பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBride
அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம்.
பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது.
அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியிருந்தது. இதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். டமாஸ்கஸ் தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக இரான் தெரிவித்தது.
இரான் இந்த நடவடிக்கைக்கு “உண்மையான வாக்குறுதி” என்று பெயரிட்டதுடன், ‘இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல் மக்களைக் கொல்லும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக பதிலடி கொடுக்கும் தனது திறனை நிரூபிப்பதற்கான சான்று’ என்று எச்சரித்தது.
சில இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலில் உள்ள தங்கள் இலக்குகளைத் தாக்குவதில் வெற்றி பெற்றன, ஆனால் ராணுவக் கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக பார்க்கப்படவில்லை.
இரானின் தாக்குதல்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமே தடுக்கவில்லை. அன்றைய இரவில் அமெரிக்க விமானிகளும் இஸ்ரேலிய விமானிகளுடன் இணைந்து ஒரு முக்கிய பங்காற்றினர்.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் (US Central command) கூற்றுப்படி, அமெரிக்கப் படைகள் அன்றிரவு 80 க்கும் மேற்பட்ட இரானிய டிரோன்களையும் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்தன.
அமெரிக்க விமானப்படை அதன் யூடியூப் சேனலில் ‘டேஞ்சரஸ் கேம்’ (ஆபத்தான விளையாட்டு) என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இது எஃப் -15 இ ஸ்ட்ரைக் ஈகிள் விமானிகளின் கண்ணோட்டத்தில் அந்த இரவின் கதையைச் சொல்கிறது.
அந்த ஆவணப்படம் அமெரிக்க ராணுவத்தின் கண்ணோட்டத்தில் அந்த இரவில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கிறது. 36 நிமிட படம் சில பிரசார அம்சங்களையும் கொண்டுள்ளது.
எனினும், இந்த ஆவணப்படம் இரான் தாக்குதலின் ராணுவ மற்றும் உளவியல் விளைவுகள் மற்றும் அன்றிரவு அமெரிக்கப் படைகள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் சிரமங்களையும் விவரிக்கிறது.
ஜோர்டானில் ‘டவர் 22’ மீது தாக்குதல்
பட மூலாதாரம், Getty Images
ஏப்ரல் 13, 2024 அன்று இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.
2023-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் காஸாவில் ஒரு போரைத் தூண்டியதுடன், மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும் பதற்றங்களை அதிகரித்தது.
ஹெஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது. யேமனின் ஹூத்திகளும் ஏவுகணைகளை வீசினர். பின்னர், ஏப்ரல் 1, 2024 அன்று, டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரி முகமது ரேசா ஜாஹிதி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இரான் இதை அதன் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கண்டித்ததுடன், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது.
2024 ஜனவரியில், ஜோர்டானில் உள்ள ‘டவர் 22’ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
“டவர் 22 மீதான தாக்குதலுக்குப் பிறகு, எங்களுக்கு இது தனிப்பட்ட (விவகாரம்) ஆகிவிட்டது” என்று 494 வது ஃபைட்டர் ஸ்குவாட்ரனின் மேஜர் பெஞ்சமின் ‘டேஞ்சரஸ் கேம்’ ஆவணப்படத்தில் கூறுகிறார். “அமெரிக்க வீரர்களின் மரணம் எங்களுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது.” என்கிறார்.
“எங்கள் தோழர்களைப் பாதுகாக்க நாங்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்” என்றும் அவர் கூறினார்.
இரானிய டிரோன்கள் ஒரு ‘பிரச்னையாக’ மாறியபோது
பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. William Rio Rosado
இரானின் தாக்குதலில் ஷாஹித்-136 டிரோன் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த செலவில் தயாரித்து விடக் கூடிய அந்த டிரோன்கள் குறைவான உயரத்தில் பறக்கக் கூடியவை, மணிக்கு சுமார் 180 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியவை.
அந்த ஆவணப்படத்தில், ஆயுத நிபுணர் என்று விவரிக்கப்படும் முன்னாள் கடற்படை வீரர் அலெக்ஸ் ஹோலிங்ஸ், “ஷாஹித் டிரோன்களின் மிகப்பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால், அவை மலிவானவை மற்றும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும்” என்று கூறுகிறார்.
