• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

இரான்: அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் நழுவவிடக் கூடாத ஒரு வாய்ப்பாக இதை கருதுவது ஏன்?

Byadmin

Mar 1, 2026


இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தாக்குதலுக்கு பிறகு தெஹ்ரான் நகரத்தின் மேல் புகை எழுகிறது.

இரானுடன் ஒரு புதிய போரில் குதிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ள முடிவு, கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் அபாயகரமான தருணத்தை உருவாக்கியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேல் “தற்காப்பு” (pre-emptive) என்ற சொல்லைப் பயன்படுத்தியது.

“தற்காப்பு நடவடிக்கை” என்ற சொல் குறிப்பது போல, இது ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு அளிக்கப்பட்ட பதில் அல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறாக, இது ஒரு “விருப்பத்தின் பேரில் தொடுக்கப்பட்ட போர்”.

இரானின் இஸ்லாமிய ஆட்சி பலவீனமாக உள்ளதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கணித்துள்ளன; அதாவது அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி, ஆண்டின் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறையின் விளைவுகள் மற்றும் கடந்த கோடை காலப் போரினால் மோசமாக சேதமடைந்துள்ள பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாகக் கருதுகின்றன. இது நழுவவிடக்கூடாத ஒரு வாய்ப்பு என்பதே அவர்களின் முடிவாகத் தெரிகிறது.

இது தடுமாறிக் கொண்டிருக்கும் சர்வதேச சட்ட அமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு அடியாகும்.

தங்களது அறிக்கைகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இரான் தங்கள் நாடுகளுக்கு ஆபத்தானது என்று கூறினர். டிரம்ப் இதுவொரு உலகளாவிய ஆபத்து என்றும் குறிப்பிட்டார்.

By admin