடன் அதிபராக இருந்தபோது, இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐரோப்பிய மத்தியஸ்தத்துடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பல சுற்றுகளாக நடத்தப்பட்டன, ஆனால் இறுதியில் தோல்வியடைந்தன. அதன் பிறகு, இரான் அணுசக்தி ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.