இந்த டிரோன்களால் எதிரி பாதுகாப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல் செயல்பட முடியும் என்று கூறிய அலெக்ஸ் அவை எதிரிக்கு ஒரு ‘பிரச்னையாக’ மாறக்கூடும் என்றும் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்த டிரோன்கள் எதிரி ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மின்னல் வேகத்தில் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆவணப்படத்தில் உள்ள நேர்காணல்களின்படி, இதுபோன்ற நேரங்களில் ஆயுத கட்டமைப்பு அதிகாரியின் பங்கு முக்கியமானது. விமானங்களில் ஒன்றில் இருந்த கேப்டன் செனிக், இரானிய டிரோன்களை இனம் காண தரையில் இருந்த அமைப்பை திறம்பட பயன்படுத்தினார்.
இது ஓர் அசாதாரண செயல்முறை என்றாலும், இந்த சூழ்நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் விமானிகள் மன அழுத்தத்தைக் குறைக்க தங்கள் வானொலி உரையாடல்களை மட்டுப்படுத்தினர். அந்த இரவு, ஒரே ஒரு வாக்கியம் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது:
“அங்கு டிரோன் உள்ளது.”
பட மூலாதாரம், Reuters
“டேஞ்சரஸ் கேம்” ஆவணப்படம் ஒரு சாதாரண இரவின் காட்சிகளுடன் தொடங்குகிறது.
நேர்காணல் செய்யப்பட்டவர்களின் கூற்றுப்படி, ஏப்ரல் 13, 2024 இரவு மற்ற இரவுகளைப் போலவே இருந்தது. காலை பணி முடிந்து இரவு பணிக்கானவர்கள் தங்கள் பொறுப்புகளை ஏற்றனர். போர் விமானங்கள் தயார் நிலையில் இருந்தன.
அது ஓர் அமைதியான சனிக்கிழமை இரவு. விமானிகள் இரவு உணவை முடித்துவிட்டு வராண்டாவில் அமர்ந்திருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மோதலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.
‘மீண்டும் அப்படி செய்யாதே’ – விமான தளபதி எச்சரிக்கை
முதலில், “லைன் ஒன்று” என்று ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது, பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானிகளின் பெயர்கள் “லைன் இரண்டில்” அழைக்கப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில், அமைதியான விமான தளம் அவசர நிலைக்கு சென்றது.
ஒரு எஃப் -15 ( F-15) விமானியான மேஜர் பெஞ்சமின், அவரது முந்தைய மதிப்பீடுகள் தவறானவை என்று கூறுகிறார்:
“நாங்கள் கற்பனை செய்த அச்சுறுத்தல் உண்மையான தாக்குதலில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே.”
விரைவில் எஃப் -15 களின் முதல் தொகுதி இருளில் பறக்கத் தொடங்கியது. ரேடார் திரைகளில் விரைவில் இரானிய டிரோன்கள் அடுத்தடுத்து தென்பட்டன.
இதற்குப் பிறகு, ஏவுகணைகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘ஃபோகஸ் த்ரீ’ (Focus Three) அறிவிக்கப்பட்டது, அதாவது ஏவுகணை ஏவும் ரேடார்கள் செயல்பாட்டில் இருந்தன.
“நான் ஏவுகணையை இலக்கு நோக்கி செலுத்தினேன்” என்று மேஜர் பெஞ்சமின் கூறுகிறார். “அது வானத்தை ஒளிரச் செய்தது. எனது இரவு நேர கேமரா திடீரென்று ஒளிர்ந்தது.”
“அது ஓர் ஆச்சரியமான காட்சி, ஏனென்றால் நான் ஓர் உண்மையான சூழ்நிலையில் ஒரு AMRAAM (வான் இலக்குகளை தாக்கக் கூடியது) ஏவுகணையை பயன்படுத்தியது இதுவே முதல் முறை” என்கிறார் அவர்.
மற்றொரு விமானி , “இந்த பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. ஒரு கட்டத்தில், நான் தரையில் இருந்து 1,000 அடி உயரத்தில் மட்டுமே பறந்தேன். பறப்பதற்கான பாதுகாப்பான உயரம் 4,000 அடியாக இருந்தது” என்று ஆவணப்படத்தில் கூறுகிறார்.
ஏவுகணைகள் தீர்ந்த போது, தங்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் லேசர் வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் இரானிய ஷாஹித் டிரோன்களை குறிவைக்க முயன்றார் என்று இந்த விமானிகள் கூறுகின்றனர்.
“நாங்கள் இரானிய டிரோன் மீது ஒரு வெடிகுண்டை வீசி லேசர் மூலம் வழிநடத்த முயற்சித்தோம். முதலில், அது வேலை செய்தது போல் தோன்றியது; ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அடுத்த கணம், நாங்கள் மீண்டும் டிரோனைப் பார்த்தோம்.” என்கின்றனர்.
“விமான தளபதி உடனடியாக எங்களுக்கு வானொலி மூலம் , ‘மீண்டும் அதைச் செய்யாதீர்கள்’ என்று எச்சரித்தார்.
‘என்னால் 13 வரை மட்டுமே எண்ண முடிந்தது’
விமானிகள் தங்கள் கடைசி ஏவுகணைகளை ஏவியபோது, விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தளத்திற்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, மோதலின் மற்றொரு அம்சத்தை விமானிகள் கண்டனர் – இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானத்தில் பார்த்தனர்.
கிழக்கு திசையில், “வானம் ஆரஞ்சு நிற ஒளியில் பிரகாசித்தது. நான் உடனடியாக ஏவுகணைகளை எண்ணத் தொடங்கினேன். ஏவுகணைகள் மிக வேகமாக வந்து கொண்டிருந்ததால், 13 ஏவுகணைகளுக்கு பிறகு நான் எண்ணுவதை நிறுத்த வேண்டியிருந்தது.” என்று ஒரு விமானி அந்த ஆவணப்படத்தில் விவரிக்கிறார்.
இந்த ஏவுகணைகள் வானிலேயே மிக உயரத்தில் அழிக்கப்பட்டன. அந்த காட்சிகள் விமானிகளுக்கு பயங்கரமானதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தன.
வானத்தில் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்கள் தரையில் விழுந்தன.
‘ஃபார்முலா ஒன் பந்தயம் போன்ற சூழல்’
பட மூலாதாரம், Reuters
அந்த நேரத்தில், விமானிகளின் தளத்தில் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டது, அதாவது அனைவரும் பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டும் என்று அர்த்தம்.
ஆனால், ‘வூடூ’ என்ற விமான தளபதி வானொலி மூலம் “சிவப்பு எச்சரிக்கை என்பது விமானங்களில் ஏவுகணைகளை நிறுவி தயார் நிலையில் வைத்து, பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவது” என்று அறிவித்தார்.
ஆவணப்படத்தில், பைலட் இந்த சூழ்நிலையை ‘ஃபார்முலா ஒன் பந்தயம்’ போன்று இருந்தது என்று விவரிக்கிறார்.
அந்த நேரத்தில், தொழில்நுட்பக் குழு விமானத்திற்கு எரிபொருளை நிரப்பியது, ஏவுகணைகளை பொருத்தியது, அசாதாரண சூழலுக்கு நடுவே இயந்திரங்களை அக்குழு ஆய்வு செய்தது.
“அந்த இரவு தான் நான் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை முதல் முறையாக பார்த்தேன்” என்று குழு அதிகாரி ஒருவர் கூறினார்.
“இந்த முழு செயல்முறையும் வெறும் 32 நிமிடங்களில் முடிக்கப்பட்டது, வழக்கமாக விமானத்திற்கு எரிபொருள் நிரப்பவே இவ்வளவு நேரம் ஆகும்” என்று அவர் கூறினார்.
இந்த ஆவணப்படம் விமானிகள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தளத்திற்குத் திரும்புவதை காட்டுகிறது. ஒரு விமானி “கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த பதிலும் இல்லை, அவர்களை வழிநடத்த யாரும் இல்லை” என்று கூறினார்.
பின்னர் அவரும் அவரது சக விமானிகளும் அனுமதி பெறாமல் தங்கள் சொந்த பொறுப்பில் ஓடுபாதையில் தரையிறங்கினர். அந்த நேரத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு குரல் , “தாக்குதலுக்கு இன்னும் ஒரு நிமிடம் உள்ளது. நாம் பேச முடியாது.” என்று கூறியது.
இதற்குப் பிறகு திடீரென்று அமைதி நிலவியது.
அந்த விமானி, “இது நான் தயாராக இல்லாத ஒரு சூழல். நான் தாக்குதல் நடத்த தயாராக இருந்தேன், ஆனால் ஏற்கனவே தாக்குதலுக்குள்ளான ஒரு தளத்திற்கு, விமானத்தில் குறைவான எரிபொருளுடன் வர தயாராக இல்லை” என்றார்.
பின்னர் ஆபத்து தவிர்க்கப்பட்டு, விமானங்கள் தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கின. விமானிகள் வெளியே வந்தபோது, அவர்களின் மொபைல் போன்கள் குடும்பத்தினர் அனுப்பிய செய்திகளால் நிரப்பப்பட்டிருந்தன.
அந்த நேரத்தில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் “இரான் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது” என்று வெளிவந்தன.
‘டேஞ்சரஸ் கேம்’ -ன் இறுதியில், ஒரு விமானி , “எங்களிடம் இருந்த எட்டு ஏவுகணைகளில், ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதை ஏவ முடியவில்லை, அது எங்கள் தவறு அல்ல” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு